பதிவு செய்த நாள்

24 ஜூலை 2018
16:44

 ண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் வாசகசாலையின் வாராந்திர சிறுகதைக் கொண்டாட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சினிமா தொடர்பான 3 சிறுகதைகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

அசோகமித்ரனின் ‘விழா மாலைப் பொழுது’ சிறுகதை குறித்து பேசிய கவிதா “ஒரு திரைப்பட விழாவின் அத்தனை அபத்தங்களையும் தோலுரித்துக் காட்டிய கதை. திரைப்பட சம்பந்நதமில்லா சிறப்பு விருந்தினர்கள். நடிகை குத்துவிளக்கேற்ற உதவுவது. என்று ஒரு பத்திரிக்கை நிருபரின் கண்வழியே காட்சிகளை அழகாக விவரித்திருந்தார் அசோகமித்ரன்.” என தன் அழகான பேச்சினால் பார்வையாளர்களுக்கு கடத்தினார் கவிதா.

பாஸ்கர்சக்தியின் ‘ரே குரசேவோ மற்றும் சில பேய்களும்’ கதை குறித்து பேசிய அரவிந்தன் கருணாநிதி “சினிமாத்துறையில் கனவுகளுடன் திரியும் உதவி இயக்குநர்களின் வலிகளைச் சொல்லும் கதை. நியூமராலஜி, ஹாலிவுட் பட டிவிடிகளைப் பார்த்து தயாராகும் கதைகள் என்று ஒட்டுமொத்த சினிமா உலகிற்குள் கலந்திருக்கும் ரகசியங்களை இரு உதவி இயக்குநர்கள் வழியே எழுத்தாளர் காண்பித்திருக்கிறார். நியுமராலஜிப்படி பெயர் மாற்றிக் கொண்டால் இயக்குநராகி விடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கும் இரு உதவி இயக்குநர்களுக்கு, கதை சொல்லும் வாய்ப்புக் கிடைக்க அங்கும் டிரெண்டிங் என்ற பெயரில் பேய்க் கதையைக் கேட்கும் தயாரிப்பாளர், இவர்கள் 4 தினங்கள் கழித்து முழு கதையுடன் போக அதற்குள் 2 குறும்படங்கள் பண்ணிய வேறொருவன் இரு கொரிய ஒரு சீனா பட டிவிடியை பார்த்து சற்றே மாற்றி கதை சொல்லி, இயக்குநராகி படமும் வெளிவந்து விடுகிறது. ஏமாந்த இருவரும் மறுபடியும் அடுத்த தயாரிப்பாளரிடம் சற்றே கவனமாக செல்கின்றனர்.. தோழர் அரவிந்தன் கருணாநிதி இக்கதையை சற்றே வேகமாகப் பேசி முடித்துவிட்டார்.

ராஜு முருகனின் ‘சே குவேராவும்.. ஓசி சாராயமும்’ குறித்து ரெங்கபாண்டி பேசுகையில் “இதுவும் நெடுங்காலமாக வாய்ப்பு வராமல் வெறும் உதவி இயக்குநராக மட்டுமே காலத்தை தள்ளிக் கொண்டிருக்கும் சோனுவின் கதை. பொலிவியா காட்டில் சே என்றவுடன் நிமிர்ந்து அமர்ந்து ஆசையாக படிக்கத் துவங்கினேன். பொலிவியா காட்டை செட்டாக போட்டுக் கொண்டு, சே வாக அஜீத் நான் தனி ஆளு இல்ல, விவசாயி சோகமா உட்கார்ந்தா வறட்சி, நான் வேகமா எந்திரிச்சா புரட்சி..என்ற பஞ்ச் வசனத்துடன் கதை துவங்குகிறது. கேட்டவுடன் தலையே சுற்றி விட்டது. பட வாய்ப்புத் தேடி அலையும்  4 உதவி இயக்குநர்கள். 25 ஆண்டுகளாகியும் உதவி இயக்குநராகவே இருக்கும் சோனு. ஒருவன் மட்டும் வாழ்க்கையை.. குடும்பத்தைக் காப்பாற்ற சீரியல் இயக்குநராகி விட.. மற்றொருவனுக்கு படம் பண்ண வாய்ப்பு கிடைத்து.. பார்ட்டி கொடுக்க.. அங்கு சோனுவிற்கு கிடைக்கும் அவமானங்கள்..வலிகளே கதை.. இதில் எந்தெந்த இயக்குநர்கள் எந்த ஊரைக் கையாள்கிறார்கள். நடிகர்களை எப்படி காண்பிக்க வேண்டும்.. என்ற தகவல்களும் முழுமையான திரையுலகத்தை நமக்கு அடையாளம் காட்டுகிறது” என சுவாரசியமாகப் பேசி முடித்தார் ரெங்கபாண்டி.

மக்களின் ரசனை, இன்றைய திரைப்படங்களின் போக்கு என்று மிக சுவாரசியமாக கலந்துரையாடல் நடைபெற்றது. கதைகள் குறித்த உரையாடல் முடிந்ததும் ஞாயிறு மேடை பகுதியில் ‘எட்டு தோட்டாக்கள்’ திரைப்படஇயக்குநர் ஶ்ரீ கணேஷ் பேசினார். பாஸ்கர்சக்தி மற்றும் ராஜூமுருகன் கதைகள் தன் மனதுக்கு மிக நெருக்கமாக உணர்ந்ததாகக்  கூறினார். சாருநிவேதிதாவின் கோடம்பாக்கம் கதையின் சில வரிகள் தன் உதவி இயக்குநர் வாழ்க்கையின் துயரங்களை நினைவு கூற வைத்து. அவையே தன்னை ஒரு நிலைக்குத் தள்ளியதையும் குறிப்பிட்டார்.

அதே போல் இப்போது குறும்படங்கள் எடுத்து இயக்குநராகும் இளைஞர்கள், 25 ஆண்டுகால அனுபவத்துடன் வாய்ப்பு கிடைக்காமல் இன்றும் உதவி இயக்குநராகவே இருக்கும் சோனு போன்றோருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். வாசிப்பு பழக்கம் ஓர் இயக்குநருக்கு இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டார். அத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

- அகிலா ஶ்ரீதர்
வாசகசாலை - சென்னை.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)