போர் தொடங்கப்போகிறது. அதற்கான ஏற்பாடுகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. தலைவன் பெரும் வீரன்; தன்னுடைய நாட்டைக் காக்கப் போருக்குப் புறப்படுகிறான். அவன் பிரிவதையெண்ணித் தலைவி வருந்துகிறாள்.
'கவலைப்படாதே; நான் விரைவில் திரும்பி வந்துவிடுவேன்' என்று அவளுக்கு உறுதியளிக்கிறான் தலைவன்.
விரைவில் என்றால் எப்போது?
'கார்காலத்துக்குள் (மழைக்காலத்துக்குள்) வந்துவிடுவேன்' என்று சொல்லிவிட்டுக் கிளம்புகிறான் அவன்.
தலைவிக்கு அவனைப் பிரிய மனமில்லை; அதேசமயம், அவனுடைய கடமையைப் புரிந்துகொள்கிறாள். அவன் திரும்பிவரும்வரை காத்திருக்கிறாள்.
அங்கு, அவனுக்கும் அவளுடைய நினைவுதான்; ஆனால், கடமையாற்றுகிறான். திரும்பிவரும் நாளை எண்ணிக் கொண்டிருக்கிறான். கார்காலம் நெருங்குகிறது. அவன் ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறான்.
இதற்கிடையில், அங்கு காத்திருக்கும் தலைவி தன்னைச் சுற்றியிருக்கும் இயற்கைக் காட்சிகளைப் பார்க்கிறாள். கார்காலம் வரப்போகிறது என்று உணர்கிறாள். தலைவன் இன்னும் வரவில்லையே என பிரிவுத்துயரத்தால் வாடுகிறாள்.
அப்போது, தலைவியின் தோழி அவளுக்கு ஆறுதல் சொல்கிறாள், 'அவர் விரைவில் வந்துவிடுவார்' என்கிறாள். ஆனால், தலைவியின் வருத்தம் தீரவில்லை; மீண்டும் தலைவனைக் கண்டால்தான் அவளுக்கு மகிழ்ச்சி.
இக்காட்சிகள் அனைத்தும், அகத்திணைகளில் ஒன்றான 'முல்லை'த்திணைக்கு உரியவை. இதற்கான இலக்கணம், 'இருத்தலும் இருத்தல் நிமித்தமும்...'. அதாவது, பிரிவின்போது தன்னை ஆற்றிக்கொண்டு இருத்தல்.
அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை போன்ற எட்டுத்தொகை நூல்களில் முல்லைத்திணையில் அமைந்த பல சிறப்பான பாடல்கள் உள்ளன; இவற்றுடன், பத்துப்பாட்டில் ஒரு முழு நூலும் முல்லைத்திணையில் அமைந்துள்ளது, இந்நூலின் பெயரே 'முல்லைப்பாட்டு'. இதனை எழுதியவர் நப்பூதனார்.
எட்டுத்தொகை நூல்களுக்கும் பத்துப்பாட்டு நூல்களுக்கும் முதன்மையான வேறுபாடு, அளவுதான். அதாவது, எட்டுத்தொகைப் பாடல்களில் அடிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்; பத்துப்பாட்டில் இடம்பெறும் பாடல்களில் அடிகளின் எண்ணிக்கை மிகுதியாக இருக்கும்.
முல்லைப்பாட்டு மழைக்கால வர்ணனையுடன் தொடங்குகிறது. முதிய பெண்கள் வணங்குகிறார்கள். நல்ல சொற்களுக்காகக் காத்திருக்கிறார்கள். தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவியைத் தேற்றுகிறார்கள்.
அதே நேரத்தில், அங்கு போர்க்களத்தில் பாசறை அமைக்கப்படுகிறது. வீரர்கள் அணிவகுக்கிறார்கள். அங்குள்ள மன்னனின் இருப்பிடம் விவரிக்கப்படுகிறது; அங்குள்ள காவலர்கள், நாழிகைக்கணக்கர்கள், யவனர்கள், மிலேச்சர்களை (வெளிநாட்டினர்) விவரித்துப் பின்னர் மன்னனுடைய மனநிலை பேசப்படுகிறது; போரில் அவன் எதிரிகளை வெல்வது சொல்லப்படுகிறது.
இங்கு தலைவியோ, அவனைப் பிரிந்து வருந்துகிறாள். அக்காட்சி நெகிழ்வோடு விவரிக்கப்படுகிறது.
அவளுடைய வருத்தத்தைத் தீர்ப்பதற்காகத் தலைவன் வருகிறான்; அவனுடைய தேர் வருகிற முல்லை நிலத்தை அழகாக வர்ணித்து முல்லைப்பாட்டு நிறைவடைகிறது.
இயற்கை வர்ணனை, மன உணர்வுகள் என, அனைத்தும் சிறப்பாக அமைந்த முல்லைப்பாட்டு நாம் வாசித்து அனுபவிக்கவேண்டிய நல் இலக்கியம்!
- என். சொக்கன்