பதிவு செய்த நாள்

27 ஜூலை 2018
12:19

  பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம் - 3

ஆசிரியர் : தரம்பால்
தமிழில்  : B.R.மகாதேவன்

மொகலாயப் பேரரசர்களின் வரலாறு பற்றிய தன் நூலில், ஃப்ரேஸர், காலக் கணிப்பு பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். சந்திர வருடம் 354 நாட்கள், 22 குரிஸ் (1 ¼ gurris = 30 minutes) 1 புல் (1 ¼ pull = 30 Seconds) கொண்டது. சூரிய வருடம் 365 நாட்கள் 15 குரிகள், 30 புல், 22 ½  பீல் (2 ½ peel = 1 Second) கொண்டது. 60 பீல்கள் ஒரு புல். 60 புல் ஒரு குரி. 60 குரி ஒரு நாள். பிராமணர்கள் அதாவது இந்திய புரோகிதர்களைப் பொறுத்தவரை இதுவே அவர்களுடைய காலக்கணக்கு. இந்தக் கணக்கையே இந்தியாவில் இருக்கும் மொஹமதியர்களும் பின்பற்றுகிறார்கள்.’

இவை ஃப்ரேஸர் குறிப்பிட்டிருப்பவை. மொஹமதியர்கள் இந்துஸ்தானத்துக்குள் வருவதற்கு முன்பாகவே பிராமணர்களுக்கு வானவியல் பற்றித் தெரிந்திருந்தது என்பதையே இந்தக் கூற்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
Equinoctial Sun-dial - பெரிய சூரியக் கடிகாரத்தின் அளவுகள் (படம் II &III)

b b, அடித்தளத்தில் இருக்கும் கடிகார முள்ளின் நீளம்    34     8
கடிகார முள்ளின் நிழலின் சாய்வு நீளம் c c,                           38     8
a a, க்வாட்ரன்ஸ்களின் ஆரம்                                                               9    2
d -ல் கடிகார முள்ளின் உயரம்                                                          22     3
ƒ ƒ, க்வாட்ரன்ஸ்களின் அகலம்                                                          5   10
g g, யின் கனம்                                                                                                 1     0
b b, முள்ளின் அகலம்                                                                                  4     6
i i, கருவியின் மொத்த அளவு                                                              37     4
Latitude of the place taken by double altitude 25°10'

சர் ராபர்ட் பார்க்கருடன் சென்ற கர்னல் ட்டி.டி.பியர்ஸின் துணை அறிக்கை. பனார்ஸில் முக்கியமாகப் பார்க்கவேண்டியது இந்த வான் ஆராய்ச்சிக் கூடம்தான். மன்னர் ஜெய்சிங்கின் மகன் மான்சிங்கினால் 200 ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டப்பட்டது. வான் ஆராய்ச்சி ம்யூரல் ஆர்ச் (Mural Arch) அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு பளிங்குபோல் இருந்தது. மிகவும் பழங்காலத்தியது என்றாலும் மிக அற்புதமாக முழுமையான வடிவமைப்பாக இருந்தது. ஆனால், அதன் அளவீடுகள் கொஞ்சம் குறைவுபட்டதாக இருந்தது. ஆனால், வான் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாடு உள்ள ஒருவர் இந்தக் குறையை மீறி துல்லியமான கணிப்பைச் செய்துவிடமுடியும். அதற்குத் தேவையான அளவீடுகள் அப்படியே இருக்கின்றன.
இரண்டு பெரிய வளைய சூரிய கடிகார டயல்கள் (Equinoctial Ring -dial) இருக்கின்றன. மிகப் பெரியது ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது. வட்டக்கல்லின் ஆரம் 9 அடி 8 அங்குலங்கள். கடிகார முள் நான்கு அடி நீளமும் ஆறு அங்குல தடிமனும் கொண்டது. அதன் சாய்வு பாகம் நாற்பது அடி நீளம் கொண்டது. கடிகார முள்ளில் படிகள் இருக்கின்றன அதன் மீது ஏறி உச்சிக்குச் செல்லமுடியும். அந்த இரண்டு கடிகார முள்களை நான் ஆராய்ந்து பார்த்ததில் அவை அட்சரேகை 25 டிகிரி 20’  யில் இருந்தன. அதுபோல் இரண்டு சிறிய டயல்களும் இருந்தன. அவற்றின் கடிகார முட்கள் அவை பொருத்தப்பட்டிருந்த தளத்துக்கு செங்குத்தான இருந்தன. அந்தத் தளத்தில் டிகிரிகள் குறிக்கப்பட்டிருந்தன.

இறுதியாக அங்கு இருந்த ஒரு கருவியைப் பற்றி எனக்கு எதுவும் சரியாகத் தெரியவில்லை. அதைப் பற்றிய குறிப்பைக் கீழே தருகிறேன்.

A, b என்பவை வட்ட வடிவ சுவர்கள். a 24 அங்குலம் தடிமன் கொண்டது. 16 அடி ஆரம் கொண்டது. b 18 அங்குலம் தடிமன் கொண்டது. a யின் மையத்தையே தனது மையமாகக் கொண்ட அது 12 அல்லது 13 அடி ஆரம் கொண்டது. c ஒரு கல் உருளை. சுவர்களின் மையமே அதன் மையமாகவும் இருக்கின்றது. B, C இரண்டும் ஒரே உயரம் கொண்டவை. அதாவது நான்கு அடி இரண்டு அங்குலம். வெளி வட்டச் சுவர் எட்டு அடி நான்கு அங்குலம் கொண்டது. அந்த வட்ட சுவர்களின் மேல் பகுதியானது கிடைமட்டமாக இருக்கின்றன. அவை மிக டிகிரிகளாகவும் அவை மேலும் 6’ சிறு அலகுகளாகவும் அருமையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேல் சுவரின் கார்டினல் புள்ளிகளில் இரண்டு இரும்பு கம்பிகள் உள்ளன. எதற்காக  என்று தெரியவில்லை. ஆனால், அதில் ஏதோவொரு கருவியைப் பொருத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

சூரியனை ஆராயும் வேறொரு கருவியைப் பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன். அந்தக் கருவி பித்தளையால் மூடப்பட்ட இரும்பு வளையத்தை கொண்டிருக்கிறது. இதே உலோகங்களினாலான அச்சு, கண்ணால் வானைக் கூர்ந்து பார்க்கக்கூடிய வசதி, தேவையான அளவீடுகள்  கொண்டதாக இருக்கிறது. அந்த அச்சானது அது பொருத்தப்பட்ட வளைய தூணில் இங்குமங்கும் நகரும்படியாக இருக்கிறது. அந்த தூண்கள் பூமி அச்சுக்கு இணையாக இருக்கின்றன. பிற கல் கருவிகளில் இருந்ததைவிட இதில் டிகிரி அளவுகள் சுமாராகவே குறிக்கப்பட்டுள்ளன.

பிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள்
(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க்) (கிபி.1790)

பழங்கால புராண புனை கதைகளில் புதிரான தன்மையுடன் இருந்த வானவியல் கணிப்புகள் அதிலிருந்து மேலெழத் தொடங்கியபோது பல்வேறு நாடுகளில் அது எப்படிக் கணிக்கப்பட்டது என்பது தொடர்பான லேசான தகவல்கள் நீங்கலாக வேறு எதுவும் தெரியவந்திருக்கவில்லை. நபனஸர் காலகட்டத்தில் சால்தியாவில் முறையான வானவியல் கணிப்புகள் குறிக்கப்படத் தொடங்கின. பிந்திய காலகட்டங்கள் பொருட்படுத்திப் பார்க்கும்வகையிலான முதல் ஆராய்ச்சிக் கணிப்புகள் அவையே. கிரேக்கர்களின் தேடலும் இந்த விஷயத்தில் தீவிரமாக இருந்தது. வானத்து நட்சத்திரங்கள், வானவியல் கோட்பாடுகள், கணிப்புகள் தொடர்பாக தெளிவாக முதன் முதலில் விளக்கிச் சொன்னவர்கள் அவர்களே. தாலமியின் எழுத்துகளில் வெளிப்பட்ட அந்த அம்சங்கள் எந்த எதிர்ப்போ முன்னேற்றமோ இல்லாமல் சுமார் 500 ஆண்டுகளுக்கு எகிப்திய, இத்தாலிய, கிரேக்க வானவியலாளர்களை அப்படியே வழிகாட்டியது.


அலெக்ஸாண்ட்ரியாவில் அறிவுத்துறைகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து தாலமியின் எழுத்துகள் கீழைத்தேயத்துக்குள் நுழைந்தன. அங்கு பாக்தாதின் காலிஃப்கள் வானவியலை வெற்றிகரமாக அபாரமாக வளர்த்தெடுத்தனர். பாக்தாதிலிருந்து பெறப்பட்டதை பாரசீக அரசர்கள் மேலும் வளர்த்தெடுத்தனர். அவர்கள் கிரேக்க எச்சங்கள் மிஞ்சியிருந்த டெர்பிசாண்டில் இருந்து கணித அறிவைப் பெற்றுக்கொண்டனர். செங்கிஸ்கானின் வெற்றி, தைமூரின் வெற்றி ஆகியவை கீழைத்தேயப் பகுதிகளில் வானவியல் துறையில் முன்னேற்றங்கள் நிகழ்வதைத் தடுத்திருக்கவில்லை. அந்த இரு பேரரசர்களின் பேரன்கள் அறிவுத்துறைகள் மீது காட்டிய அக்கறை மிகவும் அதிகம்.  பாரசீகத்தில் ஹுலாகு வானவியலை மீட்டெடுத்தார். தார்தாரி பகுதியில் உலுபே இதே விஷயங்களை முன்னெடுத்தார்.

அதன் பிறகு அராபியர்கள் மூலம் ஸ்பெயினுக்குள் அந்த ஆய்வுகள் பரவின. கேஸிலேயைச் சேர்ந்த அல்போன்ஸா ஆய்வாளராகவும் ஆய்வை ஊக்குவிப்பவராகவும் செயல்பட்டார். அதன் பிறகு ஐரோப்பாவின் வட பகுதிக்கு வானவியல் துறை முயற்சிகள் எடுத்துச்செல்லப்பட்டன. அங்கு கோப்பர் நிக்கஸ், கெப்ளர், நியூட்டன் போன்ற மேதைகளின் மூலமாக அது முழுமையான அறிவுத்துறையாகப் பரிணமித்தது.

இப்படியாக சிந்து நதி தீரத்தில் இருந்து அட்லாண்டிக் வரை அனைத்து நாடுகளிலும் பரவிய இந்த வானவியல் துறையின் அனைத்துவித முன்னேற்றங்களும் துல்லியமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஒரு நாடு வேறு எந்த நாட்டிலிருந்து எதையெல்லாம் பெற்றிருக்கிறது, ஒட்டுமொத்த உலக வானவியல் அறிவுக் கருவூலத்தில் எதையெல்லாம் சேர்த்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது மிக மிக எளிது. ஒவ்வொரு நாட்டிலும் இருந்துவந்த வானவியல் அம்சங்கள் எல்லாம் பிற நாடுகளுடன் தொடர்புடையவையாக இருந்திருக்கின்றன. அவை எல்லாமே ஒரே மூலத்தில் இருந்து உருவாகிக் கிளைத்திருக்கின்றன. இவற்றைப் பார்க்கும்போது வானத்து நட்சத்திரங்களைப் பற்றிய மனிதர்களின் ஆய்வுமுறைகள், அது தொடர்பான அவர்களுடைய கோட்பாடுகள் எல்லாமே ஏதோ ஒரே ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளப்பட்டவைபோல் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.

அறிவியல் பார்வைக்கு அப்பாற்பட்டதாக, சிந்து நதிதீரத்துக்கு அப்பால் உள்ள பகுதியில் இருக்கும் வானவியல் அறிவைப் பற்றி ஆராய்வது மிகுந்த சுவாரஸ்யத்தைத் தரக்கூடியதாக இருக்கிறது. அந்த வானவியல் அறிவு உலகம் முழுவதும் பரவி அந்த நாடுகளை வானவியல் துறையில் முன்னேறச் செய்துள்ளது. இந்தியாவில் கோட்பாடுகள் புரியாமல் விதிமுறைகளை அப்படியே பின்பற்றும் ஆய்வாளர்களிடம் இருந்த வானவியல் அறிவானது எப்போது ஆரம்பித்தது என்று அவர்களுக்கே தெரியாது. ஏதோ மிக மிகப் பழங்காலத்தில் ஆரம்பித்தது என்று மட்டுமே சொல்லத் தெரிகிறது. நம்முடைய கணிப்பின்படி அவர்கள் சொல்லும் அந்தப் பழங்காலம் என்பது கிரேக்க புராண காலகட்டமாக இருக்கக்கூடும்.

வரலாறு தொடரும்...வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)