பதிவு செய்த நாள்

16 ஜூலை 2018
14:08

வாசகசாலை, ஒவ்வொரு மாதமும் நாவல்,சிறுகதை தொகுப்பு, கவிதை தொகுப்பு என ஏதேனும் ஒரு புத்தகம் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்துரையாடல் நடத்தப்படும். அந்தவகையில்  ஐந்தாவது நிகழ்வாக  நேற்று (ஜூலை 15)  சேலம் மாவட்ட மைய நூலகத்தில் மாலை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சாகித்ய அகாடெமி  விருதுபெற்ற  எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவல் குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

சிவ பிரசாத் சிறப்புரையாற்ற, வாசகப்பார்வையில் சுபாஷினி பேசினார். சிவ பிரசாத் பேசுகையில்,  நூலாசிரியர்  பூமணி பற்றிய அறிமுகத்தோடு  உரையை தொடங்கினார். பூமணி கூட்டுறவு துறையில் துணை பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரின் எழுத்து பற்றி பேசுவதற்கு ஓர் அரசு அதிகாரியாகவும்,  தனிப்பட்ட பூமணி என்னும் மனிதன் தன் வாழ்க்கையில் எவ்வாறு நேர்மையாகவும், அறம் சார்ந்தவராகவும் இருந்தார் என்பதையும் அவரின் எளிமையையும் எடுத்துரைத்தார். கரிசல் வட்டாரத்து எழுத்தாளர்களின் பிதாமகராக கருதப்படும் கி.ராஜநாராயணனின் தாக்கத்தாலும் அவருடைய  அறிவுறுத்தலாலும் சிறுகதை எழுத ஆரம்பித்தார். பூமணியின் முதல் சிறுகதையான ‘அறுப்பு’ தாமரையில் இதழில் வெளிவந்தது. பிறகு அந்த காலகட்டத்தில் தாமரை  இதழின்  ஆசிரியராக தி.க.சிவ சங்கரன் பூமணியை  தொடர்ந்து எழுத ஊக்குவித்தார். தேசிய திரைப்பட  வளர்ச்சி நிறுவனத்திற்க்காக  அவர் இயக்கிய ‘கருவேலம்  பூக்கள்’ திரைப்படம், பல முக்கிய உலக திரைப்பட  விழாக்களில்  பங்கு பெற்றுள்ளது. மூன்று சிறுகதை தொகுப்புகளையும் , ஆறு நாவல்களையும் எழுதியுள்ளார்.

வாசகசாலை நிகழ்வில்
வாசகசாலை நிகழ்வில்

வெக்கை கதையில் சிதம்பரம் என்ற கதாபாத்திரம் சிறுவனுக்கும்  இளைஞனுக்கும்  இடைப்பட்ட  15 வயதுடைய ஒரு கதாபாத்திரம். எதிர்பார்க்காமல்  செய்யும் ஒரு கொலை அதை தொடர்ந்து அவனது  தந்தையுடன் அவன் வாழும் அந்த 8 நாள் தலைமறைவு வாழ்க்கையில் அந்த வட்டாரத்திற்க்கான நிலவுடமை அதனை ஒட்டிய கிராம சாதிய சமூகங்களின்  அடிப்படை கட்டுமானம் என அனைத்தையும் வாசகர்களுக்கு கடத்தும் விதமாக இருந்தது அவரின் உரை. அந்த சிறுவனின் பெற்றோர் , உறவினர் , அந்த கிராமத்து மக்கள் யாருமே அதை ஒரு குற்றமாக கருதவில்லை. கொலைக்கான  காரணம் தெரியும் போது அது ஏன் என்று புரிகிறது.  அந்த கதை ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எழுதப்பட்டது என்ற கூடுதல் தகவலையும் குறிப்பிட்டார்.

அடுத்ததாக வாசகப்பார்வையில் பேசிய சுபாஷினி, ஒரு சராசரி 15 வயது பையனின்  வாழ்க்கை எப்படி அந்த வயதிற்க்கே  உரித்தான  விளையாட்டு , படிப்பு, கேளிக்கை என்று இருக்குமோ அதற்கு நேரெதிர்  திசையில் சிதம்பரம் என்ற கதாபாத்திரத்தின் வாழ்க்கைச் சூழல் அமைகிறது. அது எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவம், அதனை அவனும் அவன் தந்தையும் அணுகும்  விதம் அந்த வயதில் அவனுக்கு இருக்கும் பக்குவம் என பல்வேறு ஆச்சர்யங்களை  சுபாவின் உரையின் மூலம் வாசகர்களால் உணர  முடிந்தது.

- துரை ஆறுமுகம்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)