பதிவு செய்த நாள்

30 ஜூலை 2018
13:45

பிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 2
(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)

ஆசிரியர் : தரம்பால்
தமிழில்  : B.R.மகாதேவன்


3. இந்துஸ்தானின் வானவியல் ஆய்வுகள் பற்றி நமக்கு முதன் முதலில் 1687-ல் தெரியவந்தது. எம்.லா லாபர் சியாம், தூதரகத்தில் இருந்து திரும்பிவந்தபோது சியாமிய ஆவணம் ஒன்றைக் கையுடன் எடுத்துவந்திருந்தார். அதில் சூரிய, சந்திரர்களின் இடங்களைக் கணிக்கும் அட்டவணைகள், வானவியல் விதிமுறைகள் போன்றவை இடம்பெற்றிருந்தன. அந்தக் கோட்பாடுகள் உருவாக்கப்பட்ட விதம், அந்த விதிமுறைகள், சூத்திரங்கள் கணக்கிடப்படும் விதம், எந்த அடிப்படையில் அவை உருவாக்கப்பட்டுள்ளன என்பதுபற்றியெல்லாம் எதுவும் தெரியவில்லை. புகழ்பெற்ற வானவியலாளரான காஸினி போன்ற ஒருவருடைய உதவியின் மூலம் தான் அவற்றைப் புரிந்துகொள்ள முடிந்தது.

அதன் பிறகு, வேறு இரண்டு வானவியல் அட்டவணைகள் இந்துஸ்தானில் இருந்த மிஷனரிகளால் பாரிஸுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால், 1769ல் வெள்ளி கிரகம் சூரியனைக் கடந்து செல்வதைப் பார்க்க இந்தியாவுக்குச் சென்றிருந்த எம்.லெ.ஜெண்டில், திரும்பி பாரிஸுக்கு வருவதுவரை மிஷனரிகள் அனுப்பிய அட்டவணைகளை யாரும் என்னவென்று ஆராய்ந்து பார்த்திருக்கவில்லை. இந்தியாவில் நீண்டகாலம் தங்கியிருந்த அவர், இந்திய வானவியல் அறிவுகள் பற்றி மிகுந்த ஆர்வத்துடன், தானே நேரடியாக ஆய்வுகள் மேற்கொண்டார்.

பொதுவாக அந்நியர்களிடம் இருந்து விலகியிருக்கும் பிராமணர்கள், எம்.லே ஜெண்டிலின் வானவியல் அறிவினால் அவரை நெருக்கமாக உணர்ந்து அது தொடர்பான உரையாடலுக்கு முன்வந்தனர்.  பிரெஞ்சு வானவியலாளரான லே ஜெண்டிலை வந்து சந்தித்த திருவள்ளூரைச் சேர்ந்த பிராமண அறிஞர் சூரிய சந்திர கிரகணங்களைக் கணக்கிட அவர்கள் பின்பற்றும் வழிமுறைகளையும் பிற வானவியல் அட்டவணைகள், கணக்கீடுகள் பற்றியும் விளக்கமாகச் சொல்லித் தந்திருக்கிறார். 1772-ல் லே ஜெண்டில் அவற்றை மெமாயர்ஸ் ஆஃப் தி அகடமி ஆஃப் சயின்ஸில் வெளியிட்டிருக்கிறார்.

சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்

ஹிஸ்டரி ஆஃப் ஆஸ்ட்ரானமி என்ற அற்புதமான புத்தகத்தை எழுதிய லே ஜெண்டில், பிராமணர்களிடமிருந்து தான் தெரிந்து கொண்டவற்றை பிற நாட்டு வானவியல் அட்டவணைகளுடன் ஒப்பிட்டு அந்த நூலில் மிக விரிவான அத்தியாயம் ஒன்றை எழுதினார். அதில் பல சுவாரசியமான தீர்மானங்களை அவர் முன்வைத்திருந்தார். இந்துஸ்தானின் வானவியல் ஆய்வுகள் அவருடைய கவனத்தை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை. ஏனென்றால்  இந்திய வானவியலின் தொடக்கம், அதன் பழமை தொடர்பான விஷயங்களில் பல துல்லியமான ஆதாரங்களை அது வழங்கியது.

4. அந்த ஆவணங்களில் இருந்தும் கடைசியாகக் குறிப்பிட்டிருக்கும் ஆய்வறிக்கை தொடர்பான தீவிரமான பரிசீலனை வாயிலாகவும் இந்த ஆய்வுக்கட்டுரையை நான் எழுதியிருக்கிறேன். இந்த ஆய்வுக் கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பவை என் சொந்தக் கருத்துகள் அல்ல. இது தொடர்பாக எனது மன்னிப்புக்கோரலைப் பணிவுடன் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

‘அஸ்ட்ரானமே இண்டியனே’ நூலாசிரியரின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். எனினும் அந்த நூலைப் படிக்கும்போது கொஞ்சம் சந்தேகம் இருக்கவே செய்தது. புதிய, அசாதாரணமான விஷயத்தை முதன் முதலாகப் படிக்கும்போது இப்படியான உணர்வு எழுவது சகஜம்தானே. அதில் சொல்லப்பட்டிருக்கும் கணக்குகள், அடிப்படை விதிகள், சூத்திரங்கள், தீர்வுகள் எல்லாவற்றையும் மிகுந்த கவனத்துடன் பரிசோதித்துப் பார்த்தேன். அந்த வானவியல் கணிப்புகளில் ஒன்று, படு துல்லியமானவையாக இருந்தன. அல்லது  வலுவான கோட்பாடாக இருந்தன. என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அவற்றை மற்றவர்களுக்குப் புரியும்வகையில் எடுத்துச் சொல்வது அவசியம் என்று நினைக்கிறேன். இந்த ஆய்வுக் கட்டுரையின் முக்கிய நோக்கம் இதுவே.

இந்தக் கட்டுரை மூன்று முக்கிய விஷயங்களைப் பற்றிக் கருத்தில் கொண்டிருக்கிறது. முதலாவதாக, கடந்த தொடரில் குறிப்பிடப்பட்டிருக்கும் அட்டவணைகளின் அடிப்படையில் இந்திய வானவியல் பற்றி சுருக்கமான அறிமுகம் செய்துவைக்க விரும்புகிறேன். அடுத்ததாக, அந்த வானவியலின் பழமை பற்றித் தெரிந்துகொள்ள உதவும்வகையில் இந்த அட்டவணைகளில் இருந்து சில முக்கிய அம்சங்களை முன்வைக்க விரும்புகிறேன். மூன்றாவதாக, இந்த இந்திய வானவியல் ஆராய்ச்சியானது எவ்வளவு அபாரமான வடிவ இயல் துல்லியத்துடன் இருக்கிறது என்பது பற்றியும் கூறவிரும்புகிறேன்.

முதல் விஷயத்தில் நான் எம்.பெய்லி சொன்னவற்றையொட்டியே பெரிதும் பயணித்திருக்கிறேன். இரண்டாவதில் சில நேரங்களில் நான் வேறு வழியில் என் ஆய்வை மேற்கொண்ட போதிலும், அவர் முன்வைத்த தீர்மானத்துக்கே வந்து சேர்ந்திருக்கிறேன். வானவியல் அடிப்படையில் அமையாத எந்தவொரு தரவையும், விளக்கத்தையும் நான் புறமொதுக்கியிருக்கிறேன். எந்தவித யூகத்துக்கும் கற்பிதத்துக்கும் இடம் கொடுக்கவில்லை. மூன்றாவது விஷயத்தில் எம். பெய்லி எழுதிய நூல் பேசியிராத ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசியிருக்கிறேன்.

5. நமக்கு முன்பே தெரிந்ததுபோல், இந்திய வானவியல் அறிவியலின் ஒரு பிரிவைப் பற்றியது மட்டுமே. அதில் எந்தவித கோட்பாடோ வானத்து நிகழ்வுகளின் விவரணைகளோ இல்லை. ஆனால், வானில் நடக்கும் சில மாற்றங்களைக் கணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. குறிப்பாக, சூரிய, சந்திர கிரகணங்களைத் துல்லியமாகக் கணிக்கும் திறன் பெற்றிருக்கிறது. அதற்குத் தேவையான விதிமுறைகள், அட்டவணைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

தரையில் அமர்ந்தபடி ஒரு பிராமணர் தன் முன்னால் சோழிகளை ஒழுங்குபடுத்திவைக்கிறார். தனது கணிப்பைத் துல்லியமானதாக ஆக்க உதவும் புதிரான சில செய்யுள்களைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார். ஓலைச்சுவடியில் இருந்து கணக்கீடுகளுக்குத் தேவையான எண்களை குறித்துக்கொள்கிறார். அதன் பிறகு அவற்றை வைத்துக் கணக்கிட்டு மிகத் துல்லியமாக விரைவில் கிரகண காலத்தைக் கணித்துச் சொல்கிறார். ஆனால், அந்தக் கணக்கீடுகள், விதிமுறைகள் எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டன என்பதையோ கூடுதலாக அவை பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வமோ இல்லாமல் இருக்கிறார்கள்.

கிரகணங்கள் தொடங்கும் நேரம், கிரகணம் விடும் நேரம் என அவர்கள் கணித்துச் சொல்பவை மிகவும் துல்லியமாகவே எப்போதும் இருப்பதால் அதுவே போதும் என்ற மிகுந்த மனநிறைவுடன் இருக்கிறார்கள். இதைத் தாண்டி வானவியல் தொடர்பான தேடல்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. தாங்கள் இருக்கும் இடத்தின் மெரிடியன் கோட்டைத் தீர்மானித்தல், ஒரு நாளின் பகல் நேரத்தின் அளவு ஆகியவற்றைத் தீர்மானித்தல் என்பதைத் தாண்டி எதுவும் செய்வதில்லை.

எனவே, இந்துஸ்தானின் வானவியல் நமக்குத் தெரிவிக்கும் மூன்று முக்கியமான விஷயங்கள் இவையே : 1. சூரிய, சந்திரனின் இருப்பிடங்களைக் கணிக்க உதவும் அட்டவணைகள், விதிமுறைகள். 2. கிரகங்களின் இருப்பிடத்தைக் கணிக்கும் அட்டவணைகள், விதிமுறைகள். 3. கிரகணங்களைக் கணிப்பது தொடர்பான விதிமுறைகள்.

இவற்றில் முதலாவது விஷயம் தொடர்பாகவே நமது கவனம் பெரிதும் குவியவேண்டும். பிற இரண்டும் கூட நமக்கு சில பயனுள்ள தகவல்களைத் தரக்கூடும்.

6. பிற வானவியலாளர்களைப் போலவே பிராமணர்களும் சூரியன், சந்திரன், கிரகங்கள் ஆகியவை சுழலும் வானத்தைத் தனியாகப் பிரித்து ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த வான் வெளியை ராசி மண்டலம் என்று 27 அலகுகளாகப் பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு நட்சத்திரத்தை அல்லது நட்சத்திரத் தொகுப்பை வகுத்திருக்கிறார்கள். வானவியலின் குழந்தைத்தனமான தொடக்கநிலையில் இப்படியான ராசி மண்டலப் பிரிப்பு இயல்பான விஷயம்தான். ஏனென்றால் நிலவானது ஒரு சுழற்சியை முக்கிய நட்சத்திரங்களினூடாக 27 நாட்களில் முடிக்கிறது. எனவே 27 அலகுகளாகப் பிரிப்பது மிகவும் இயல்பான செயல்தான். அந்தப் பழம் பெரும் காலகட்டத்தில் நட்சத்திரங்களின் இருப்பைக் கணிக்க உதவிய கருவியாக (ஒரு பேச்சுக்காக அப்படி வைத்துக்கொண்டால்) நிலவு மட்டுமே இருந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நிலவின் சுழற்சி தொடர்பான குழப்பமான விஷயங்கள் முழுவதும் தெரிந்திராத நிலையில் கிழக்கு நோக்கிய அதன் மிக விரைவான நகர்வு நட்சத்திரங்களின் இடங்களைக் கணிக்கப் பெரிதும் உதவியது. நிலவின் பல்வேறு நிலைகள் காலத்தை மாதம், வாரங்கள், ஏழு நாட்கள் கொண்டது வாரம் என்பது போன்று பிரிக்க உதவியது. உலகம் முழுவதுமே இந்தக் கணிப்பு இவ்விதமே இருந்துமிருக்கிறது. நம்மைப் போலவே பிராமணர்களும் வாரத்தின் ஏழு நாட்களை ஏழு கிரகங்களுடன் தொடர்புபடுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவை மிகவும் துல்லியமாக நாம் வரிசைப்படுத்தியிருக்கும் விதத்திலேயே அமைந்திருக்கின்றன.

27 சம பாகங்களாகப் பிரிக்கப்பட்ட இந்தியர்களுடைய நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் இந்த நட்சத்திர உருவங்களை அந்நாட்டு வானவியலாளர்கள் நம்மிடம் இருக்கும் விலங்குகளின் வடிவங்களாக அடையாளப்படுத்தவில்லை. எம். லே  ஜெண்டில் இந்தியர்கள் அந்த உருவங்களை என்ன பெயரில்  அழைத்தார்கள் என்பதையும் என்ன வடிவில் அவற்றை அடையாளப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். சிறிய சிறிய நட்சத்திரத் தொகுப்புகளைக் கொண்ட அந்த உருவங்கள் Pleiades அல்லது Hyades போல (ஏழு விண்மீன்கள் அடங்கிய கார்த்திகை தொகுதி) வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரே தொகுதியைச் சேர்ந்த நட்சத்திரங்கள் நேர்கோடுகளினால் இணைக்கப்பட்டன.

அவர்களுடைய ராசி மண்டலத்தின் முதலாவது தொகுப்பு ஆறு நட்சத்திரங்களைக் கொண்டிருக்கிறது. நம் ராசிமண்டலத்தின் ஏரியஸின் தலையில் தொடங்கி ஆண்டோமேடாவின் கால் வரையிலான தொகுப்பாக இருக்கிறது. தீர்க்கரேகையில் பத்து டிகிரி வரையான இடத்தைக் கொண்டதாக இருக்கிறது.   

இந்த நட்சத்திரத் தொகுப்புகள் ராசி மண்டலத்தின் எல்ல நட்சத்திரங்களையும் தன்னுள் கொண்டதாக இருப்பதில்லை. தொகுப்பில்  இடம்பெறும் வகையில் தேர்ந்தெடுக்கப்படும் நட்சத்திரங்கள் எல்லாம் அவற்றுக்கிடையே கோடுகள் வரைந்து தெளிவாக அடையாளப்படுத்த முடிந்தவையாகவே இருக்கின்றன. அதோடு நிலவின் நகர்வை துல்லியமாகச் சுட்டிக்காட்ட முடிந்தவையாகவும் இருக்கின்றன என எம் லே ஜெண்டில் குறிப்பிடுகிறார்.

அப்படியாக,  ராசி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் எல்லாமே 27 நட்சத்திரத் தொகுதிகளாக வரையறுக்கப்பட்ட பிறகு, அந்த ஒட்டுமொத்த ராசி மண்டலமானது 12 கட்டங்களாக ஒவ்வொன்றும் நாம் செய்திருப்பது போலவே,  30 டிகிரி என்ற அளவில் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிப்பு முற்றிலும் கற்பிதமானது.

கணக்கீடுகளுக்காகவே அப்படிச் செய்யப்படுகிறது. இவற்றுக்கான குறியீடுகள், பெயர்கள் எல்லாம் நாம் பயன்படுத்துவதுபோலவேதான் இருக்கின்றன. வார நாட்களின் வரிசையைப் போலான இப்படியான ஒத்திசைவுக்கு கடந்த காலத்தில், நமக்குத் தெரிந்துகொள்ளமுடியாதவகையில் நடந்திருக்கும் ஏதோவொரு தகவல் தொடர்பே காரணமாக இருந்திருக்கும்.

வரலாறு தொடரும்...வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)