பிறப்பு: 27ஜூன் 1838
மறைவு: 8 ஏப்ரல் 1894
இந்தியாவின் தேசியப் பாடாலான ‘வந்தே மாதரம்’ பாடலை இயற்றியவர். பல நாவல்கள், கட்டுரை, மொழிபெயர்ப்புப் புத்தகம்கங்களை எழுதியவர்.
இளமைப் பருவம்:
கொல்கத்தா அருகில் உள்ள கந்தல்பரா என்ற ஊரில் 1838இல் நான் பிறந்தேன். எனது பெற்றோர் ஜாதவ் சந்திர சட்டோபாத்யாயா,துர்காதேவி. தந்தை வருவாய்த் துறையில் துணை ஆட்சியராகப் பணிபுரிந்தார்.
கல்வி:
மிதினாப்பூர் பள்ளியில் எனது பள்ளிக் கல்வியை முடித்தேன். பின்னர், ஹூக்ளி மோசின் கல்லூரியில் பட்டப்படிப்பும், 1857இல் கல்கத்தா பிரசிடன்சி கல்லூரியில் சட்டக் கல்வியும் படித்துத் தேர்ந்தேன். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் முதல் இரண்டு பட்ட்தாரிகளில் நானும் ஒருவன்.
குடும்பம்:
அந்தக்கால வழக்கப்படி எனக்கு 11வது வயதில் 5வயது சிறுமியுடன் திருமணம் நடைபெற்றது. 1859இல் மனைவி இறந்து சில ஆண்டுகளுக்குப்பின், ராஜலக்ஷ்மிதேவி என்பவரை மண்ந்து கொண்டேன்.முதல் மனைவியின் மூலம் மூன்று மகள்களும் பிறந்தனர்.
பிரிட்டிஷ் அரசில் பணி:
கல்லூரிப் படிப்பை முடித்து 1858இல் பிரிட்டிஷ் அரசின் துணை ஆட்சியராகப் பணியில் சேர்ந்தேன். பிறகு துணை நீதிபதியாகப் பணி புரிந்தேன். ஓய்வுபெறும் வரை இந்தப் பணியில் நீடித்தேன். பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் அவ்வப்பொழுது பல கருத்து மோதல்கள் நிகழ்ந்தாலும், பணியைச் சிறப்புறச் செய்து வந்தேன். உடல்நலக் குறைவு காரணமாக 1891ல் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டேன்.
எழுத்துப்பணி:
ஈஸ்வர சந்திரா குப்தா என்பவர் நடத்திய ’சங்க்பத் பிரபாகர்’ வார இதழில்தான் முதன் முதலில் எழுதத் தொடங்கினேன். சிறப்பாக எழுதுவதற்கு இது நல்ல முன்முயற்சியாக இருந்தது. ஆரம்ப காலத்தில் கவிதைகள் எழுதுவதே எனக்குப் பிடித்திருந்தது. ‘ராஜ்மோகனின் மனைவி’ (1864) என்ற என்னுடைய முதல் நாவலை ஆங்கிலத்தில் எழுதினேன். அது வெளியிடப்படாமலே இருந்தது. பின்னர் அதே நாவலை வங்க மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டேன் அதன் பிறகு எனது கவனம் வங்க மொழியில் எழுதத் திரும்பியது.
’துர்கேஷ் நந்தினி’ என்ற என்னுடைய முதல் வங்க மொழி நாவல் 1865இல் வெளியானது. கபால குந்தளா, மிருணாளினி, தேவி சௌதாரிணி,ஆனந்தமடம் என, பல நாவல்களை எழுதி முடித்தேன்.
என்னுடைய அண்ணன் சஞ்சீவ் சந்திராவும் புகழ்பெற்ற எழுத்தாளர். வங்கமொழியில் எழுதப்பட்ட அவரது ‘பாலமோ’ நூல்,முக்கியமான பயண நூல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.
‘பங்கதர்ஷன்’ என்ற இலக்கியப் பத்திரிக்கையை 1872ல் தொடங்கினேன். அதன் முதல் இதழில் என்னுடைய படைப்புகளே அதிகம் இடம்பெற்றன. ‘விஷப்பரிஷா’ என்ற நாவலை அந்த இதழில் எழுதினேன். நான்கு ஆண்டுகள் வரை மட்டுமே பத்திரிக்கையை நடத்த முடிந்தது.
ஆனந்த மடம் நாவலின் கதை, ஆங்கிலேயருக்கு எதிராக சன்யாசிகள் நட்த்தும் புரட்சியை மையமாகக் கொண்டது. அந்த நாவலில் இடம்பெற்ற பாடல்தான் ‘வந்தே மாதரம்’.
‘வந்தே மாதரம்’ என்பதே பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு எதிரான விடுதலை முழக்கமாக இருந்தது. வங்கப்பிரிவினை ஏற்பட்ட பொழுது, மக்கள் ஹூக்ளி நதியில் மூழ்கியபடி கூட்டங்கூட்டமாக உணர்ச்சிப் பெருக்கோடு ‘வந்தே மாதரம்’ பாடலை ஒரு சேரப் பாடினார்கள். இந்திய மக்களிடையே விடுதலை தாகத்தை இந்தப் பாடல் தூண்டிவிடக்கூடிய ஆபத்தை உணர்ந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், பொது இடங்களில் பாடுவதைத் தடைசெய்தனர்.
‘வந்தே மாதரம்’ பாடல் 1896இல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூரால் முதன்முதலாகப் பாடப்பட்டது. வந்தே மாதரம் பாடலின் முதல் இரு பத்திகள் இந்தியாவின் தேசியப்பாடலாக 24 ஜனவரி 1950இல் ஏற்கப்பட்டது.