பதிவு செய்த நாள்

03 ஆக் 2018
12:35

பிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 4
(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)

ஆசிரியர் : தரம்பால்
தமிழில்  : B.R.மகாதேவன்

12. இந்துஸ்தானின் அட்டவணைகளில் நிலவின் நகர்வானது சில குறுக்குக் கணக்கீடுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 19 வருடங்களில் அது 235 முறை சுற்றி வருகிறது. ஏதன்ஸைச் சேர்ந்த மேடன் கண்டுபிடித்துச் சொன்ன இந்த நிலவின் சுழற்சி பற்றிய கணக்கீடானது சியாம் ஆவணங்களிலும் காணப்படுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. நிலவின் அபோஜி புள்ளியானது மாறும் ராசிமண்டலத்தின் தொடக்கத்தில் இருக்கும். ஆதார காலகட்டமான 21, மார்ச், 638 ஆண்டுக்கு 621 நாட்கள் கழித்து இருக்கும். ஒரு முழுச் சுற்றுக்கு 3232 நாட்கள் எடுத்துக்கொள்ளும். முதலாவது கணிப்பு, மேயரின் (Mayer) அட்டவணையில் இருந்து ஒரு டிகிரி அளவுக்குத்தான் வித்தியாசப்படுகிறது. இரண்டாவது கணிப்பு 11h, 14', 31- மட்டுமே மாறுபடுகிறது. அபோஜி புள்ளியானது இவ்வளவு  துல்லியமாகக் கணிக்கப்பட்டிருப்பது சாதாரன விஷயம் அல்ல. எந்த வான் ஆராய்ச்சியாளராலும் வெறும் கண்ணால் பார்த்துக் கண்டுபிடிக்க முடியாதது.

13. இப்படியாகக் கண்டுபிடிக்கப்பட்ட நிலவின் அபோஜி புள்ளியின் மூலம் நிலவின் நகர்வில் இருக்கும் மாறுபாடுகள் கணக்கிடப்படவேண்டும். நிலவின் mean place, உண்மையான இடம் போன்றவற்றைக் கண்டுபிடிக்க அது தேவை. நிலவின் நகர்வின் இரு முக்கியமான புள்ளிகளில் (மிக நெருக்கமான, மிக தொலைவிலான புள்ளிகள்) மையச் சமன்பாடு (ஒரு வான் பொருள் தன்னுடைய நீள் வட்டச் சுற்றுப் பாதையில் இருக்கும் இடத்துக்கும்  அந்த வான் பொருள் வட்டப் பாதையில் சுற்றினால் இருக்கும் இடத்துக்கும் இடையிலான கோண வித்தியாசத்தைக் கணக்கிடும் சமன்பாடு) மற்றும் எவேக்‌ஷன் (நிலவின் நீள்வட்ட உச்சிப் புள்ளி) இரண்டுமே நிலவின் அபோஜியையே சார்ந்தவை என்பதால் ஒரேவிதமாகவே இரண்டும் தோன்றும். உண்மையில் அந்த இரண்டும் ஒன்றையொன்று மறுதலிக்கும். இவற்றின் வித்தியாசத்துக்கு ஏற்பவே நிலவின் வேகம் அதிகரிக்கும் அல்லது குறையும்.
மேயரின் அட்டவணையின்படி இந்த உச்சபட்ச அளவு 4°, 57', 42. சியாமிய ஆவணங்களின்படி இந்த உச்சபட்ச அளவு 4°, 56'. இந்தக் கணிப்பின்போது நிலவின் mean distance அபோஜியில் இருந்து 90 டிகிரியாக இருக்கும். பிற நேரங்களில் இந்த கோண விலகல் குறைவாக இருக்கும்.

14. சயாமிய ஆவணம் இந்தக் கணக்கீடுகளோடு முடிகிறது. இந்த வானவியலாளர்கள் பிற கணக்கீடுகளை எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதுபற்றி எதுவும் விளக்கவில்லை. அந்தக் கணக்கீடுகளை அவர்கள் ஜோதிட விஷயங்களுக்காக மேற்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த அட்டவணைகளை விளக்கிச் சொன்னதற்கு நாம், எம். காஸினிக்குத்தான் நன்றி தெரிவிக்கவேண்டும். அவர் இதுபற்றிக் கூறும்போது அந்தக் கணக்குகள் சியாம் மெரிடியனை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படவில்லை. மேலே குறிப்பிட்டிருக்கும் தீர்க்கரேகையில் இருந்து சூரியனை 3’ அளவும் நிலவை 40’ அளவும்  நகர்த்திக் கணக்கிட்டிருக்கின்றன. அந்த அட்டவணைகளின் மெரிடியன் சியாமுக்கு மேற்கே 1h, 13' or 18°, 15'. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இது பழங்கால இந்தியர்களின் வானவியல் மையமான பனாரஸின் மெரிடியனுக்கு வெகு அருகில் வந்துவிடுகிறது. அது இந்துக்கள் தங்களுடைய முதல் மெரிடியனாகக் குறிப்பிட்டிருப்பதை ஒத்ததாக இருக்கிறது. அது சிலோன் மற்றும் ராமேஸ்வரக் கடற்கரையோரமாகச் செல்கிறது. இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறதென்றால் இந்த சியாமிய அட்டவணைகள் இந்துஸ்தானில் சுயமாக உருவாகித்தான் வந்திருக்கவேண்டும்.

15. இன்னொரு வானவியல் அட்டவணையானது 1750-ல் மறைந்த திரு எம். தெ லெஸில்க்கு (கர்நாடகப் பகுதியில் கிருஷ்ணாபுரத்தில் இருந்தவர்)  ஃப்ரெஞ்சுக்காரரான து சாம்ப் அனுப்பியது. அது தற்போது அகாதமி ஆஃப் சயின்சஸில் இருக்கிறது. மேலே விவரித்திருக்கும் அட்டவணைக்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மேலும் அதைவிட வானவியல் அறிவு மிகுந்ததாகவும் இருக்கிறது. மொத்தம் 15 அட்டவணைகள் இருக்கின்றன. சூரியன், சந்திரன், கிரகங்கள் ஆகியவற்றின் இயக்கங்கள், சூரிய சந்திரனின் மையச் சமன்பாடு, அனைத்து கிரகங்கள் தொடர்பான இரு திருத்தங்கள் (ஒன்று தோற்ற நிலை, இன்னொன்று விலகல் சார்ந்த கணக்கீடு) ஆகியவை இடம்பெற்றுள்ளன. கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பிராமணர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்ட கோட்பாடுகள், உதாரணங்கள் ஆகியவற்றின் ஃப்ரெஞ்சு மொழிபெயர்ப்புகளும் உடன் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த அட்டவணைகளின் மூல ஆதார காலகட்டம் முந்தைய அட்டவணைகள் அளவுக்குப் பழமையானது அல்ல. 1491, மார்ச், 10 சூரிய உதய நேரம். சூரியன் மாறும் ராசிமண்டலத்தினுள் நுழையும் நேரம். பூமியில் இருந்து பார்க்கும்போது நிலவுக்கு நெருக்கமாக இருப்பது போன்று தோன்றும் நிலை. இந்த இரண்டு மாறுபட்ட நிலைகளை அடிப்படையாக வைத்து இந்திய சகாப்தங்கள் அனைத்துமே வித்தியாசப்படுத்தபடுகின்றன.

3 சூரியன், நிலவு இரண்டும் இருக்கும் இடங்களாகச் சொல்லப்படுபவையெல்லாம் மேயர், தெ லா காலி ஆகியோர் கணக்கிட்டுச் சொன்னவற்றோடு பெரிதும் ஒத்துப்போகின்றன. நகர்வுகளின்போது சொல்லப்படும் அளவுகள் இவற்றிலிருந்து கொஞ்சம் மாறுபடுகின்றன. எனினும் கிரகணம் போன்றவற்றைக் கணக்கிடுவதில் எந்தப் பிழையும் அவர்களுடைய கணிப்பில் நேர்வதில்லை.

சூரியனின் அபோஜியானது நட்சத்திரங்களைவிட ஒன்பது ஆண்டுகளுக்கு 1’’ என்ற கணக்கில் வேகமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது உண்மையல்ல. எனினும் இந்திய வானவியல் ஆராய்ச்சியின் சுயம்புவான தன்மைக்கு வலுவான ஆதாரமாக இது இருக்கிறது.  சயாமிய அட்டவணையில் இருந்து சூரியனின் மையச் சமன்பாட்டுக் கோணமானது மாறுபட்ட அளவாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த அட்டவணையில் அது 2°, 10', 30;  நிலவின் மையச் சமன்பாட்டுக் கோணம் 5°, 2', 47; அதன் பாதை சூரியனுடைய பாதையைக் குறுக்கிடும் இடத்தில் ஏற்படுத்தும் கோணம் 4°, 30'. நிலவின் அபாஜி, சூரியனுடன் நேர்கோட்டில் வரும்போதான புள்ளி இரண்டும் கிட்டத்தட்ட மிகச் சரியாகவே கணிக்கப்பட்டுள்ளன.   

16. இன்னொரு வானவியல் ஆவணம் பிரெஞ்சுக்காரரான படோலியே மூலம் எம்.தெ எல்ஸிலுக்கு அனுப்பப்பட்டது. கிருஷ்ணாபுரத்தில் இருந்து வந்த ஆவணம் அனுப்பபட்ட அதே காலகட்டத்தில்தான் இதுவும் அனுப்பப்பட்டிருந்தது. எந்தக் குறிப்பிட்ட இடம் பற்றிய தகவலும் அதில் இல்லை. 16°, 16', தீர்க்கரேகை அடிப்படையில் ஒரு நாளின் பகல் பொழுதின் நீளத்தைக் கணக்கிட்டிருப்பதில் இருந்து அந்த இடம் நரசிங்கபுரமாக (Narsapur) இருக்கும் என்று எம்.பெய்லி குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த அட்டவணைகளுடன் அனுப்பப்பட்டிருக்கும் வானவியல் கோட்பாடுகள் உதாரணங்கள் எல்லாம் சூரிய, சந்திர கிரகணங்களைக் கணிக்கும் வழிமுறைகளைப் பற்றியதாகவே இருக்கின்றன. ஆனால், அட்டவணையில் கிரகங்களின் நகர்வுகள் பற்றியும் இடம்பெற்றிருக்கின்றன. கிருஷ்ணாபுரத்து அட்டவணைபோலவேதான் இவையும் இருக்கின்றன. ஆனால், அதுபோல் விரிவாக இல்லை. பெரிதும் புதிரான அம்சங்கள் கொண்டதாகவும் இருக்கிறது.

இந்த அட்டவணைகளின் மூல ஆதாரக் காலகட்டம் 1569, மார்ட், 17 - 18க்கு இடைப்பட்ட நடு இரவு என்று எம். பெய்லி கண்டுபிடித்துக் குறிப்பிட்டிருக்கிறார். அதிலிருந்து சியாம் அட்டவணையைப் போலவே சூரிய, சந்திரனின் இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியே இருக்கின்றன. நிலவின் நகர்வு சார்ந்த திருத்தமானது நிலவைச் சார்ந்தது அல்ல; சூரியனைச் சார்ந்தது என்ற அடிப்படையில் அமைந்திருந்தது. சூரியனின் நகர்வுக்கு நேர்விகிதத்தில் அது இருக்கிறது. பத்தில் ஒரு பங்காகவும் இருக்கிறது. நரசிங்கபுர அட்டவணைகள் சூரியனுடைய ஆண்டு சுழற்சி சமன்பாட்டை மட்டுமே குறிப்பிட்டிருக்கின்றன. ஆனால், இது மட்டுமே அவர்களுடைய தவறு அல்ல.ஏனென்றால் நிலவின் தீர்க்கரேகையுடன் இதைக் கூட்டிக் கணக்கிடுகிறார்கள். உண்மையில் அதைக் கழித்துக் கணக்கிடவேண்டும்.

இந்த பிழை எப்போதிலிருந்து கணக்கீடுகளுக்குள் வந்ததுஎன்பது தெரியவில்லை. இது பெரிய தவறு இல்லைதான். ஆனால், இந்த அட்டவணையை உருவாக்கிய வானவியலாளர்கள் இதை எப்படிச் செய்தார்கள். இவற்றின் இருப்பைக் கணிக்க முடிந்த அவர்களால் இந்த அளவைக் கூட்டிக் கணிக்க வேண்டுமா கழித்துக் கணிக்க வேண்டுமா என்பதை எப்படிப் புரிந்துகொள்ள முடியாமல் போனது என்பது ஆச்சரியம்தான். இந்தத் தவறுக்கு வேறு ஏதோதான் காரணமாக இருக்கும். ஆனால், நிலவின் நகர்வில் தென்படும் இந்த விலகல் நிலைகள் பற்றி இந்தியாவுடன் தொடர்பில் இருந்த எந்த நாட்டு வானவியல் துறையிலும் இருந்திருக்கவில்லை. அதிலிருந்து இது இந்தியாவின் சுயமான கண்டடைதல் என்பது உறுதிப்படுகிறது.

வரலாறு தொடரும்...வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)