பதிவு செய்த நாள்

01 ஆக் 2018
14:37

 பிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 3
(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)

ஆசிரியர் : தரம்பால்
தமிழில்  : B.R.மகாதேவன்

8. இப்படி நட்சத்திரங்கள் எல்லாம் கிழக்கு நோக்கி நகர்வதுபோலவும் அவற்றின் இடத்தில் இருந்து விலகிச் செல்வதுபோலத் தோன்றுவதும் சூரியனானது வெர்னல் ஈக்வினாக்ஸில் இருக்கிறது என்பதும் பிராமணர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இந்த விஷயங்கள் எல்லாமே அவர்களுடைய அட்டவணைகளில் தெளிவாக இடம்பெற்றுள்ளன. இந்த நகர்வை ஆண்டுக்கு 54’’ என்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். எனவே அவர்களைப் பொறுத்தவரையில் நிலையான நட்சத்திரங்கள் ஒரு முழு சுற்றை முடிக்க 24,000 வருடங்கள் ஆகும் என்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த நகர்வு கொஞ்சம் அதி வேகமானது. ஆண்டுக்கு 4’’ குறைவு என்பதுதான் உண்மை. தாலமி இதையே 14’’ குறைவாகக் கணித்திருந்தார். அதோடு ஒப்பிடும்போது இந்தப் பிழை மிகவும் சிறியதுதான்.

இந்திய வானவியலில் உள்ள இன்னொரு முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், நாம் சூரிய சந்திரர்களின் இடத்தை வெர்னல் இக்வினாக்ஸில் இருந்து கணக்கிட்டுச் சொல்வது வழக்கம். ஆனால், இந்தியர்களோ நகரும் ராசிமண்டலத்தின் தொடக்ககட்டத்தில் இருந்து எந்த தீர்க்கரேகையில் சூரிய, சந்திரனின் இடம் இருக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறார்கள். முன்பே சொன்னதுபோல் அவை 30 டிகிரிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மேலும் 60’ ஆகப் பிரிக்கப்பட்டுள்ளன. காலத்தின் இப்படியான அலகிடுதலில் அவர்களுடைய கணக்கீடுகள் அறுபதை அடிப்படையாகக் கொண்டவையாக (sexagecimal) இருக்கின்றன. நாள் ஒன்றை 60 மணிநேரம் கொண்டதாகவும், மணி நேரத்தை 60 நிமிடங்கள் கொண்டதாகவும் பிரிக்கிறார்கள். அந்தவகையில் அவர்களுடைய ஒரு மணி நேரம் என்பது நம்முடைய 24 நிமிடங்களுக்கு சமம். அவர்களுடைய ஒரு நிமிடம் என்பது நம்முடைய 24 நொடிகளுக்குச் சமம்.

9. எல்லா அட்டவணைகளிலும் இந்தக் கணக்கீடுகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதில் மிகவும் வித்தியாசமாக இருப்பவற்றை நாம் முதலில் எடுத்துக்கொண்டு பார்ப்போம். முதலில் சியாம்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வானத்து நட்சத்திரம், கிரகம் அல்லது ஏதாவது ஒன்றின் இருப்பிடத்தைக் கணிக்க மூன்று விஷயங்கள் தேவை. கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்த கிரகம் இருந்ததாகக் கணிக்கப்பட்ட இடம்; அந்தக் குறிப்பிட்ட காலகட்டமே அட்டவணைகளின் மூல ஆதார காலகட்டம் (Epoch). 
இரண்டாவதாக அந்த கிரகத்தின் ஒரு சுழற்சிக்கான வேகம். ஆதார காலகட்டத்துக்கும் கணிப்பு மேற்கொள்ளப்படும் காலகட்டத்துக்கும் இடையிலான இடைவெளி அடிப்படையில் கணக்கிடப்படும். ஆதார காலகட்டத்தில் ஒரு கிரகத்தின் இருப்பிடத்துடன் இதையும் சேர்த்துக் கணிக்கும்போது அந்த கிரகத்தின் mean place (Star place - the position of a fixed star usually located by its right ascension and declination) வானத்து அச்சின் நெடுக்கு, கிடைமட்டப் புள்ளிகள் மூலம் குறிக்கப்படும் ஒரு நிலையான நட்சத்திரத்தின் இடம் ; Mean Place - the position of a star at a given epoch (as the beginning of a year) as affected by precession of the equinoxes and proper motion ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஈக்வினாக்ஸ், நகர்வு ஆகியவற்றுக்கு ஏற்ப கணக்கிடப்படும் நட்சத்திரத்தின் இருப்பிடம்) அல்லது வானில் அது எந்தவித தடங்கலும் இன்றிச் சுழன்றிருக்கும்பட்சத்தில் அது இருந்திருக்கும் இடம் கிடைக்கும்.

மூன்றாவதாக, சுழற்சியில் தடங்கல் ஏதேனும் இருந்திருப்பின் அதற்கு ஏற்ப செய்துகொள்ளவேண்டிய திருத்தம். இந்த திருத்தத்தை இடத்துக்கு ஏற்றாற்போல் mean place உடன் கூட்டி அல்லது கழித்துக் கணக்கிடவேண்டும். அப்போதுதான் அந்த கிரகத்தின் சரியான இடத்தைக் கண்டுபிடிக்க முடியும். அது  அந்த கிரகத்தின் சுழற்சிப் பாதையின் நீள்வட்டத் தன்மை சார்ந்து உருவாகும்போது மையத்தின் சமன்பாடு (ஒரு நட்சத்திரம் நீள்வட்டப் பாதையில் இருக்கும் இடத்துக்கும் அது அதே வேகத்தில் வட்டமான சுழற்சிப் பாதையில் சுற்றியிருந்தால் இருக்கும் இடத்துக்கும் இடையிலான கோண வேறுபாட்டைக் கணக்கிடும் சமன்பாடு) சார்ந்த திருத்தம் என்று அழைக்கப்படும்.

10. சியாமில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கும் ஆவணங்கள் சுட்டும் ஆதார மூல காலகட்டம் என்பது வெகு பிந்தைய காலமெல்லாம் இல்லை. நமது காலக் கணிப்பின்படி 638-ம் ஆண்டு மார் 21ம் தேதி, காலை 3 மணி, சயாம் மெரிடியன் என்ற காலத்தையே குறிப்பதாக எம். காஸினி குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் காலகட்டத்தில்தான் அந்த வானவியல் ஆண்டுக்கணிப்பு தொடங்கியிருக்கிறது. அப்போதுதான் நகரும் ராசிமண்டலத்தில் சூரியனும் சந்திரனும் நுழைந்திருக்கின்றன.

எல்லா இந்துஸ்தானிய அட்டவணைகளிலும் மாறும் ராசி மண்டலத்தினுள் சூரியன் நுழைந்த தருணத்திலேயே அவர்களுடைய வானவியல் ஆண்டு தொடங்கியிருக்கிறது. அப்போதுதான் பருவ காலச் சுழற்சிகளுக்கு ஏற்ப ஆண்டுகள் தொடர்ச்சியாக முன்னகர்ந்து சென்று 24,000 வருடச் சுழற்சியை முடிக்கமுடியும்.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் மூல ஆதார காலகட்டத்தின் அடிப்படையில் பார்த்தால், 800 ஆண்டுகளில் 2,92,207 நட்கள் என்ற வகையில் சூரியனின் mean place ஐக் கணக்கிட முடியும். இது சிடரியல் வருடத்தின் காலம் அதாவது சூரியனானது மாறும் ராசி மண்டலத்துக்குள் மீண்டும் நுழையும் காலமானது  365d, 6h, 12', 36. இதிலிருந்து டிராபிகல் வருடத்தைக் கண்டுபிடிக்க அல்லது பருவகாலங்களின் அடிப்படையிலான வருடத்தைக்கணக்கிட 21’55’’ ஐக் கழிக்கவேண்டும்.

ஏனென்றால் சூரியன் 54’’க்கு மேலாகச் செல்ல எடுக்கும் காலகட்டம் அது. நட்சத்திரங்கள் நகர்ந்து சென்றிருக்கும் தொலைவு அது. எனவே இதில் 365d, 5h, 50', 41 எஞ்சியிருக்கும். அதுதான் டிராபிகல் வருடத்தின் கால அளவு. சியாமில் இருந்து பெறப்பட்ட அட்டவணைகளில் மட்டுமல்ல; பிற எல்லா இந்திய வானவியல் அட்டவணைகளிலும் இந்தக் கணக்கீடே காணப்படுகிறது. இந்தக் கணிப்பு, தெ லா கண்டு சொன்னதைவிட 1’ 53’’ அதிகம். பழங்கால வானவியல் அட்டவணைகளில் இவ்வளவு குறைந்த வித்தியாசம் கொண்டது வேறு எதுவுமே இல்லை.

11. இந்த அட்டவணைகளில் இருந்து தெரியவரும் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சூரியனின் mean place தொடர்பான திருத்தம் (மாறிலி). அதை நாம் சூரியனின் மையச் சமன்பாடு என்று குறிப்பிடுகிறோம். சூரியனுடைய நகர்வில் தென்படும் நீள்வட்டத்தன்மையினால் அதன் இருப்பிடம் தொடர்பாக சில மாறுதல்களைச் செய்துகொள்ளவேண்டியது அவசியம். ஆண்டின் ஒரு பாதியில் mean placeக்கு பின் தங்கியதாக அதன் இருப்பிடமிருக்கும்; மறு பாதியில் mean placeஐத் தாண்டியதாக இருக்கும். சூரியன் மெதுவாக நகரும்போது அதன் இருப்பிடமானது அபோஜீ புள்ளியை (apogee) அடையும். பூமியில் இருந்து அதன் தொலைவு அப்போது மிகவும் அதிகமாக இருக்கும் (அபோஜி என்றால் கிரேக்க மொழியில் பூமியில் இருந்து வெகு தொலைவில் என்று பொருள்).

கோட்பாடுகள் தொடர்பாக தெளிவான வரையறைகள் இல்லாத இந்திய வானவியலில் இந்த இடமானது வானத்தைக் கண்ணால் பார்க்கும்போது சூரியனின் வேகம் மிகவும் குறைவாக இருக்கும் நேரத்தில் தென்படும் புள்ளி மற்றும் அதிலிருந்து 90 டிகிரி தொலைவில் இந்த விலகல் நகர்வில் தென்படும் புள்ளியைக் குறிக்கிறது. இந்த மாறுபட்ட நகர்வானது 2 டிகிரி 12’ 12. அதாவது ஐரோப்பிய வானவியல் துறையால் தற்போது கணக்கிடப்பட்டிருப்பதைவிட 16’ அதிகம்.

இந்த மாறுபாடு பெரிய அளவு அல்ல. இதைப் பிழை என்றுகூட நாம் சொல்லமுடியாது. சூரியனின் நகர்வின் பிற புள்ளிகளில் இந்த மாறுபாடு இதையும்விடக் குறைவாகவே இருக்கிறது. அபோஜி புள்ளியானது ராசி மண்டலத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 80 டிகிரி தாண்டிய நிலையில் இருக்கிறது. நிலையான நட்சத்திரங்களுடன் இந்த இடைவெளி தொடர்ந்து அப்படியாகவே நீடிக்கிறது. இந்தக் கணிப்பு அவ்வளவு துல்லியமானது அல்லதான். ஏனென்றால், அபோஜியானது ஆண்டுக்கு 10’’ நகர்ந்துகொண்டே செல்லும். எனினும் தாலமி கண்டு சொன்னதைவிட இந்துஸ்தானின் கணிப்பு மிகவும் துல்லியமானதாக இருக்கிறது. தாலமியின் வானவியல் கோட்பாட்டின்படி சூரியனின் அபோஜி நகராமல் இருப்பதாகச் சொல்கிறது. இதனால், நிலையான நட்சத்திரங்களுக்கும் அதற்குமான இடைவெளி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்லும்.

வரலாறு தொடரும்...வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)