பதிவு செய்த நாள்

02 ஆக் 2018
16:41

ஞ்சை வாசக சாலையின் மூன்றாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட்லாட்ஜில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தஞ்சை ப்ரகாஷின் “மீனின் சிறகுகள்” நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் வாசக பார்வையை முனைவா் பட்ட ஆய்வாளா் தமிழ் இலக்கியா முன்னெடுத்தார். சிறப்புரையைத் தஞ்சை ப்ரகாஷின் நண்பா் அவருடன் நெருங்கிப் பழகிய ஆ.செல்லதுரை வழங்கினார்.

வாசகசாலை தஞ்சை நிகழ்வில்
வாசகசாலை தஞ்சை நிகழ்வில்

தமிழ் இலக்கியா தன் பார்வையைப் பதிவு செய்யும்  பொழுது, நாவலில் ஒரு ஆண் பல பெண்கள் இவா்களுக்கிடையேயான உறவுகள் குறித்துக் கூறினார். ஆணென்றாலும் பெண்னென்றாலும் குடும்ப உறவை விட்டு வெளிவராமல் தன் சுதந்திரத்தை அனுபவிக்க நினைக்கின்றனா். திருமணம் பற்றி புரிதல் இருபாலரிடத்தும் ஒரு மாயையாகவே பார்க்கப்பட்டு பொருளாதார, சமூக மாற்றங்களில் ஓர் இடத்தைப் பெற்று அமர்ந்துள்ளது. மேலும், உடல் ரீதியான நிலைப்பாட்டைக் கொண்டு வாழ்பவரிடம் சுதந்திரம் தேவையானதொன்று, அவர்களிடத்தான நியாயத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். என் உடல் என் உரிமை என்பதே இந்நாவலின் மையக் கருத்தென்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார்.

அடுத்து,  ஆ.செல்லதுரை சிறப்புரை தந்தார். நாவலில் சுட்டப்படும் வாழ்வு, அதன் உண்மை, வாசிப்பவா் மனதில் ஒரு மனச்சிதறலை ஏற்படுத்தும். ஆனால், அதுதான் நடைமுறை மாற்றத்தையும் ஏற்படுத்தும். மற்றொரு முக்கிய அங்கமாக இந்நாவல் பற்றி ஜெயமோகன் விமா்சனத்திற்கு எதிர்வினையாக பல செய்திகளைக் குறிப்பிட்டார். இந்நாவலில் தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்ட விஷயங்களை அழகாகத் தெளிவுப்படுத்தினார்.

உதாரணமாக, ரங்கமணி என்ற கதாபாத்திரம் இத்தனைப் பெண்களைத் தன்வயப்படுத்தியது என்பதுபற்றி கேள்வி எழும். தஞ்சை ப்ரகாஷ், ரங்கமணியை ஒரு ஆணாகப் படைக்கவில்லை. பல ஆண்களின் கூட்டாக அவனைப் படைத்திருக்கின்றார் என்று சொன்னது நாவலைப் பற்றிய அவரின் நல்ல புரிந்துணா்தலைக் காட்டியது.

அடுத்து, மீனின் சிறகுகளில் காதல் பற்றிக் குறிப்பிடவேயில்லை. பொதுவாக, காதலென்பதில் கடிதம் கொடுப்பது, மனதைக் களவாடுவது என இருநிலைகள், இது ஒரு பக்கம். மற்றொரு பக்கத்தில் பூவை நுகர்ந்து தூக்கி விட்டெறியக் கூடிய உலகமும் இயங்கிக் கொண்டுதான் உள்ளது. இதனை, வெட்ட வெளிச்சமாகக் காட்டியது தஞ்சை ப்ரகாஷின் எழுத்து. இது உண்மையும் கூட, நடைமுறையும் கூட.

ரங்கமணியை விருப்பமுற்றே பெண்கள் அவனை நாடினா். அவனும் அக்கா தங்கையுடன் பிறந்தவன்தான். அது நாவலை மிக நுணுக்கமாக கவனிப்பவா்க்கே தெரியவரும். பெண்களில் ஏன் இந்த நிலை இல்லையென்று சொல்ல முடியும். மீனின் சிறகுகள் நாவலில் சாந்தா மாமி என்ற விதவையின் செயலே, ரங்கமணியின் பெண்கள் மீதான அதிக விருப்பத்திற்குக் காரணமாக அமைகின்றது. பெண்களின் மன உணர்வுகள் வெளிப்படுத்தப்படாமல் அடக்கப்பட்டதே இதற்குக் காரணம்.

பெருமாள் ஸ்டோரின் பெண்கள் பட்டுடுத்தி வாழ்பவா்கள் அல்லா். மிக எளிமையானவா்கள். அவா்களுக்கு உயரமும், கட்டுக்கோப்பான உடலமைப்பும், நல்ல ஆடை அணியும் ரங்கமணி ஒரு வடிகாலாகவே தோன்றுகிறான். அவன்பால் பெண்கள் ஈர்க்கப்பட்டனா். ஆக, ஆண் - பெண் உணா்வு மனநிலை காலத்திற்கும் அப்படியே உள்ளது. ஊடகங்களின் பார்வையில் ஆண், பெண் குறித்த நிலைகள் எவ்வாறு பார்க்கப்படுகின்றன என்பதையும் முன்வைத்து பேசினார். இவை, மீனின் சிறகுகள் பற்றி பரந்துபட்ட பார்வையினைத் தெளிவுப்படுத்தியது.

இந்நிகழ்வில் தஞ்சையின் படைப்பாளுமைகள் நா.விசுவநாதன், சுந்தா்  ஜி. பிரகாஷ், ஜாகிர் ராஜா, ஸ்டாலின் சரவணன், பேராசிரியா் தர்மராஜன், செழியன், கிருஷ்ணபிரியா, கே.ஜே. அசோக்குமார், இளங்கோ போன்றோர் பங்கேற்றனா்.  மேலும் தஞ்சை ப்ரகாஷின் இணையா் மங்கையர்க்கரசி ப்ரகாஷ் கலந்துகொண்டு, தஞ்சை ப்ரகாஷ் பற்றி சில நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்டார்.

- கண்ணம்மாள்,
தஞ்சை வாசக சாலை.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)