பதிவு செய்த நாள்

11 ஜூலை 2018
16:17
பாமரர்களின் இலக்கியம்

நாட்டுப்புறப் பாடல்கள் எளிமையானவை, இனிமையானவை. பல உணர்வுகளை, அரிய வாழ்வியல் உண்மைகளைச் சில சொற்களில் விளக்கக்கூடியவை. பாமரர்களின் குரல், அவர்களுடைய இலக்கியம்.

உலகெங்கும் நாட்டுப்புறப் பாடல்கள் கவனத்துடன் சேகரிக்கப்படுகின்றன, ஆய்வு செய்யப்படுகின்றன. எழுத்து, இசை, காட்சி வடிவிலும் ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர். நாடு வாரியாக, மாநில வாரியாக, மாவட்ட வாரியாக, ஊர் வாரியாக, இனக்குழு வாரியாக, பாடுபொருள் வாரியாக அவற்றைத் தொகுக்கின்றனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் தமிழகத்தின் நாட்டுப்புறப் பாடல்கள் தொகுக்கப்பட்டன என்கிறார் ஆறு. இராமநாதன். 1871இல் சார்லஸ்-இ-கோவர் என்ற ஆங்கிலேயர் 'Folk Songs of Southern India' என்ற நூலைத் தொகுத்தார். இந்நூலில், தமிழ்ப்பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரப்பட்டிருந்தன.+
அதன் பிறகு, தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் பலரும் இப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டார்கள். அவர்களுடைய பெருமுயற்சியால், பல அருமையான பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வகையில் குறிப்பிடத்தக்க சில நூல்கள்:
1. மலையருவி (தொகுப்பாசிரியர்: கி. வா. ஜகந்நாதன்)
2. தமிழர் நாட்டுப்பாடல்கள் (தொகுப்பாசிரியர் :நா. வானமாமலை)
3. கொங்கு நாட்டுப்புறப்பாடல்கள் (தொகுப்பாசிரியர் :க. கிருட்டிணசாமி)
4. மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள் (தொகுப்பாசிரியர் : மு. சிவலிங்கம்)

இந்நூல்கள் அனைத்திலும் 'ஆசிரியர்' என்ற சொல் இல்லாமல் 'தொகுப்பாசிரியர்' என்ற சொல் இருப்பதைக் கவனியுங்கள். நாட்டுப்புறப் பாடல்களை இவர்தான் எழுதினார் என்று யாராலும் சொந்தம் கொண்டாட முடியாது. வயலில் வேலை செய்யும்போது, தாலாட்டும்போது, விளையாடும்போது என, வெவ்வேறு சூழ்நிலைகளில் யாரோ பாடி, யாரோ கேட்டுத் திரும்பப்பாட, இவை செவிவழியாகப் பல தலைமுறைகளுக்கு வந்திருக்கின்றன. இவற்றை யாரும் எழுதி வைக்கவில்லை, தங்கள் பெயரைப் பதிவு செய்யவில்லை.

நல்லவேளையாக, நாட்டுப்புறப் பாடல்களைப் பதிவுசெய்து வைக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு வந்தபிறகு, அறிஞர்களும் ஆர்வலர்களும் அவற்றைத் தொகுத்து ஆராய்ந்தார்கள். இவர்களுடைய பணி அரியது, பாராட்டுக்குரியது.

மேற்சொன்ன நூல்களில் பாடல்களுக்கு இணையாக, அவற்றின் அறிமுகக் கட்டுரைகளும் முக்கியமானவை. நாட்டுப்புறப் பாடல்களைப்பற்றி ஏதும் அறியாத ஒரு புதிய வாசகர் இவற்றை எப்படி அணுகவேண்டும் என்று அவை புரியவைக்கின்றன.

இத்தனை பேர் உழைத்துத் திரட்டிய பிறகும், இன்னும் பதிவுசெய்யப்படாத நாட்டுப்புறப் பாடல்கள் ஏராளமாக இருக்கின்றன.

- என். சொக்கன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)