பதிவு செய்த நாள்

22 ஜூலை 2018
13:02

   தமிழ் நவீன கவிதையின் தனித்துவமிக்க படைப்பாளரான கவிஞர் வைதீஸ்வரனின் ’மனக்குருவி’ தொகுப்பு குறித்த உரையாடலாக விருட்சத்தின் 12வது இலக்கிய சந்திப்பு நேற்று மாலை மைலாப்பூரில் நடைபெற்றது. இதில் முனைவர். தமிழ்மணவாளன்  ’வைதீஸ்வரனும் நானும்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். வைதீஸ்வரனின் கவிதைகளை ஒரு வாசகனுக்கு அறிமுகம் செய்யும் எளிய உரையாகவும் தொகுப்பு குறித்த நுட்பாமான பார்வையை முன்வைப்பதாகவும் இவ்வுரை அமைந்தது.

கவிஞர் வைதீஸ்வரன் ‘எழுத்து’ மூலம் முக்கிய கவிஞராக வெளிதெரிய வந்தவர். 1961ம் ஆண்டு இவரின் முதல் கவிதை ‘கிணற்றில் விழுந்த நிலவு’ பிரசுரமாகியது. அன்று முதல் இன்று வரை சமகாலத் தமிழ் இலக்கிய வெளியில் குறிப்பாக சிறுபத்திரிக்கையுலகில் தொடர்ந்து பங்காற்றி வருபவர் கவிஞர் வைதீஸ்வரன். பிரதானமாக கவிஞராகவே அறிப்பட்டாலும் இவரது கட்டுரைகளும்,கோட்டோவியங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 


தமிழ் மணவாளனின் உரை:

கவிஞர் வைதீஸ்வரன் தனது கவிதைகளில் காட்சிப்பூர்வமான அனைத்தையும் நுட்பமாக வாசகனுக்கு கடத்துகிறார். கவிஞர் வைதீஸ்வரன் ஒரு ஓவியராகவும் திகழ்பவர் இத்தொகுப்பின் அட்டைப்பட ஓவியம் இவரால் வரையப்பட்டது தான். இவரின்  ஓவியத்தை கண்காட்சியில் கண்ட ந.பிச்சமூர்த்தி நேரடியாக இதென்ன என்று கேட்டாராம் ‘நான் என் கவிதையில் கையாள்வதை வண்ணத்தில் முயற்சித்து பார்க்கிறேன்’ என்று பதிலளித்தாராம். இக்கவிதைகள் அனைத்தும் காட்சி சித்திரங்கள் நிறைந்தது. எனவேதான் இதனை எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி ‘மானசீக பிடிவாதத்தின் வெளிப்பாடாக 366 மலர்கள் பூத்துள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு கவிதை எழுதும் போது சொற்கள் சரளமாக கொட்டுவதில்லை என்கிறார் கவிஞர் வைதீஸ்வரன் ஆனால் சொற்களை சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்த அவருக்கு கைவந்திருக்கிறது. எளிய சந்தங்கள் அங்கங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன அவை வாசிக்க இனிமையாக உள்ளன. அங்கதம், பகடி ஆகியவை நிரம்பியுள்ளமைக்கும் நிறைய சான்றுகள் உள்ளன. 

இவரின் பாடுபொருளாக கவிதைகளை பகுத்தால் ஐம்பது சதவீதம் இயற்கை சார்ந்தும் ஐம்பது சதவீதம் சமூகம் சார்ந்தும் எழுதப்பட்டுள்ளன. 56 ஆண்டுகளாக கவிதையின் வடிவச் செயல்பாட்டில் தனக்கென பிரத்யேகமான யுக்தியை வைத்துள்ளார். சமூகம் சார்ந்து ஐம்பது சதவீதம் என்று கூறினாலும் அவை கோட்பாட்டு ரீதியாக கொள்ளப்படும் கோபங்களாக அல்லாது தனிப்பட்ட விஷயங்கள் சார்ந்த கோபமாக அதில் பல நுட்பமான  அடுக்குகள் உள்ளன. ஆனால் இவற்றையும் ஒரு கோட்பாட்டுக்குள் அடக்க முடியும்.

மழை, கடல், நதி, வானம் என்று இயற்கை சார்ந்து இவை விரிந்தாலும் இதில் பயன்படுத்தப்படும் சொற்கள் மிகக் கவனமாக கிரீடத்திலிருக்கும் வைரங்கள் போல பயன்படுத்தப் படுகிறது. இதற்கு சான்றாக ‘கண்ணாடி’ என்னும் கவிதையில் இடம்பெறும் இந்நான்கு வரிகளை கூறலாம்:

‘விடியும் தெருவில்
விழுந்த மழையில்
தெருவில் படியும்
கண்ணாடிப் பாலம்’

இதே போல் காலம் மற்றும் வெளி தொடர்பான நிறைய குறியீடுகள் இடம்பெறுகின்றன. ‘சுருண்டு விரிந்தது காலம்’ என வேறொரு கவிதையில் ஒரு இடத்தில் வருகிறது. இந்த மிக நுட்பமான சொல்லாடலை கவனிக்க வேண்டும். இதில் நாமும் மிக நுட்பமாகவே பயணப்பட வேண்டியுள்ளது.

புலன் முரண் இவரின் கவிதைகளில் வெகுவாக இடம்பெறுகிறது. சான்று பின்வரும் கவிதை:

’சூரியன் குரல்
பூமியில் வைகறையாகிறது
சூரியகாந்தி காதுகள்
செவி சாய்க்கிறது’

மேலும் இடக்கரடக்கல் என்னும் ஒரு வகைமை சங்க இலக்கியங்களில் உள்ளது. சொல்ல தகாதவற்றை வேறு மாதிரியாக கூறி அதன் பொருளை உணர்த்துவது இதனை ‘வயதின் வாசல்’ என்னும் கவிதையில் வெகு சிறப்பாக கையாண்டுள்ளார். காமம் சார்ந்து பேசும் இந்த கவிதையில் எங்கும் அதற்கான அடையாளங்களோ அதனைச் சார்ந்த சொற்களோ ஒன்று கூட வராது அதனை விவரிக்கிறார்.

அங்கதம், பகடி என்னும் இரண்டும் மிக சரளமாகவும் தேவையான இடத்திலும் இவருக்கு கைவருகிறது. இதற்கான பல சான்றுகளும் இத்தொகுப்பில் உள்ளன.

இவ்வாறு தனது உரையை நிகழ்த்தியவர் முடிவாக ‘கிணற்றில் விழுந்த நிலவு’ கவிதையை வாசித்து நிறைவு செய்தார்.

ஏற்புரை: 

கடைசியில் பேச நிர்பந்திக்கப்பட்ட வைதீஸ்வரன் ‘எழுத தொடங்கிய காலத்தில் எவ்வித நம்பிக்கையுமற்று தான் எழுதினோம்’ என குறிப்பிட்டார். எல்லோரும் கவிதை எழுதலாம் நாம் சில அளவுகளை தாண்டி சில சொற்களை பயன்படுத்தும் போது எங்கோ கவனிக்கப்பட தொடங்கி விடுகிறோம். நாலைந்து கொசுக்கள் கூடி மகிழ்ந்து கொள்வதைப் போலதான் எங்கள் இலக்கியச் செயல்பாடு இருந்ததென கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)