என் மூதாதையர்களின் கிராமத்தில்
ஒருவர் எனை கட்டியணைக்கிறார்
ஒருவர் எனை ஓநாயின் கண்களால் பார்க்கிறார்
ஒருவர் தன் தொப்பியை எடுக்கிறார்
அதனால் அவரை என்னால் நன்றாக பார்க்க முடிகிறது
அவர்களில் ஒருவர் கேட்கிறார்
உனக்கு தெரியுமா நான் யாரென்று
முன் தெரிந்திராத ஆடவரும் மகளிரும்
என் ஞாபகத்தில்
புதைக்கப்பட்ட
சிறுவர் சிறுமிகளின் பெயர்களை எடுக்கிறார்கள்
மேலும் அவர்களில் ஒருவரிடம் நான் கேட்கிறேன்
மதிப்பிற்குரிய ஐயா
ஜார்ஜ் வால் இன்னும் உயிரோடிருக்கிறாரா
வேற்றுலகத்திலிருந்து வரும் குரலில் அவர் பதில் சொல்கிறார்
அது நான்தான்
அவருடைய கன்னத்தை என் கையால் தட்டி விழிகளால் மன்றாடுகிறேன்
சொல்லுங்கள் நான் இன்னமும் உயிரோடிருக்கிறேனா
•••
குவார்ட்ஸ் கூழாங்கல்லின் கனவு
பூமிக்குள்ளிருந்து ஒரு கை தோன்றியது
கூழாங்கல்லை காற்றில் எறிந்தது
எங்கே அந்தக் கூழாங்கல்
அது மீண்டும் பூமிக்கு திரும்பவில்லை
சொர்க்கத்திற்கும் ஏறி போகவில்லை
அந்தக் கூழாங்கல்லுக்கு என்னவாயிற்று
உயரங்கள் அதை விழுங்கிவிட்டனவா
அல்லது பறவையாய் மாறிவிட்டதா
இதோ இருக்கிறது அந்தக் கூழாங்கல்
பிடிவாதத்துடன் அது தனக்குள்ளே தங்கிவிட்டது
சொர்க்கத்தினுள்ளும் அல்ல பூமியினுள்ளும் அல்ல
அது தனக்கே கீழ்படிகிறது
உலகங்கள் பலவற்றிலும் ஒர் உலகம்
•••
வாஸ்கோ போப்பா (1922-1991) செர்பியாவை சேர்ந்த கவிஞர். செர்பிய நாட்டார்மரபும் சர்ரியலிசமும் பிணைந்து விநோதமாக எழுகின்றன இவருடைய கவிதைகள். மேற்கண்ட கவிதைகள் பெங்குவின் வெளியிட்ட Selected poemsல் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.
மொழிபெயர்ப்பு: வே.நி.சூர்யா