பதிவு செய்த நாள்

07 ஜூலை 2018
14:05

 1. சிலப்பதிகாரம், தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று. எதனால்?

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் இருக்க வேண்டும். ஒப்பில்லாத தலைவன் அல்லது தலைவியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும். அப்படி எழுதப்படும் நூல்களைப் பெருங்காப்பியம் என்பர். இந்த நான்கில் சிலவற்றை மட்டும் கொண்டிருக்கும் நூல்கள் சிறுகாப்பியம் ஆகும்.அவ்விதத்தில் தமிழில் ஐந்து சிறந்த பெருங்காப்பியங்கள் போற்றப்படுகின்றன: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி. இந்நூல் கண்ணகியை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.

2. இந்நூலுக்குச் சிலப்பதிகாரம் என்ற பெயர் எப்படி அமைந்தது?

சிலம்பு + அதிகாரம் => சிலப்பதிகாரம். பெண்கள் காலில் அணியும் சிலம்பு என்ற நகை இந்நூலில் முக்கியப் பங்கு வகிப்பதால் இப்பெயர் அமைந்தது.

வியப்பான விஷயம், மற்ற பெருங்காப்பியங்களின் பெயரிலும் ஒரு நகை உள்ளது: மேகலை (இடுப்பில் அணியும் நகை), மணி, வளை(யல்), குண்டலம்!

3. இதனைக் 'குடிமக்கள் காப்பியம்' என்றழைப்பது ஏன்?

காப்பியங்கள் அரசர்கள் அல்லது இறைவனுடைய புகழைப் பாடும். அவ்வாறன்றிக் கோவலன், கண்ணகி என்ற குடிமக்களைத் தலைவன், தலைவியாகக் கொண்டு, இன்னும் பல குடிமக்களை முதன்மைக் கதைமாந்தர்களாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் என்பதால், இது 'குடிமக்கள் காப்பியம்' எனப்படுகிறது.

4. சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் உண்மையில் துறவியா?

இவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். செங்குட்டுவனுக்குத் தம்பி. ஒரு சோதிடர் நாடாளும் தகுதி அண்ணனுக்கு இல்லை. தம்பி இளங்கோவுக்குத்தான்

(இளம்+கோ) உள்ளது என்று கூறினார். அதை ஏற்க மறுத்து தன் அண்ணன் செங்குட்டுவன்தான் நாட்டை ஆளும் தகுதியுடையவர் என்பதை நிரூபிக்க, இவர் துறவியானதாக ஒரு கதை உண்டு. துறவியான பிறகு இளங்கோவடிகள் என்னும் பெயர் பெற்றார். கண்ணகியின் கதையைக் கேள்விப்பட்டு நெகிழ்ந்தார், அதனைப் பெருங்காப்பியமாக எழுதினார்.

5. சிலப்பதிகாரம் செய்யுட்களால் ஆனதா? இசைப்பாடல்களைக் கொண்டதா? உரைநடையாக எழுதப்பட்டதா?

மூன்றும்தான். இதனை 'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' என்பார்கள்.

6. சிலப்பதிகாரம் எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளது?

இக்கதை நிகழும் மூன்று நகரங்களின் பெயர்களே, இதனை பெரும்பிரிவுகளாக அமைத்துள்ளன. புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம். இம்மூன்று பிரிவுகளில் முப்பது காதைகளாக இந்நூல் அமைந்திருக்கிறது.

7. மதுரை தெரியும், புகார், வஞ்சி நகரங்கள் எங்கே இருக்கின்றன?

புகார் என்பது, 'பூம்புகார்', அல்லது 'காவிரிப்பூம்பட்டினம்' என்ற நகரின் சுருக்கம். அது இப்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. வஞ்சி என்பது, அன்றைய சேரர்களின் தலைநகரம். இதனைக் 'கருவூர்' என்றும் அழைத்தார்கள். இந்நகரம் இப்போது 'கொடுங்ஙலூர்'என்னும் சிறு கிராமமாக உள்ளதாக அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிடுகிறார்.

8. இந்நூலில் மூவேந்தர்களும் இடம்பெற்றிருப்பது எவ்வாறு?

கோவலனும் கண்ணகியும் பிறந்து, மணந்து, வாழ்ந்தது சோழ நாட்டில்; பிழைக்கச்சென்றது பாண்டிய நாட்டில். அங்கே கோவலன் மறைந்தபின் கண்ணகி தெய்வமாவது சேர நாட்டில், அந்நாட்டை அப்போது ஆட்சி செய்த சேரன் செங்குட்டுவன்தான் கண்ணகிக்குக் கோவிலெடுத்தான்!

- என். சொக்கன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)