பதிவு செய்த நாள்

23 ஜூலை 2018
16:16

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகமும், வாசகசாலையும் இணைந்து நடத்தும் கலந்துரையாடல் நிகழ்வில் கடந்த ஞாயிறன்று (ஜூலை 22)  ஐந்தாம் நிகழ்வாக வங்க எழுத்தாளர் போதிசத்வ மைத்ரேய எழுதி சு.கிருஷ்ணமூர்த்தியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “சிப்பியின் வயிற்றில் முத்து” வங்காள நாவல் குறித்த கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட மைய நூலகத்தில் வைத்து நடைப்பெற்றது.

வங்காளத்தைச் சேர்ந்த எழுத்தாளர் போதிசத்வ மைத்ரேய, பணிநிமித்தமாக 1959ல் தமிழகம் வந்து தூத்துக்குடியில் மீன்வளத்துறையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். மன்னார் வளைகுடா ஆழ்கடல் மீன்கள் சார்ந்த ஆய்வுகளிலும் ஈடுபட்டார். அப்போது அவருக்கு இங்குள்ள மீனவச் சமுதாய மக்களின் வாழ்நிலை காட்சிகளையும், அவர்களின் பழக்க வழக்கங்களையும், கலாச்சாரப் போக்குகளையும் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வனுபவங்களைக் கொண்டு இருபது வருடங்களுக்கு பிறகு 1980ம் ஆண்டு வங்காளத்தில் இந்நாவலை எழுதி வெளியிட்டார்.

எழுத்தாளர் நா.நாகராஜன் தன் சிறப்புரையை நாவலின் சுவாரசியாமான கதையோட்டதைக் குறிப்பிட்டுத் துவக்கினார். தொடர்ந்து தூத்துக்குடியை களமாகக் கொண்டு அப்பகுதி மீனவப் பெருமக்களின் வாழ்வியல், தொழிற்போட்டிகள் அதில் உள்ளாடும் வர்க்கச் சாதி அரசியல் ஆகியக் கூறுகளால் நாவல் புனையபட்ட விதம் பற்றியும், நாவலின் ஒரு சில பகுதிகளை தேர்ந்தெடுத்து அது குறித்தும் விரிவாக விளக்கி பேசினார். நாவலின் களம் தஞ்சாவூர், ஸ்ரீரங்கம் என விரிந்து இசை, நாட்டியம், தேவதாசிகளின் இருள்சூழ்ந்த வாழ்க்கை  என்று பயணிக்கும் பக்கங்களை வாசிக்கையில் எழுத்தாளர் தி.ஜானகிராமனின் புகழ்பெற்ற நாவலான ‘மோகமுள்ளின்’ நினைவு வந்ததாக குறிப்பிட்டார். இறுதியாக முன்னோடி எழுத்தாளர்களின் படைப்புகளில் காணப்படும் நேர்த்தி சமகாலப் படைப்புகளில் காணமுடிவதில்லை என்னும் வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டு தன் சிறப்புரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக நாவல் குறித்து வாசக பார்வையில் வாசகி பி.நிகிதா பேசுகையில் நாவலில் காட்டப்பட்டிருக்கும் அன்றைய மீனவர்களின் பரிதாப நிலையும், அவர்களுக்குள் புரையோடி போயிருந்த ஏற்றத்தாழ்வுகளும், சமத்துவமின்மையும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலை குறித்து, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தானும் அச்சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவ்வாழ்க்கையை எவ்வித போலிப்பூச்சுகளுமின்றி விவரித்துக் காட்டியதால் நாவலுடன் மேலும் நெருக்கமாக உணர முடிந்ததை முகத்தில் மகிழ்ச்சி பளிச்சிட விவரித்தார். மீனவ மக்களுடனே வாழ்ந்திருந்தாலும் தான் அறியாத பல விஷயங்களை இந்நாவல் தனக்கு உணர்த்திக்காட்டியது எனத் தெரிவித்தார்.

அதன் பிறகு நிகழ்விற்கு வந்திருந்த வாசகர்கள் நாவல் குறித்தும், வாசிப்பு குறித்தும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். முடிவில் தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தின் நூலகர் சங்கரனின்  நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

 - சுந்தர் காந்திவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)