பதிவு செய்த நாள்

27 ஜூலை 2018
19:01

  டந்த 25ம் தேதி காலை திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையுடன்  வாசகசாலை இணைந்து நடத்திய “ சிறுகதைக் கொண்டாட்டம் “ மாதாந்திர தொடர் கலந்துரையாடல் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர். மூன்று சிறுகதைகள் குறித்து மூன்று கல்லூரி மாணவர்களின் வாசிப்பும் மற்றும் கலந்துரையாட நடந்தது.

ஆதவனின் “சிவப்பாக, உயரமாக , மீசை வச்சுக்காமல்” குறித்து முதலில் தனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்தார் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி தமிழிலக்கியம் மூன்றாம் ஆண்டு மாணவி கெளசல்யா. கதையை சொல்லி, கதையோடு அவரின் கருத்துக்களையும் பார்வையும் முன்வைத்து, தனது பேச்சினாலே கதையின் காட்சியோட்டத்தை பார்வையாளர்கள் கண் முன்னே நிறுத்தினார். நீலா மற்றும் கேசவன் என இரண்டு கதாபாத்திரங்கள் இரு துருவமாய் இருந்து.. நீலாவின் கனவு நாயகன் மாயை என உணர்ந்து.

உடன் பணிபுரியும் கேசவனை ஏற்றுக்கொள்ள உள்ளம் மாறும் காபி சந்திப்பினால் நிறைவேறும் காதல் மூலம் எழுத்தாளர் ஆதவன் சொல்ல முனைந்த உள்ளார்ந்த கருவை அவரின் புரிதலுக்கு உட்பட்ட பக்குவத்தில் தனது வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்தார்.

அடுத்த சிறுகதையாக, ச.தமிழ்ச்செல்வனின்  “வெயிலோடு போய் “ குறித்து திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி இரண்டாம் ஆண்டு தமிழிலக்கிய மாணவி கோகிலா உரையாற்றினார்.  சிறுகதையை மட்டுமல்லாது  எழுதிய எழுத்தாளரின் விபரங்களோடு சேர்த்து பல்வேறு தகவல்களைக் கொடுத்தார். இந்தச் சிறுகதை 25 ஆண்டுக்களுக்கு பிறகு ‘பூ ‘ என திரைப்படமாக எடுக்கப்பட்டதை தவறாமல் குறிப்பிட்டதும்... கதையின் முதன்மை பாத்திரத்தின் ஆழ்மன உணர்வையும் பரிதவிப்பையும் மிக அழகான மொழி உச்சரிப்பில் உரையாற்றினார்.

அடுத்த சிறுகதையாக.. கு.ப.ர வின்  “நூருன்னிசா” குறித்து சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர் விஜயராஜ் பேசினார். இந்த கதையிலுள்ள “இனி என் நாட்களை முன்பு அவுரங்கசீப்பின் தங்கை ஜெபுன்னிசா கழித்ததுபோல கழிக்கப் போகிறேன். ” இந்த வரி ஒட்டுமொத்த கதையின் ஆழத்தையும் ஆன்மாவையும் குறிப்பிடுவதாக இருக்கும். இந்த கதையின் கலந்துரையாடலிலும் மாணவர்கள் பங்கேற்று அவரவர் புரிதலுக்கு உட்பட்ட பார்வையை வெளிப்படுத்தினார்கள். அநேகமான மாணவர்கள் வாசகசாலை அளித்திருந்த மூன்று சிறுகதைகளை வாசித்திருந்தது கலந்துரையாலின் வழியே தெரியவந்தது.

நிகழ்வின் நிறைவாக  சிறப்புரை வழங்கினார் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன். நிகழ்வில் கலந்துரையாடப்பட்ட ஓவ்வொரு சிறுகதை குறித்தும், அதன் ஆசிரியர் குறித்தும் மாணவர்களுக்கு விரிவாக விவரித்தார். நூருன்னிசா கதையில் அவுரங்கசீப் தங்கை போல வாழ்வதாக நூருன்னிசா குறிப்பிடுவது, அவுரங்கசீப் குறித்தான வரலாற்றையும் எடுத்துக்கூறினார். இதுபோல ஆவணப்படுத்தப்பட்ட  வரலாறுகளும், ஆவணப்படுத்தாத  வரலாறையும் தேட உதவியாக இருப்பது சிறுகதை படைப்புகள். அதற்கு ஆர்வமான வாசிப்பு வேண்டும். தேடலை உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்பதை அறிவுறுத்தினார்.

வெயிலோடு போய் ..சிறுகதை குறித்து குறிப்பிடும் போது, இந்த சிறுகதை பூ எனும் பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தாலும். தன்னை பொறுத்தவரை கலை வடிவங்களில் வெவ்வேறு தளங்களில் ஒன்றை ஒன்று சாராமல் இயங்கவேண்டியது இலக்கியம். இலக்கியத்தில் கொடுக்கப்படும் வாசிப்பு உணர்வுகளை சினிமாவில் தருவது நியாயமாக இருக்காது. காட்சியை மனக்கண்ணில் உருவாக்கும் சிறந்த கலை இலக்கியம். பல்வேறு தொழில் நுட்ப கலைஞர்களின் கூட்டுமுயற்சியில் மிகுந்த உழைப்பில் படைக்கபடுவது சினிமா. ஏதேனும் ஒரு தொழில் நுட்பம் சிறப்பாக இல்லை என்றாலும் அந்த படைப்பு மக்களிடம் .. அதன் கருத்தை கொண்டு சேர்ப்பதில் தடையாக இருக்கும்.

அதே போல ஆதவனின் சிறுகதை குறித்தும் உரையாற்றும் போது, காதல் என்பது மாறக்கூடியது. ஈர்ப்பு, கனவு அது சார்ந்த மாய உணர்வுகளால் தடுமாறும் ஆழ்மன உளவியலை பேசும் கதையாக விரிவாக வாசிக்க வேண்டும். இந்த கதை குறித்து சில மாணவர்கள் ‘நீண்ட கதையாக இருந்தது, வாசிக்க அயர்ச்சியாக  இருந்தது’ என கூறினர். ஒரு கதாபாத்திரத்தை ஒரு களத்தை விவரிக்கும் போது எழுத்தாளரின் எல்லை விரிவடையும். கவித்துவமாகவும் அதே போல சூழ்நிலை சார்ந்தும், பலவாறு உணர்வுகளை வெளிப்படுத்தும் போது நீண்டதாக இருக்கும். அதே வேளையில் சிறிய படைப்பாக எழுதப்பட்டால் எத்தனை பேர் புரிந்துக்கொள்வீர்கள். இரண்டடியில் எழுதப்பட்ட திருக்குறள் சிறியதுதான். ஆனால் புரிந்துவிடுகிறதா..? ஆக, படைப்பின் நீளத்தை கவனிக்காது வாசிக்கவேண்டும். ஆர்வத்தோடு வாசித்தால் கதையில் எழுதப்பட்ட விதத்தில் ஒன்றி அதன் அம்சத்தை நாம் கண்டறிய வேண்டுமென மாணவர்களுக்கு சிறுகதை அணுகும் விதத்தை கலந்துரையாடலில் அறிவுறுத்தினார்.

மேலும், சிறப்பு விருந்தினருடனான விரிவான கலந்துரையாடலில்,  அவர் எழுதிய ‘மணல் கடிகை’ சமீபத்தில் வெளியான ‘மனை மாட்சி’ போன்ற நாவல்கள் குறித்தும் அது எழுதப்பட்ட சூழல், எழுத தூண்டலாக இருந்த விஷயங்களை மாணவர்களுடன் பகிர்ந்துக்கொண்டார். நாவல் எழுத தேவையான அடிப்படைகளையும் மாணவர்களுக்கு உணர்த்தினார்.”
தமிழ்த்துறை மாணவியின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

- இரா.சந்தோஷ் குமார்
வாசகசாலை -திருப்பூர்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)