‘நான் ஏன் தந்தைக்குப் பயப்படுபவராகவே இருக்கிறேன்?’ என்று விளக்கம் சொல்வதில் ஆரம்பிக்கிறது அந்தக் கடிதம். தான் மிகவும் வியக்கும் விரும்பும் தந்தை தன்னைப் பாராட்ட மாட்டாரா என்ற அவரது ஏக்கம் கடிதம் முழுவதும் தொடர்கிறது. தான் எழுதிய கடிதத்தை நேரடியாகத் தந்தையிடம் கொடுக்காமல் நண்பரிடம் கொடுக்க, நண்பரோ அவரது தாயிடம் கொடுத்தார். தாயாரோ கடைசிவரை தந்தையிடம் அந்தக் கடிதத்தைக் கொடுக்கவே இல்லை. யாருக்கு எழுதப்பட்டதோ அவருக்குப் போய்ச் சேராத அந்தக் கடிதம்தான், நவீன மேற்கத்திய இலக்கியத்தில் புதிய பாதை அமைத்தது. 'Letter to my Father' என்கிற புகழ்பெற்ற கடிதத்தை எழுதியவர் ஃப்ரான்ஸ் காஃப்கா.
இவரது தந்தை ஒரு வணிகர். வேலை நாட்களில் தந்தையும் தாயும் வீட்டில் இருந்ததில்லை; வேலையாட்களிடமே வளர்ந்தார். இதனால் தந்தையுடனான உறவு அவருக்கு மகிழ்ச்சி தரவில்லை. காஃப்காவின் தந்தைக்கு இலக்கியத்தின் மீது வெறுப்பு இருந்ததால், அவரது படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கவில்லை. எழுதக் கூடாது என்று தடையும் விதித்தார்.
ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே, தன் படைப்பாற்றலை வெளிப்படுத்தினார் காஃப்கா. எழுத்துப் பணிக்கு இடைஞ்சலாக இருந்ததால், வேலையையும் ராஜினாமா செய்து முழுநேர எழுத்தாளராக மாறினார். தந்தை மீதிருந்த விரக்தி அவரது எழுத்துகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தனிமனிதர்களின் துயரங்களை, மெட்டாமார்ஃபோசிஸ் (Metamorphosis), தி டிரையல் (The Trial) போன்ற புதினங்களில் எழுதினார். காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோதும் தொடர்ந்து எழுதினார். இவரது படைப்புகள் தத்துவவாதிகளை அதிகம் ஈர்த்தன. ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளை எழுதி இருந்தாலும், இறப்புக்குப் பின்னரே உலகம் முழுக்க அறியப்பட்டார்.
‘தான் எழுதிய எல்லா நூல்களையும் தீயிட்டு எரித்துவிட வேண்டும்’ என்று நண்பரிடம் கூறியது மட்டுமன்றி, உயிலும் எழுதி வைத்தார். அவரது ஆசை நிறைவேறி இருந்தால், காஃப்கா நம்மிடமிருந்து காணாமலே போயிருப்பார்.
சில முக்கியமான நூல்கள்
In the penal colony
The castle
A hunger artist
The complete stories
Amerika
Letters to Milena
A country doctor
நன்றி : பட்டம் மாணவர் இதழ்