வருடத்திற்கு இரு பருவகால இதழ்களாக வெளியாகிறது கல்குதிரை சிற்றிதழ். தீவிர இலக்கிய வாசகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பையும் இலக்கிய உரையாடலையும் உருவாக்குவதில் கல்குதிரை இதழுக்கு தனி இடமுண்டு. எந்த மாதத்தில் வெளியாகிறதோ அதற்கேற்றாற்போல் வேனிற்கால இதழ், கார்கால இதழ் என பெயர் தாங்கி வெளியிடப்படுகிறது.
சிற்றிதழை வெளியிடுவதில் ஒரு கடும் உழைப்பு தேவையாயுள்ளது. அதற்கான முழு அர்ப்பணிப்பையும் கொண்ட இதழாக கல்குதிரை திகழ்கிறது. தமிழ் இலக்கியச்சூழலில் மொழிபெயர்ப்பில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் கல்குதிரைக்கு முக்கிய இடமுண்டு. இவை மட்டுமல்லாது பல படைப்பாளர்களையும் தமிழ்ச்சூழலுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் நீட்சியாக கல்குதிரையின் 29வது இதழ் வெளியாகியுள்ளது. எவ்வித கட்டுப்பாடுமின்றி முழு சுதந்திரத்துடன் காத்திரமான படைப்புகளை தாங்கி வருகிறது. செஸ்லா மிலோஷ் கவிதைகள், ராபர்ட்டோ பொலோனோ முதல் நாவல் என அயல்மொழி இலக்கியங்களின் சிறப்பான மொழிபெயர்ப்புகள் இவை போக கவிதை குறித்த கட்டுரைகள், சிறுகதைகள் என்று தீவிர புனைவிலக்கியத்தின் சான்றாக அச்சிடப்பட்டுள்ளது.
என்றைக்கும் சிற்றிதழ்களுக்கான ஒரு பரப்பை நிரப்புவதில் கல்குதிரை தன் பணியை செம்மையாக செய்கிறது. படைப்பாளர்களின் எண்ணிக்கைக்கும், படைப்புகளின் அளவிற்கும் ஒரு வரைமுறையை கல்குதிரை எப்போதுமே கொண்டிருப்பதில்லை. இதனை மெய்ப்பிப்பது போலவே இந்த கார்கால இதழிலும் இருபதுக்கும் மேற்பட்ட படைப்பாளர்களின் பங்களிப்பு இடம்பெற்றுள்ளது.
தமிழ்க் கவிதை
லக்ஷ்மிமணிவண்ணன்
வெய்யில்
பெருந்தேவி
கீதாசுகுமாரன்
சாகிப்கிரான்
வே.நி.சூர்யா
நக்கீரன்
ஷக்தி
ஜீவன்பென்னி
T.கண்ணன்
S.சுதந்திரவல்லி
பெரியசாமி
வே.பாபு
அதிரூபன்
அனாமிகா
பிறமொழிக் கவிதை
செஸ்லா மிலோஷ்
முதல் நாவல்
ராபர்ட்டோ பொலானோ
பிறமொழிச் சிறுகதை
ஏஞ்சலா கார்டர்
சிமாமண்டா என்கோசி அடிச்சீ
ஆலன் ராப் க்ரியே
சமந்தா ஸ்வெப்லின்
மரியா வர்கஸ் லோஸா
இன்னும் பல தமிழ்ச் சிறுகதைகள், நூல் விமர்சனங்கள் போன்ற பல்வேறு படைப்புகள் இடம்பெற்றுள்ளன.