பதிவு செய்த நாள்

25 ஜூலை 2018
15:33

திரு.வி.க. 1908ஆம் ஆண்டில் 'தேசபக்தன்' என்ற இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற நேரம். அதற்கு முன் அவருடைய எழுத்துநடை வேறாக இருந்தது. 'கற்றவரும் நற்றவரும் மற்றவரும், வெற்றிவேல் போற்றும் குற்றம் இலா எம் குரவரை அடைந்து குறுமுனியே, இக்குவலயத்து உற்றால் என விளங்கும் குணக்குன்றே, தமிழ்க்கடலை உண்டதவப்பேறே...' இப்படி எளிதில் புரிந்து கொள்ள முடியாத வாக்கிய அமைப்புகளைக் கொண்டிருந்தது.

ஆனால், பொதுமக்கள் படிக்கும் பத்திரிகைக்கு, தன்னுடைய இந்த எழுத்து நடை சரிவராது என்று சிந்தித்தார் திரு.வி.க. பலதரப்பட்டவர்கள் தகவல்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் பத்திரிகையை வாசிக்கும்போது, தன்னுடைய எழுத்துநடை அவர்களுக்குப் பயன்படுமா? என்று யோசித்தார்.

விளைவு, தன் நடையையே மாற்றிக்கொண்டார். எளிய சொற்கள், எல்லோரும் சிரமமின்றிப் புரிந்துகொள்ளக்கூடிய நேரடியான வாக்கிய அமைப்புகள் ஆகியவற்றுடன் எழுதவேண்டிய தேவையை உணர்ந்தார். தான் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் என்கிற கர்வம் ஏதுமின்றி வாசகருக்காக, பத்திரிகைக்காகத் தன்னுடைய நடையை மாற்றி அமைத்துக்கொண்டார். பின்னர் அதுவே அவருடைய நடையாகவும் ஆனது. இதை அவரே சொல்கிறார் பாருங்கள்.

யான் தமிழ்ப் போதகாசிரியனாயிருந்தவன்; இப்பொழுது தமிழ்ப் பத்திரிகாசிரியனானேன். 'தேசபக்த'னுக்கென்று தனி நடை கொண்டேன். சிறுசிறு வாக்கியங்கள் அமைக்கலானேன். எளிமையில் கருத்துகள் விளங்கும் முறையைப் பற்றினேன். அந்நடையை நாள்தோறும் எழுதி எழுதிப் பண்பட்டமையால் அதுவே எனக்குரிய நடையாகியது.

இன்றைக்கும் திரு.வி.க.வின் நூல்களை வாசிக்கிறவர்கள், அவர் எளிமையாகவும் நேரடியாகவும் தெளிவுடன் விஷயங்களைச் சொல்கிறார் என்று வியக்கிறார்கள். அவர் தன்னுடைய நடையைப் பத்திரிகைக்கு ஏற்றவகையில், வாசகருக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்ளத் தயாராக இருந்ததால்தான், இது சாத்தியமாயிற்று. தமிழ்த் தென்றல் திரு.வி.க. என்னும் அடைமொழியும் அவருக்கு வந்தது.

எழுத்தாளராக உயர்ந்த நிலையில் இருந்தும், மாற்றம் வேண்டி தன்னைச் செம்மைப்படுத்திக்கொண்டவர் திரு.வி.க. எனப்படும் கல்யாணசுந்தரனார். நாம் எம்மாத்திரம்?

- என். சொக்கன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)