பதிவு செய்த நாள்

25 ஜூலை 2018
13:14

 பாகம் 1- அறிவியல்
பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம்- 2

ஆசிரியர் : தரம்பால்
தமிழில்  : B.R.மகாதேவன்

எனக்கு நேர அவகாசம் குறைவாகவே இருந்தது. படம் -1 A-ல் இடம்பெற்றிருக்கும் சூரிய கடிகாரத்தின் நீள அகலங்கள் போன்ற பரிமாணங்களைக் குறிப்பெடுக்க மட்டுமே முடிந்தது. அதில் இருக்கும் முள் தகடை வைத்து சூரிய காலக் கணக்கை அவர்கள் குறித்திருக்கிறார்கள். அதன் நிழலானது அதற்கு கிழக்குப் பக்கம் மற்றும் மேற்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் இரண்டு க்வாட்ராண்ட் கருவிகளில் விழுவதில் இருந்து காலத்தைக் கணக்கிட்டிருக்கிறார்கள். க்வாட்ராண்ட்கள், பித்தளை கருவிகள் ஆகியவை நீங்கலாக அங்கு அமைக்கப்பட்டிருந்த பிற கருவிகள், அமைப்புகள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட நோக்கத்திலேயே அமைக்கப்பட்டிருந்தன.

அந்த நோக்கத்தைப் பின்னர் விவரிக்கிறேன். படம் 1- B யானது முள் தகட்டின் மூலம் மணி நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட உதவும் இன்னொரு கருவி. அதன் கடிகார முள்ளானது வட்டவடிவிலான தட்டையான கற் பாளத்துக்குச் செங்குத்தாக இருக்கிறது. அந்த வட்ட வடிவக் கல்லானது சற்றே சாய்வான நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  நான்கு நேரான கல் தூண்களாலும் ஒரு குறுக்குவாட்டுக் கம்பினாலும் தாங்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. கடிகார முள்ளாக நெடுக்குவசத்தில் ஒரு இரும்புக் கம்பி பொருத்தப்பட்டுள்ளது. அதன் நிழலானது தட்டையான வட்ட வடிவக் கல்லில் டிகிரிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் பகுதிகளின் மேல் விழுகிறது.

படம் 1- C என்பது ஒரு பித்தளை வளையம். இரண்டு அடி விட்டம் கொண்டது. இரண்டு கல் தூண்களுக்கு இடையே இரண்டு வளையத்தின் மூலம் நெடுக்குவாக்கில் நகரும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.வட்ட வடிவிலான கருவியின் மையத்தில் கிடைமட்டமாக  இருக்கும் அச்சு 360  பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றுக்கு இணையாக வட்டத்தில் துணை டிகிரி பாகைகள் இல்லை. ஒரு நட்சத்திரம் உதிக்கும்போது அல்லது மறையும் போது அதன் கோண அளவை அளவிடப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அல்லது சூரியன் உதிக்கும்போதும் மறையும் போதும் அதன் திசைவில் (azimuth) கோணத்தை அல்லது சூரிய நகர்வை (விலகலை) அளவிடப் பயன்படுத்தியிருக்கலாம்.


படம் 1-டி யில் இருக்கும் படம் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. அதில் இரண்டு வட்ட வடிவச் சுவர்கள் இருக்கின்றன. வெளிவட்டச் சுவர் 40 அடி விட்டமும் எட்டு அடி உயரமும் கொண்டதாக இருக்கிறது. உள் சுவரானது வெளிச்சுவரின் உயரத்தில் பாதியாக இருக்கிறது. அதில் நின்று கொண்டு வெளிச் சுவரில் இருக்கும் மேல் வட்ட விதானத்தின் பிரிவுகளை அளவிடப் பயன்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. வேறு எந்த காரணமும் அதன் பின்னால் இல்லை என்றே தோன்றுகிறது.

இரண்டு வட்டச் சுவர்களும் 360 டிகிரிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு டிகிரியும் க்வாட்ரன்ஸ் போலவே மேலும் 24 சிறிய பாகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உள் வட்டச் சுவரை அடைய ஒரு பாதை இருக்கிறது. நடுவில் ஒரு தூண் சிறிய உள் சுவருக்கு இணையான உயரத்தில் காணப்படுகிறது. அதில் ஒரு சிறிய துளையும் இருக்கிறது.   இரண்டு வட்டங்களின் மையமாக இருப்பதால் நெடுக்கு வசத்தில் ஒரு இரும்புத் துண்டைச் செருகும் படியாக அமைந்திருக்கிறது. இதன் மேலே இருக்கும் டிகிரி பிரிவுகளும் பிற கருவிகளில் இருக்கும் டிகிரி பாகைகளும் காந்த ஊசி கொண்டு ஆராயும்போது சுவாரசியமான பல தகவல்களைத் தரக்கூடும்.

படம் 1 - E ஒரு சூரியக் கடிகாரமே. படம் 1 -A யைப் போலவே பெரிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பிராமணர்கள் எந்தவித தொலைநோக்கிகளும் இல்லாமலேயே வட பகுதி (ஐரோப்பிய, அமெரிக்க) வானவியலாளர்களைவிட அதிக விஷயங்களை ஆராய்ந்திருக்கிறார்கள் என்ற உண்மையைச் சொல்லாமல் இந்த அறிக்கையை முடிக்க முடியாது. கிழக்கத்திய இந்தியப் பகுதியில் இரவு நேரங்களில் வானம் அவ்வளவு துல்லியமாக தெளிவாகப் பார்க்க முடிவதாக இருக்கிறது. பருவக் காற்றுகள் அல்லது மழைக்காலங்கள் நீங்கலாக பிற காலகட்டங்களில் வானம் மிக மிக துல்லியமாக பார்க்க முடிவதாக இருக்கிறது. நேரில் பார்க்காத ஒருவரிடம் இதைப் பற்றி விவரிப்பது மிகவும் கடினம்.

நம் நாட்டினருக்கு இப்படியான ஒன்றை எதனோடு ஒப்பிட்டுச் சொல்ல என்றே எனக்குத் தெரியவில்லை. ஒரு துளி மேகம் கூட இரவு நேர வானில் இருப்பதில்லை. அமைதியென்றால் அமைதி அப்படியொரு அமைதி. அப்படியான அமைதியும் துல்லியமும் நிறைந்த வானில் நட்சத்திரங்களின் ஒளியானது மாபெரும் அதிசயமாகவும் துல்லியமான ஆய்வுகளுக்கு உகந்ததாகவும் இருக்கிறது.

மாமன்னர் அக்பரால் இந்த பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.  கலை, அறிவியல் துறைகளின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அந்த அறிவார்ந்த மன்னர் இந்துஸ்தானின் அறிவுத்துறைகளை  மேம்படுத்தும் நோக்கில் இதுபோன்ற ஆராய்ச்சிக்கூடங்களைக் கட்ட உத்தரவிட்டிருக்கிறார். டில்லியில் ஒன்று, ஆக்ராவில் ஒன்று மூன்றாவதாக பனாரஸில் ஒன்று என்று கட்டியிருக்கிறார்.

பழங்கால பிராமணர்களுக்கு வானவியல் பற்றித் தெரிந்திருந்ததா என்பது தொடர்பாக சில சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. பாரசீகர்கள் இந்துஸ்தானியர்களை வென்றபோது இந்துஸ்தானில் வானவியல் அடிப்படைகளை அறிமுகப்படுத்தினார்களா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் அந்த சந்தேகங்கள் எல்லாம் இனியும் யாருக்கும் வரக்கூடாது. தமது முன்னோர்களிடமிருந்து வழிவழியாகப் பெற்றிருக்கும் ஆவணங்களில் இருந்து இன்றைய பிராமணர்கள் சூரிய, சந்திர கிரகணங்களை அதி துல்லியமாக முன் கூட்டியே கணித்துச் சொல்லமுடிபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எந்த பகுதியில் வாழ்கிறார்களோ அந்தப் பகுதி மன்னர்களுக்கு அந்தத் தகவல்களை முன்கூட்டியே சொல்லிவருகிறார்கள்.

அவர்கள் இந்த வானவியல் கணிப்புகளில் சுயமாகவே திறமை மிகுந்தவர்களாக இருந்தவர்கள்தான் என்பதற்கு வேறொரு ஆதாரமும் இருக்கிறது. ராசி மண்டலம் பற்றிய வரைபடங்கள் சோழ மண்டலக் கடற்கரையோரமாக இருக்கும் அவர்களுடைய மடாலயங்களில் மிக விரிவாக இடம்பெற்றிருக்கின்றன. ஜான் கால் எஃ.ப்.ஆர்.எஸ். ஆஸ்ட்ரானாமர் ராயல் அமைப்புக்கு அனுப்பிய கடிதத்தில் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த விஷயம் தொடர்பாக வேறு ஆதாரம் எதுவும் நமக்குத் தேவையே இல்லை.

வெப்பம் நிறைந்த மதிய நேரத்தில் கன்னியாகுமரிக்கு அருகில் மதுரை பகுதியில் இருந்த ஒரு மண்டபத்தில் தலை சாய்த்துப் படுத்த ஜான் கால், மேல் விதானத்தில் ராசி மண்டலங்கள் பற்றிய வரைபடம் இருப்பதைப் பார்த்திருக்கிறார். அதே போன்ற முழுமையான ராசிக் கட்ட வரைபடத்தை Mindurah கோவில் தெப்பக்குளத்தின் நடுவிதானத்திலும் கோவில் விதானத்திலும் பார்த்திருக்கிறார். அந்த வரைபடத்தின் துண்டு துண்டான வரைபடங்களைப் பல இடங்களில் பார்த்துமிருக்கிறார்.

இந்த இடங்கள் எல்லாம் ஆதி பிராமணர்களின் வசிப்பிடங்கள் மற்றும் வழிபாட்டு மையங்களாக இருந்திருக்கின்றன. அவை மிகவும் புராதனமானவையாக பாரசீக ஆக்கிரமிப்புக்கு முன்பே கட்டப்பட்டவையாகவும் இருக்கின்றன. அதோடு இந்து சமூகத்தினரைப் பற்றி நாம் நன்கு கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்கள் அவர்களுடைய சடங்குகள், பழக்க வழக்கங்கள் போன்ற பாரம்பரிய விஷயங்களில் மிகவும் மூடுண்டவர்களாக சிறிதளவு புதுமை, மாற்றம் இவற்றைக்கூட ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அவர்களைப் பற்றி நமக்குத் தெரியவந்த காலத்தில் இருந்து இன்று வரையும் அவர்களுடைய நடை, உடை, வாழ்க்கை முறை ஆகியவற்றில் எந்தவொரு மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதும் நமக்குத் தெரியும்.

எனவே, அந்த பிராமணர்கள் தங்களுடைய கோவில்களில் பாரசீக வானவியல் குறியீடுகள், படங்களைப் பொறித்திருப்பார்கள் என்று நம்ப இடமே இல்லை. இந்த ராசி மண்டலங்கள், கிரக நிலை படங்கள் எல்லாம் அவர்களுடைய சுய கண்டுபிடிப்புகளாகவே இருக்கும். அவர்களுடைய மத, வழிபாட்டுச் சடங்குகள் பிற கலாசாரக் கலப்பு எதுவும் இல்லாதவை என்று நாம் சொல்லும்போது இந்த வானவியல் போன்றவற்றிலும் அப்படியே இருந்திருக்கும் என்பதுதான் உண்மை.

வரலாறு தொடரும்...வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)