பதிவு செய்த நாள்

08 ஆக் 2018
15:43

பிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 6
(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)

ஆசிரியர் : தரம்பால்
தமிழில்  : B.R.மகாதேவன்

21. பிராமணர்கள் தமது வானவியல் அட்டவணைகளைப் பின்னோக்கிக் கணக்கிட்டு உருவாக்கியிருக்கும்பட்சத்தில் அவர்களுடைய அந்த ஏமாற்று வேலையைக் கண்டுபிடிப்பதற்கான தடயங்களும் இருந்திருக்கவேண்டும். ஆனால், வானவியலில் அதி உயர்ந்த நிபுணத்துவம் இருந்தால் மட்டுமே இப்படியாக சுமார் 46 நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நட்சத்திரங்கள், கிரகங்கள் எங்கு இருந்தன என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.

ஐரோப்பாவின் நவீன வானவியல் துறையானது தொலைநோக்கிக் கருவிகள், இன்ன பிற வானியல் கருவிகள் இருந்த பிறகும் இப்படிக் கடினமான ஒரு பணியைச் செய்ய முடிந்திருக்கவில்லை. கடைசியில் புவியீர்ப்பு விசைக் கோட்பாடு, நூற்றுக்கும் மேலான ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்ட இண்டக்ரல் கால்குலஸ் போன்றவை மட்டும் இல்லாவிட்டிருந்தால் வானியல் தொடர்பான உண்மைகளைப் புரிந்துகொண்டிருக்க முடியாது. சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் நகர்வுகள், இருப்பிடங்கள், அவற்றைக் கணக்கிடத் தேவையான மாறிலிகள், திருத்தங்கள், கோண விலகல்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுதல்களைச் செய்துகொண்டு கணித்தால்தான் இந்த அட்டவணைகள் தரும் தகவல்கள் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும். இல்லையென்றால் இவை தரும் தரவுகள் பிழையான வானவியல் தகவல்களாகவே இருக்கும்.

இப்படியான கால நகர்வுக்கு ஏற்ற திருத்தங்கள் செய்வதில் சரியாக இருந்தாலும் சூரிய, சந்திர, கிரக நகர்வுகளின் கோண விலகல்களைச் சிறிது தவறாகக் கணித்தாலும் அடுத்தடுத்த கால கணிப்புகளில் பிழை அதிகரித்துக் கொண்டே போய் நாம் கணிக்கும்போது பெரிய பிழையாக வந்து நிற்கும். எனவே, ஒரு வானவியல் அட்டவணையானது எந்தக் காலகட்டத்திய நேரடி ஆராய்ச்சியின் மூலம் உருவாக்கப்பட்டது என்பது தெரியவில்லையென்றால்,   எந்தக் காலகட்டத்து வானியல் நிகழ்வுகளை அது கிட்டத்தட்டத் துல்லியமாகக் காட்டுகிறதோ அந்தகாலகட்டத்தையே அந்த அட்டவணையின் காலமாக எடுத்துக்கொள்ளலாம்.

எனவே, இந்த இடத்தில் நாம் இந்திய வானவியலானது மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தது என்ற கருதுகோளின் நம்பகத்தன்மையைப் பரிசோதித்துப் பார்ப்போம். நமது வானவியலானது குறைகளற்றது என்று சொல்லமுடியாதுதான். என்றாலும் பெரிய தவறுகள் எதுவும் இல்லாமல் கலியுகம் போன்ற மிகப் பழமையான காலத்து வானத்து நிகழ்வுகளைக்கூட துல்லியமாகக் கணிக்க முடியக்கூடியது என்ற நம்பிக்கையில் இதைச் செய்ய வேண்டும்.

நமது ஆய்வுகள் விரிவான ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது; அந்த ஆராய்ச்சிகளில் சில மிகவும் பழங்காலத்தைச் சேர்ந்தவை. பிற காலகட்டக் கணிப்புகளைப் போலவே நம் பழங்காலக் கணிப்புகளும் துல்லியமானவையே. பிற துறைகளில் இருந்து கிடைத்திருக்கும் நிபுணத்துவம் ஆகியவற்றை நம் ஆய்வுகளுக்கான தெளிவான, வலுவான பின்புலமாக வைத்திருக்கிறோம். இவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்திய வானவியல் அட்டவணைகளை ஆராய்வோம்.

22. பிராமணர்கள் தங்களுடைய கலியுகத்தின் தொடக்கத்தில் மாறும் ராசி மண்டலத்தின் தொடக்கமாக வெர்னல் ஈக்வினாக்ஸ்க்கு (சம பகல் இரவு நாளுக்கு) 54 டிகிரி முன்பாக குறித்திருக்கிறார்கள். அதாவது நமது வானவியல் கணிப்பின் அடிப்படையில் பார்த்தால் 10s, 6° தீர்க்க ரேகையாகக் குறித்திருக்கிறார்கள். எம் லெ ஜென்டில் இந்திய ராசி மண்டலத்தின் வரைபடம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நட்சத்திரங்களுடைய இருப்பிடங்களை ஓரளவு துல்லியமாக கணித்துவிட முடியும்.   அல்டிபேரன் (Aldebaran) அதாவது தாரஸின் முதல் நட்சத்திரமானது  நான்காவது நட்சத்திரத் தொகுப்பின் கடைசி டிகிரியில் குறிக்கப்பட்டிருக்கிறது அதாவது ராசி மண்டலத்தின் தொடக்கக் கட்டத்தில் இருந்து 53°, 20' அளவில் குறிக்கப்பட்டிருக்கிறது. 

எனவே, இந்திய வானவியல் கணிப்பைப் பொறுத்தவரையில், கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் அல்டிபேரன் நட்சத்திரமானது வெர்னல் ஈக்வினாக்ஸுக்கு 40' முன்பாக இருந்திருக்கிறது.  ஆனால் அதே நட்சத்திரமானது இன்றைய நவீன வானவியல் ஆராய்ச்சியின்படி 1750-ம் வருடத்தில் தீர்க்க ரேகை 2s, 6°, 17', 47 யில் இருக்கிறது. சம பகல் இரவு நாளின் முன்னகர்வு ஆண்டுக்கு 50 என்ற அடிப்படையில் பின்னோக்கிக் கணக்கிட்டுப் பார்த்தால் அந்த நட்சத்திரமானது கலியுகத்தில் சம பகல் இரவு நாளின் கோணத்துக்கு 1°, 32' முன்னதாக இருக்கும். ஆனால் இந்த முன்னகர்வு தொடர்பான மாறுதல் பற்றிய எம். தெ லே க்ராஜெ (M. De La Grange) மேற்கொண்ட வானவியல் ஆராய்ச்சியின்படி இந்த முடிவைக் கொஞ்சம் திருத்த வேண்டி இருக்கும். அதாவது அல்டிபேரனின் தீர்க்க ரேகை அளவுடன் 1°, 45', 22 ஐச் சேர்த்துக் கணக்கிட வேண்டும்.  அப்படி செய்தால்  கலியுகத்தின் தொடக்கத்தில் அந்த நட்சத்திரத்தின் தீர்க்க ரேகையானது வெர்னல் ஈக்வினாக்ஸில் இருந்து 13' விலகி இருக்கும். அதாவது இந்திய வானவியல் கணிப்பின்படியான 53' க்கு ஏகதேசம் ஒத்திசைவுடன் இருக்கும்.

இந்த ஒத்திசைவானது மிகவும் அபாரமானது. பிராமணர்கள் பிற்காலத்தில் வானத்தை நேரடியாக ஆராய்ந்து அதில் கிடைத்த வானவியல் கணிப்புகளின் அடிப்படையில் பின்னோக்கிக் கணக்கிட்டிருந்தால் இப்படிச் சரியாகக் குறிப்பிட்டு இருக்க முடியாது. நிலையான நட்சத்திரங்களின் நகர்வாக ஆண்டுக்கு  3 க்கு அதிகமாக அவர்கள் குறிப்பதால் 1491 -ல் இருந்து பின்னோக்கி கணக்கிட்டிருந்தால் நிலையாக இருக்கும் நட்சத்திரங்களை அவர்களுடைய கலியுக காலகட்டத்தில் இப்போது குறிப்பிட்டிருப்பதில் இருந்து  4° அல்லது 5°4 டிகிரி குறைவாகவே குறிப்பிட்டிருப்பார்கள். இது பிராமணர்களின் வானவியல் ஆய்வு பற்றிய முக்கியமான உண்மையை அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது. இந்த ஒரே ஒரு ஆதாரம்தான் இருக்கிறது என்ற நிலை இருந்தால்கூட இந்திய நேரடி வானவியல் ஆராய்ச்சியானது கலியுகம் என்று சொல்லப்படும் காலகட்டம் அளவுக்கு நிச்சயம் பழமையானதுதான். பிந்தைய கால ஆராய்ச்சிகளை வைத்துக்கொண்டு பின்னோக்கிக் கணக்கிடப்பட்டதல்ல என்பதையே இது உணர்த்துகிறது.

23.  கலியுகத்தின் தொடக்க கட்டத்தில் சூரியனும் சந்திரனும் எங்கே இருந்தன என்பதை  இந்திய வானவியல் அட்டவணைகளைப் பயன்படுத்தியும் நவீன வானவியல் ஆய்வுகளை பயன்படுத்தியும் இப்போது பார்ப்போம்.  முதலில் சூரியனை எடுத்துக்கொள்வோம். இதிலிருந்து எந்தத் தெளிவான இறுதி முடிவுக்கும் வந்து விட முடியாது என்று என்று அது தோன்றக்கூடும். திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணாபுரத்து அட்டவணைகளை ஒப்பிட்டு ஆராய்ந்த எம்.பெய்லி முதலாவது அட்டவணையின் மூல ஆதார காலகட்டமானது கிறிஸ்து பிறப்பதற்கு 3102 ஆண்டுகளுக்கு முன்பான பிப்ரவரி மாதம் 17 - 18 தேதிகளின்  நடு இரவு என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த நேரத்தில்தான் சூரியன் மாறும் ராசி மண்டலத்தினுள் பிரவேசிக்கிறது.  அப்போது அதன் தீர்க்கரேகை 10s, 6°.

ஆனால், வானவியல் அட்டவணைகள் எல்லாம் குறிப்பிடவேண்டிய சூரியனின் கற்பித இடம் (Mean Place) இது அல்ல என்று பெய்லி கருதுகிறார் (Mean Place - சூரியனை பூமியானது நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது. எனவே சூரியனுக்கும் பூமிக்குமான இடைவெளி எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான இடைவெளி மாறாததாக அதாவது பூமி சூரியனை வட்டமான பாதையில் சுற்றுவதாகக் கருதிக்கொண்டு பார்த்தால் சூரியனுடைய இடமாக ஒரு புள்ளி கிடைக்கும். இந்தக் கற்பிதமான புள்ளியே Mean Place எனப்படும்). கற்பித இடத்தில் இருந்து சூரியனின் மைய சமன்பாடு விலகல் அடிப்படையில் விலகி இருக்கும் அதாவது நீள்வட்டப்பாதையில் இருக்கும் உண்மையான இடத்தை (True Place) குறிப்பதாகக் கருதுகிறார். வானவியல் அட்டவணைகளை உருவாக்குவதில் மிகவும் மோசமான, நிபுணத்துவமே இல்லாத கணிப்பு  இது என்பதை  ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.

அது அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொண்டு பார்த்தால் சூரியனின் கற்பித இடமானது கலியுகத் தொடக்கத்தின்போது l0s, 3°, 38', 13 ஆக இருந்திருக்கும். தே லா கய்லேயின் அட்டவணையின்படி அதே காலகட்டத்தில் சூரியனின் கற்பித தீர்க்க ரேகை (Mean Longitude) என்பது, இப்போது போலவே ஈக்வினாக்ஸ் முன்னகர்வு ஆண்டுக்கு 50 என சீராக இருப்பதாக வைத்துக் கொண்டு பார்த்தால், 10s, 1°, 5', 57 ஆக இருந்திருக்கும்.  ஆனால் எம் தே லா கிராண்ஜே என்ன சொல்லி இருக்கிறார் என்றால் இன்றைய  காலகட்டத்தைவிட ஈக்வினாக்ஸின் முன்னகர்தல் பழங்காலகட்டத்தில் குறைவாகவே கணக்கிடப்பட்டிருந்தது. எனவே, அவருடைய தீர்மானத்தின்படி இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சூரியனுடைய தீர்க்க ரேகையுடன் 1°, 45', 22 சேர்த்துக் கணக்கிடவேண்டும். அப்படியானால் அது l0s, 2°, 51', 19, ஆக இருக்கும்.  அதாவது திருவள்ளூர் அட்டவணைகளில் இருந்து 47 மட்டுமே கூடுதல்.

அந்தப் பழங்கால அட்டவணை வெகு பழங்காலத்தைக் குறிப்பிடக்கூடியதுதான் என்பதற்கான வலுவான ஆதாரம் இது. ஆனால், சூரியன் இடத்தை கற்பித இடமாகக் கருதாமல் உண்மையான இடமாகக் கணக்கிட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இந்த கணக்கீட்டுக்கு அதிக மரியாதை தர எனக்கு விருப்பம் இல்லை. நிலவின் இருப்பிடம் பற்றிய கணிப்பில் இப்படியான பிரச்னை எதுவும் இல்லை.

வரலாறு தொடரும்...வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)