பதிவு செய்த நாள்

05 ஆக் 2018
14:05
பெருந்தேவி கவிதைத் தொகுதி - கலந்துரையாடல்.

  நேற்று மாலை திருவல்லிக்கேணி பரிசல் புத்தக நிலையத்தில் கவிஞர் பெருந்தேவியின் ‘பொன்கொன்றை பூக்க வந்த பேய் மழை’ நூல் குறித்த உரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்தேவி, பிரவீன் பஃறுளி,கவிஞர் மண்குதிரை ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரவீன் பஃறுளி, மண்குதிரை தொகுப்பு குறித்து சிறப்புரையாற்றினர். வாசகர்கள் கவிதை வாசிப்புடன் நிகழ்வு தொடங்கியது.

காலதீதமாய் இயங்கும் மனநிலை:

பிரவீன் பஃறுளி தொகுப்பு குறித்த தனது மனப்பதிவை உரையாக நிகழ்த்தினார். இதில் கலையென்பது பூமியின் நீர்ம ஓட்டத்திற்கெதிரான விசையுடன் இயங்குவது என தெரிவித்தார். மரபு நவீனம் என்பதை தாண்டி காலாதீதமாய் மனிதனுக்கு கடத்தப்படும் தொல் உணர்வுகளின் அழகியல் மீது இக்கவிதைகள் இயங்குகிறது. கால எல்லையால் வரையறுக்க இயலாத ஒரு மனதின் பதிவுகள் இக்கவிதைகள். தொன்னூறுகளுக்குப் பிறகு கவிதைகள் அதீதமான உரைநடை தன்மையை அடைந்திருக்கிறது. இம்மாற்றம் இலக்கியத்தின் பிற வடிவங்களிலும் நிகழ்ந்துள்ளது. எனினும் அவை சிறுகதை, நாவல் என்ற தளங்களில் பேசப்பட்ட அளவிற்கு கவிதைகொண்டு பேசப்படவில்லை. மீண்டும் மரபிலிருந்து வரும் குரலின் நீட்சியாக இக்கவிதைகள் இருப்பது சமகாலத்திலிருந்து ஒரு விலகலாக உள்ளது. ஒரு இலக்குநோக்கி செலுத்தப்படும் அம்புகளாக இக்கவிதைகளின் குவிமையம் அமைந்துள்ளது. காதலில் இருக்கக் கூடிய உணர்வுகளான ஒரு மன்றாடுதல், இறைஞ்சுதல், சுயசிதைவு ஆகியவற்றை இக்கவிதைகளில் ஊடாடுகின்றது. இதிலிருந்து விலகி அனைத்தையும் வேடிக்கை பார்க்கக் கூடிய மனமும் இதில் இயங்குவதை சில கவிதைகளில் காணமுடிகிறது. நமது வலிகள் கவிதைகளில் கடத்தப்படும் போது அது ஒரு நாடகமாக உருமாறுவதை காணமுடிகிறது. உலகம் தழுவிய ஒரு நம்பிக்கையும் இக்கவிதைகளின் ஆன்மாவாக உலவுகிறது. இத்தொகுப்பின் மற்றொரு சிறப்பம்சமாக திகழ்வது இவை இயங்கும் தளம் முழுவதும் ஒரு கற்பனை உலகைச் சார்ந்தது. படைப்பாளரின் நேரடியான மனநிலை இதில் எங்கும் வைக்கப்படவில்லை. இது மற்றைய தொகுப்பிலிருந்து ஒரு சிறிய ஆசுவாசத்தை அளிக்கிறது.

வேறு அவதாரம் இது:

இதனை தொடர்ந்து நூல் குறித்த தனது கட்டுரையை மண்குதிரை வாசித்துக் காட்டினார். பெருந்தேவி முற்றிலும் தன்னுடைய அடையாளத்திலிருந்து விலகி இத்தொகுப்பை எழுதியுள்ளார். அவருடைய மற்ற தொகுப்பிலிருந்து இதனை காணும்போது இதில் அவரின் மொழி பயன்பாடு மாற்றமடைந்துள்ளது. தன்னுடைய பாடுபொருளை மாற்றியுள்ளார். அனைத்தையும் ஒரு பகடி கிண்டலுடன் அணுகக்கூடிய தன் பாணியிலிருந்து விலகி ஒரு காதலின் பித்து நிலையில் இக்கவிதைகளை எழுதியுள்ளார். தொண்ணூறுகளில் கைவிடப்பட்ட ஒரு நீட்சியை தனது கவிதைகளில் கைகொள்ள முயற்சித்திருக்கிறார். ராமனின் பல அவதாரங்களைப் போல இது பெருந்தேவியின் கிருஷ்ணா அவதாரம் என்று கருதுகிறேன். இவ்வாறாக தனது கட்டுரையை முடித்தார்.

கவிஞர் பெருந்தேவி ஸ்ரீவள்ளியின் மீது தனது விமர்சனத்தையை வைப்பதாக கூறி அந்தப் பருவத்தின் மனநிலை குறித்து விளக்கி தனது ஏற்புரையை தனது பகிர்வாக நிகழ்ச்சியை முடித்தார்.

-ஞா.தியாகராஜன்

 வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)