பதிவு செய்த நாள்

06 ஆக் 2018
15:33

பிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 5
(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)

ஆசிரியர் : தரம்பால்
தமிழில்  : B.R.மகாதேவன்

17. இதுவரை விவரிக்கப்பட்டிருப்பவற்றிலேயே, பிராமணர்களின் வானவியல் அட்டவணைகள், வழிமுறைகள் எல்லாம் பலவகைகளில் ஆச்சரியமூட்டுபவை. சூரிய வருடமானது அவர்களைப் பொறுத்தவரையில் 12 சமமற்ற மாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் என்பது ராசி மண்டலத்தின் ஏதேனும் ஒரு ராசியில் நகர அல்லது நீள்வட்டப்பாதையில் 30 டிகிரி நகர எடுத்துக்கொள்ளும் காலகட்டம். ஜூன் மாதத்தில் (தமிழில் ஆனி மாதம்) அதாவது சூரியன் மூன்றாவது ராசியில் இருக்கும்போது அதன் வேகம் மிகவும் குறைவாக இருக்கும். அந்த மாதம் 31d, 36h, 38' கால அளவைக் கொண்டது. ஒன்பதாவது ராசியில் டிசம்பர் அல்லது மார்கழி மாதத்தில்  சூரியனின் வேகம் மிகவும் அதிகமாக இருக்கும். அந்த மாதம் 29d, 20h, 53' கால அளவைக்கொண்டது.

இந்த மாதங்களின் கால அளவானது 24 மணிநேரங்களைக் கொண்ட நாட்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் அபோஜி மற்றும் மையச் சமன்பாடு கோணம் ஆகியவற்றை உள்ளடக்கியவையாக இந்த அட்டவணைகள் இருக்கின்றன. ராசிக்கட்டத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து சூரிய அதி விலகல் புள்ளி 77 டிகிரி விலகி இருப்பதுபோல் தெரிகிறது. இரண்டாவது விலகல் கோணம் முந்தைய அட்டவணைகளைப் போலவே 2°, 10' அளவில் இருக்கிறது.

அவர்களுடைய கணிப்புகளில்  24 மணி நேரம் கொண்ட இயல்பான நாட்கள் (நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கிக் கணக்கிடப்படுவது) நீங்கலாக சூரியன் ஒரு டிகிரி நகரும்போது ஒரு நாளைக் கணக்கிடும் வானவியல் நாட்களையும் (மதியம் 12 மணியை நாளின் தொடக்கமாகக் கணக்கிடுவது) கணக்கிட்டிருக்கிறார்கள். அதன்படி ஒரு ஆண்டுக்கு 360 நாட்கள் மட்டுமே வரும்.

18. இந்த அட்டவணைகள் மிகப் பழங்காலத்தையும் கணக்கிட்டுள்ளன. கிறிஸ்து பிறப்பதற்கு 3102 ஆண்டுகள் முந்தைய காலத்தில் தொடங்கிய கலியுகம் என்பது அவர்களுடைய முக்கியமான யுகமாகக் கணக்கிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சூரியன் வானில் இருக்கும் இடத்தைக் கணக்கிட அந்த நாளுக்கும் கலியுகத்தின் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலத்தை நாட்களாக்கிக் கொண்டு அந்த வருட அளவை 365d, 6h, 12', 30 ஆல் பெருக்கி 2d, 3h, 32', 30 ஐக் கழித்துக் கணக்கிடுகிறார்கள். அப்படியாக வானவியல் யுகமானது இயல்பான யுகத்தில் இருந்து அந்தக் கால அளவு காலந்தாழ்த்தித் தொடங்குகிறது.

அதற்கு அடுத்ததாக அவர்கள், சில வகுத்தல் கணக்குகள் செய்து குறிப்பிட்ட வருடம் எப்போது தொடங்கியது என்றோ அது தொடங்கி எத்தனை நாட்கள் கழிந்திருக்கிறது என்பதையோ கணக்கிட்டுக் கொள்கிறார்கள். அதன் பிறகு அந்த மாத அளவை வானவியல் மாதங்களாக மாற்றிக்கொள்கிறார்கள். ராசிக்கட்டத்தின் மூலம் சூரியனின் தீர்க்கரேகையையும் இதன் மூலம் கண்டுபிடிக்கிறார்கள். 
19. கிட்டத்தட்ட இதுபோலவே ஆனால், கொஞ்சம் சிக்கலான கணக்குகளின் மூலம் குறிப்பிட்ட காலத்தில் நிலவின் இருப்பிடத்தையும் கணிக்கிறார்கள். கலியுகத்தின் தொடக்கத்தில் நிலவு எங்கு இருந்தது என்பதன் அடிப்படையில் இதைக் கண்டுபிடிக்கிறார்கள். நிலவின் நகர்வு அது பூமியில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் புள்ளிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தக் கணக்கிடுகள் மிகவும் சிக்கலாக இருக்கின்றன. இந்தக் கணிப்பின்படி மேலே சொல்லப்பட்ட கலியுகத்தின் தொடக்க காலத்தில் இருந்து 1,600,894 நாட்களுக்குப் பின் நிலவு தனது அதி தொலைவுப் புள்ளியில் ராசி மண்டலத்தின் தொடக்கத்தில் இருந்து 7s, 2°, 0', 7 தொலைவில் இருந்தது. 12,372 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நிலவு அதிதொலைவுப் புள்ளியை அடைகிறது. அதன் தீர்க்கரேகை அளவு 9s, 27°, 48', 10 அதிகரிக்கிறது. 3031 நாட்கள் மேலும் ஆனபிறகு மீண்டும் தன் அதி தொலைவுப் புள்ளியை எட்டுகிறது.

இப்போது தீர்க்கரேகை அளவு 11s, 7°, 31', 1 மாறுகிறது. கடைசியாக இன்னும் 248 நாட்கள் கழிந்த பிறகு மீண்டும் அதி தொலைவுப் புள்ளியை எட்டுகிறது.  தீர்க்கரேகையின் அளவு 27°, 44', 6, ஆக இருக்கிறது. முன்பு சொல்லியிருக்கும் மூன்று அளவுகளை வைத்து 248 நாட்களில் நிலவு எவ்வளவு நகர்ந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். தனது சுழற்சிப் பாதையில் ஒரு டிகிரியைக் கடக்க எத்தனை கால அளவை எடுத்துக்கொள்கிறது என்பதைக் கணக்கிட்டு ஒரு ராசிகட்டத்தில் எவ்வளவு தூரம் நகர்ந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். இந்தக் கணக்கீடுகள் முழுக்க முழுக்க இந்திய வானவியலுக்கே உரிய அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது. அதன் துல்லியத்தன்மை குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்ததாக இருக்கிறது. அதோடு அதன் படைப்பூக்கம், செழுமைப்படுத்தப்பட்ட நிலையெல்லாம் அபாரமானவையாக இருக்கின்றன. இவையெல்லாவற்றுக்கும் மேலாக அதன் எளிமை அவ்வளவு சிறப்பாக இருக்கிறது.

20. திருவள்ளூர் வானவியல் அட்டவணைகள் முன்பே விவரித்தவற்றில் இருந்து மாறுபட்டு இருக்கின்றன. என்றாலும் பல அம்சங்களில் ஒத்திசைவுடனும் இருக்கின்றன. ஆண்டுக்கான கால அளவு இரண்டிலும் ஒரே மாதிரியே இருக்கின்றன. ஒரே மாதிரியான சூரிய, சந்திரன் நீள் வட்ட நகர்வு தொடர்பான கோண விலகல் கணிப்புகள், கிட்டத்தட்ட ஒரே மெரிடியனை ஆதாரமாகக் கொண்ட தன்மை ஆகியவற்றில் ஒத்திசைவு காணப்படுகின்றன. ஆனால், கிறிஸ்தவ சகாப்தத்துக்கு 3102 ஆண்டுகளுக்கு முந்தையதாக மூல ஆதார காலகட்டத்தைக் கணிப்பதில்தான் வேறுபாடு காணப்படுகிறது.

எனவே, இந்த யுகக் கணிப்பு உண்மையா, கற்பிதமானதா..? தெளிவான அந்நேரத்தைய நேரடி ஆய்வின் மூலம் உருவாக்கப்பட்டதா... பிற பிந்தைய கால யுக கணிப்பு அட்டவணைகளில் இருந்து இந்தப் பழங்கால யுகம் பின்னோக்கிக் கணக்கிட்டுக் கணிக்கப்பட்டதா என்ற விஷயங்களை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். ஏனென்றால், பிற்காலத்தில் வான் ஆராய்ச்சி மேற்கொண்ட பிராமணர்கள் அல்லது பிற நாடுகளில் இருந்து வானவியல் அறிவைப் பெற்றுக்கொண்ட அவர்கள் கலியுகம் என்ற பழங்கால யுகத்தைக் கற்பனையாகக் கணித்திருக்கக்கூடும். அதன் அடிப்படையில் வானத்து நட்சத்திரங்கள், கிரகங்களின் இருப்பிடங்களைப் பின்னோக்கில் கணக்கிடுதல் முறையில் கணக்கிட்டுவிட்டு முன்னோர்கள் எல்லாம் அதை அன்றே ஆராய்ந்து சொன்னதாகச் சொல்லியிருக்க வாய்ப்பு உண்டு.

வரலாறு தொடரும்...வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)