பதிவு செய்த நாள்

06 ஜூலை 2018
14:39

  


 நேற்றுவரை அதனைக்
கனவிலும் கண்டதில்லை
இன்று நேரில் பார்க்க நேர்ந்தது
ஆச்சர்ய சந்திப்பு
கொஞ்சம் அருவருப்பு

பார்த்தவுடன்
முகமன் கூறி கைகொடுத்தது
நாகரிகம் கருதி பதில் மரியாதை
செலுத்தினேன்
என்னை நன்கு அறிந்திருந்த
அதற்கு என் அந்தரங்கங்களும் அத்துப்படி

எவ்வளவு முயன்றும் மறைக்கமுடியவில்லை
வியப்பை, பதட்டத்தை, பயத்தை
மேலும் எனக்கு
ஒவ்வொரு முறையும் நாக்குழறும்போதும்
முகம் வியர்க்கும்போதும்
இதயம் படபடக்கையிலும்
நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டதது

அதன் பார்வையத் தவிர்க்கவேண்டி
கண்களை வேறு பக்கம் செலுத்தினேன்
அங்கும் நிலைத்திருந்ததன் பார்வை
நடந்தேறியிருக்கக் கூடாத
நாடகத்தின் அரங்கேற்றமென
கடந்துகொண்டிருந்த கணங்களை
தனதாக்கிக் கொண்டது

குரங்காட்டியின் சொற்களுக்குப் பணியும்
விலங்கெனெ இப்போது நான்
தப்பித்தலின் வழியறியாது
திகைத்துக்கொண்டிருக்கிறேன்
விடைபெறும் நேரமறியாமல்
விடுபட வழியும் இல்லாமல்
இன்னும் எவ்வளவு நேரம்
உறவாட வேண்டியிருக்கும்
இதனுடன்

அப்பிராணியின் பெயரைக்கூட
இதுவரை கேட்கவில்லை
ஒருவேளை
தப்பித்தலுக்கான வழிகளெல்லாம்
அடைபட்டு விடக்கூடும்
முகத்தைப் போலவே
அதன் பெயரும்
என்னுடையதாயிருப்பின்.

         -அதீதன் சுரேன்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)