'வ'கர வரிசையில் எண்ணற்ற வடசொற்கள் இருக்கின்றன. 'வ'கரத்தில் பல வடசொற்கள் வினைச்சொல் பயன்பாட்டில் காணப்படுகின்றன. 'வசிக்கிறான், வசித்தல்' என்பவை வடசொற்கள். 'குடியிருக்கிறான், குடியிருத்தல்' என்னும் பொருளில் அச்சொல் பயன்படுகிறது. 'வாசம்' என்பதும் ஓரிடத்தில் இருப்பதைக் குறித்த வடசொல்தான். 'மயிலாப்பூரில்தான் நமக்கு வாசம்' என்று முன்பு எழுதுவார்கள்.
'வாசித்தல்' என்பதும் வடசொல்தான். 'வாசிப்பது' என்றால் படிப்பது. 'வாசகர்கள்' என்றால் படிப்பவர்கள். 'வாசகம்' என்றால் சொற்றொடர். 'வகித்தல்' என்ற சொல்லும் வடசொல்லே; 'ஏற்றிருத்தல்' என்று பொருள். 'பொறுப்பு வகிக்கிறார்' என்பது 'பொறுப்பு ஏற்றிருக்கிறார்' என்னும் பொருளைத் தரும்.
'வாந்தி' என்ற சொல்லும் வடசொல்லே என்கிறார் நீலாம்பிகை அம்மையார் (மறைமலை அடிகளாரின் மகள்). 'வாந்தி' என்பதற்கு நேரான தமிழ்ச்சொல் 'கக்கல்'. 'குழந்தை பாலைக் கக்கிடுச்சு…' என்றுதான் நம் பாட்டிமார்கள் கூறினார்கள். 'வாந்தி பேதி' என்பதைக் 'கக்கல் கழிசல்' என்ற அழகிய தமிழ்த் தொடரினால் குறிப்பிட்டார்கள். பொய்ச்செய்தி என்ற பொருளில் பயிலும் 'வதந்தி'யும் வடசொல்லே.
'விந்தை, விநோதம்' என்பவை 'புதுமை' என்ற பொருளில் பயிலும் வடசொற்கள். 'விரதம்' என்பதை 'நோன்பு' என்றும், 'வித்தியாசம்' என்பதை 'வேறுபாடு' என்றும், 'விதி' என்பதை 'ஊழ்வலி' என்றும் கூறவேண்டும். 'வியாபாரம்' என்பதும் வடசொல்தான். 'வாணிபம்' என்பது அதற்கான தமிழ்ச்சொல்.
'முகவரி' என்ற தமிழ்ச்சொல் பரவலாவதற்கு முன்பு 'விலாசம்' என்ற வடசொல் வழக்கத்தில் இருந்தது. 'விருத்தி' என்பது 'முதிர்ச்சியடைந்து பெருகுவதைக்' குறிக்கிறது. 'விருத்தன்' என்பவன் 'முதியவன்.' 'விருத்தாசலம்' என்ற ஊர்ப்பெயரின் தமிழ் வழக்கு 'திருமுதுகுன்றம்' அல்லது பழமலை. 'விவசாயம்' என்பதும் வடசொல்லே. 'உழவுத்தொழில், பயிர்த்தொழில், வேளாண்மை' என்பவைதாம் அதற்கான தமிழ்ச்சொற்கள். 'வார்த்தை' என்பதும் வடமொழியே. 'சொல், கிளவி' ஆகியன தமிழ்ச்சொற்கள்.
-மகுடேசுவரன்