தலைப்பு : கௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்
ஆசிரியர் : கௌதம நீலாம்பரன்
பதிப்பகம் : சாய்சூர்யா எண்டர் பிரைசஸ்
விலை : 200/-

பதிவு செய்த நாள்

30 ஜூலை 2018
15:48

  அக்காலம் மட்டுமல்ல; எக்காலத்திலும் சிறுவர்களுக்கு கதை என்றால் மிகவும் பிடிக்கும். கதை சொல்வதும், கதை கேட்பதும் தமிழர்களின் தொன்றுதொட்டு வரும் பழக்கம். நாம் ஒவ்வொருவரும் அத்தகைய இளமைப்பருவத்தைக் கடந்து வந்தவர்கள் தான். இளமைப் பருவத்தில் கதை கேட்பதும், அக்கதையினுாடே பேசும் விலங்குகள், பறவைகள், தேவலோகம், தேவதைகள், அசுரர்கள் எனக் கற்பனை உலகில் மிதப்பதும் இனிமையான கனாக்காலம். உலக இயலைத் தெரிந்து கொள்வதற்கும், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்களிலிருந்து மீள்வதற்கும், வாழ்க்கைச் சூழலில் சமயோசிதமாக நடந்து கொண்டு வெற்றி காண்பதற்கும், உலகியலை பிறர் அனுபவங்கள் மூலம் நாம் அறிந்து கொள்வதற்கும் படைக்கப்பட்ட இக்கதைகளின் பின், அறிவுரையும் பட்டறிவு செய்தியும் உண்டு. சரித்திரப் பின்னணி கொண்ட கதையானாலும், சமூகப் பின்னணி கொண்ட கதையானாலும் எளிய நடையில் பிறமொழிக் கலப்பின்றி இனிய தமிழில் கதை சொல்லும் ஆற்றலாளர் கௌதம நீலாம்பரன். தன் இயல்பான நடையால் சிறுவர்களைப் பிணைக்கக் கூடியவர். சமூக வாஞ்சையோடு எழுதுபவர். அவருடைய பொதிய மலைக் கோட்டையும், மந்திர யுத்தமும், மாயக்கோட்டை, நாக மலைப்பாவை என, மூன்று முத்தான புதினங்கள் இந்நுாலுள் அடங்கியுள்ளன. சரித்திரப் பின்னணி கொண்ட கற்பனைக் கதைகளாயினும், ஆங்காங்கே இலக்கியச் செய்திகளும், வரலாற்று நிகழ்வுகளும் எட்டிப் பார்க்கின்றன.  மூட நம்பிக்கைகளின் முடை நாற்றம் வீசாமல் பார்த்துக் கொண்டுள்ளார். இடையிடையே சமூக அவலங்களையும், தோலுரிக்க தவறவில்லை. இன்று நம்மிடையே கௌதம நீலாம்பரன் இல்லையெனினும், அவருடைய எழுத்துகள், சிறுவர்கள் மட்டுமின்றி, அனைத்து தமிழர்களின் உள்ளங்களிலும் என்றென்றும் நிலைத்து வாழும் என்பதில் ஐயமில்லை.

– புலவர் சு.மதியழகன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)