பதிவு செய்த நாள்

23 ஜூலை 2018
12:14

பாகம் 1 - அறிவியல்
பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம்- 1
(சர் ராபர்ட் பார்கர், எஃப்.ஆர்.எஸ். - கி.பி. 1777.)

ஆசிரியர் : தரம்பால்
தமிழில்  : B.R.மகாதேவன்

கீழைத்தேய இந்தியாவில் இருக்கும் நகரம் பனாரஸ். அது பிராமணர்கள் அல்லது இந்துஸ்தானியர்களின் புரோகிதர்களுடைய பழங்காலத்திய முக்கியமான கல்வி மையங்களில் ஒன்று.  இன்றும் அந்தப் பிரிவினரின் முக்கிய மையமாக இருந்துவருகிறது. ஏராளமான மருத்துவமனைகள், கோவில்கள், சத்திரங்கள், மடாலயங்கள் அங்கு இருக்கின்றன. சில ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு வசிக்கிறார்கள்.  பழங்கால பிராமணர்கள் வானவியல் துறைபற்றித் தெரிந்துவைத்திருந்தனர் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். வரப்போகும் சூரிய கிரகணம், சந்திரக் கிரகணம் பற்றி அவர்கள் துல்லியமாகக் கணிப்பதைப் பார்த்து அவர்களுக்கு வானவியல் துறையில் மேதமை இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

நான் 1772 வாக்கில் பனாரஸில் இருந்தபோது அங்கிருந்த பிராமணர்களிடம் கிரகண காலத்தை அவர்கள் எப்படிக் கணிக்கிறார்கள் என்பது பற்றி நேரில் சென்று விசாரித்தேன். அந்த பிராமணர்களில் நான் பார்க்க முடிந்தவர்களில் மிகவும் அறிவார்ந்தவர் தந்த பதில் எனக்குத் திருப்தி தரவில்லை. அந்த வானவியல் விஷயங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சிலரிடம், குறிப்பிட்ட சில புத்தகங்களில், ஆவணங்களில் இருப்பதாகச் சொன்னார். அந்த ஆவணங்களில் சிலவற்றில் அவர்களுடைய மதம்பற்றிய புரியாத விஷயங்கள் இருந்தன. வேறு சிலவற்றில் வானவியல் தொடர்பான அட்டவணைகள் போன்றவை இருந்தன. அவை சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தன. அது அவர்களுக்கு மட்டுமே புரிந்தது. நான் கிரகணக் கணிப்பு தொடர்பாக மேலும் கேட்டபோது அதைக் கணிப்பதற்காகக் கட்டப்பட்டிருக்கும் இடத்துக்கு என்னை அழைத்துச் செல்வதாகச் சொன்னார்கள்.

ஒரு பழங்காலக் கற்கட்டடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அதன் கீழ்த்தளம் தற்போது ஒரு குதிரை லாயமாக ஆக்கப்பட்டிருந்தது. அதோடு அங்கு விறகுகளும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஆனால், அங்கு இருந்த முற்றங்கள், அறைகளைப் பார்க்கும்போது அந்த இடமானது பொதுக்காரியங்களுக்கான மடமாக அல்லது கோவிலாக  இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அதனுள் நுழைந்து மேல் தளத்துக்குச் சென்றோம். கங்கை நதிக்கரையில் அமைந்திருந்த அந்தக் கட்டடத்தின் பிரமாண்ட மேல் தளத்தில் நான் கண்ட காட்சி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அங்கிருந்த பல வான் ஆராய்ச்சிக் கருவிகள் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டிருந்தன. கல்லால் ஆன அந்தக் கருவிகள் அசைக்க முடியா அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக இருந்தன. ஒரே இடத்தில் நிலையாகப் பொருத்தப்பட்டிருந்தன. சில இருபது அடி உயரம் கொண்டவையாக இருந்தன. இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதாகச் சொல்லப்பட்டன. ஆனால், அவற்றின் கட்டுமானத்தின் துல்லியத்தைப் பார்த்தபோது ஏதோ நவீன காலத்தில் உருவாக்கப்பட்டதுபோல் நேர்த்தியாக இருந்தது.

அந்தக் கருவிகளின் வடிவமைப்பு, துல்லியமான இணைப்பு இவற்றையெல்லாம் பார்க்கும்போது அபாரமான கணித அறிவு உள்ளவர்களால் மட்டுமே அதைச் செய்திருக்க முடியும் என்று புரிந்தது. பெரிய பெரிய கல் சுவர்கள், தூண்கள், வளையங்கள், அவற்றின் துல்லியமான இணைப்புகள், ஈயம், மற்றும் இரும்பு கொண்டு செய்யப்பட்ட கருவிகள், அவற்றின் நேர்த்தியான இணைப்பு எல்லாம் கணித மேதமையை எடுத்துக்காட்டின.

படத்தில் A என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இரண்டு பெரிய க்வாட்ரண்ட்ஸ் (Quadrants) கருவிகளின் ஆரம் 9 அடி இரண்டு அங்குலங்கள். (Quadrants - வானில் இருக்கும் நட்சத்திரங்கள் போன்றவற்றின் டிகிரி கோணம், இருப்பிடம் ஆகியவற்றை அளத்தல், அட்சக்கோடு, தீர்க்ககோடு போன்றவற்றை அளத்தல், மணி நேரத்தைக் கணக்கிடுதல் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்பட்ட பழங்காலக் கருவிகளில் ஒன்று). 90 டிகிரி பாகையில் நிற்கும் அவை 25 டிகிரி சாய்மானத்தில் உள்ள ஒரு கடிகார முள் தகடைக் (Gnomon)கொண்டவையாக இருக்கின்றன. (Gnomon - சூரியக் கடிகாரத்தில் நிழலை ஏற்படுத்தும் தகடு அல்லது கம்பி).

அப்படியான சாய்வு நிலையில் இவ்வளவு பெரிய கருவி ஒன்றை உருவாக்குவது மிகவும் கடினம். அது அந்தக் கட்டுமானத்தில் அவர்களுடைய நிபுணத்துவத்தைக் காட்டுகிறது. முள் தகடு ஏற்படுத்தும் நிழலானது அது முதலில் வடிவமைக்கப்பட்ட கோணத்தில் இருந்து துளியும் மாறாமல் அப்படியே இருந்துவருகிறது. அதோடு ஒரு அங்குல விட்டம் கொண்ட இரும்பு வளையத்தில் கண்வைத்துப் பார்க்கும்போது மூன்று பேர் ஒரே நேரத்தில்  எந்தவித இடையூறும் இல்லாமல் ஒரே கோணத்தில் ஆய்வு செய்ய முடியும்படியாக இருக்கிறது. இந்த வான் நோக்குக் கருவி அந்த அளவுக்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய விஞ்ஞானி எவரொருவருடைய உதவியும் இன்றி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கருவியின் செயல் திறம் அபாரமானதாக இருக்கிறது. ஆனால், பிற கலைத்தொழில்களைப் போலவே அறிவியல் திறமையும் கிழக்கத்திய நாடுகளில் வீழ்ச்சியடைந்துவிட்டிருக்கிறது.

ஆர்ச்சிபால்ட் கேம்பல் பிரிட்டிஷ் இந்தியாவில் லெஃடினண்ட் கர்னலாக இருந்தார். தான் வகித்த பதவிக்கு கெளரவம் சேர்த்துக் கொடுத்த கனவானான அவர் முன்னர் வங்காளத்தில் கிழக்கு இந்திய கம்பெனி சார்பில் பிரதான பொறியாளராகப் பணிபுரிந்திருக்கிறார். அவர் இந்த வான் ஆராய்ச்சிக் கருவிகளுடைய வரைபடத்தை ஒரே கோணத்தில் அமர்ந்து பார்த்து துல்லியமாக வரைந்திருக்கிறார். எனினும் 20 அடி விட்டம் கொண்ட சில பிரமாண்ட க்வாட்ரண்ட் கருவிகளின் படத்தை அவரால் முழுமையாக வரைய முடிந்திருக்கவில்லை. வட்டத்தின் துல்லியமான கால் பகுதி அளவில் மாறுபட்ட விட்டங்களைக் கொண்டதாக அவை இருக்கின்றன. அவற்றில் பெரியது 20 அடி விட்டம் கொண்டதாக இருக்கிறது. செங்குத்தாகக் கட்டப்பட்டிருக்கும் கல் தூண்களின் இரு பக்கங்களில் இவை அமைந்திருக்கின்றன. இந்த இடத்தை இரு சமமாகப் பிரிக்கும் நெடுவரை நடுப்பகுதியில் (மெரிடியனில்) அது இருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஒரு பித்தளை முனை க்வாட்ராண்ட்ஸின் மையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஆய்வு மேற்கொள்ளும்போது ஒரு நீள் கயிறானது சுற்றுவட்டப் பரிதிக்கு இழுத்துப் பயன்படுத்தப்படும் என்று ஒரு பிராமணர் என்னிடம் சொன்னார். அதிலிருந்து நான் என்ன புரிந்துகொண்டேனென்றால், ஆய்வு செய்பவர் வட்டத்தின் பரிதிப் பாதையில் கண் பார்வையை மேலும் கீழுமாகச் செலுத்தி வானத்தில் தெரியும் நட்சத்திரம் அல்லது வேறு ஏதாவது ஒன்று இந்த மெரிடியனுக்கு மேலாக நகர்ந்து போவதை ஆராய்ந்திருப்பார். இப்படிப் பார்வையை  மேலும் கீழுமாக நகர்த்தி ஆராய ஏணி போன்ற ஒன்றைப் பயன்படுத்தியிருக்கக்கூடும்.

அந்த வானத்து நட்சத்திரத்தின் இருப்பிடத்தை (தொடுவானில் இருந்து எத்தனை டிகிரி தொலைவில் இருக்கிறது) கண்டுபிடிக்க இதைப் பயன்படுத்தியிருப்பார்கள். க்வாட்ரன்ஸ் கருவியில் எந்த வில் (Arc) பகுதியில் அந்த நட்சத்திரம் வருகிறது என்பதைக் கணக்கிட்டிருப்பார்கள். இந்த வில் பகுதியானது பெரிய ஒன்பது  பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்த ஒன்பது பகுதிகள் மேலும் பத்து சிறு அலகுகளாக அதாவது 90 டிகிரிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவை இருபது அலகுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அலகும் மூன்று நிமிடத்தைக் குறிக்கும்வகையில் அப்படிப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு அங்குலத்தின் பத்தில் இரண்டு பாகம் என்ற அளவில் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்களுக்குத் தெரிந்த ஏதோ ஒரு கணக்கீடுகளின்படி நட்சத்திரங்களின் நகர்வு, இருப்பிடம் மேலும் நுட்பமான  துல்லியமான அளவுகளைக் குறித்துக்கொண்டிருக்கிறார்கள்.

வரலாறு தொடரும்...வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)