பதிவு செய்த நாள்

09 ஆக் 2018
16:37

  


'ஏழையாக இருந்தாலும்...' தள்ளுவண்டியில் நாட்டு காய்கறி விதை மற்றும் தான் எழுதிய கவிதை புத்தகங்களையும் விற்பனை செய்து வரும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த, மன்னை சரஸ்வதி: மன்னார்குடி, புனித சூசையப்பர் நடுநிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலையால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. எங்கள் குடும்பத்தில் எல்லாருமே, கம்யூனிஸ்ட். நான் எப்போதும், ஏதாவது புத்தகத்தையோ, பேப்பரையோ படித்து கொண்டிருப்பேன். 'வீட்டுல வேலை செய்யாம எப்பப் பார்த்தாலும் படிச்சுட்டே இருந்தேன்னா, உன்னோட ரெண்டு கையிலயும் நல்லா சூடு வெச்சுடுவேன்'னு எங்கம்மா என்னை திட்டினார். உடனே அடுப்படி பக்கம் போய், 'நீங்க என்ன எனக்கு சூடு வைக்கிறது... எனக்கு நானே வெச்சிக்கிறேன்'னு சொல்லி, கரண்டிக் காம்பை சுட வைத்து, சூடு வைத்து கொண்டேன். அம்மா பயந்து போய்விட்டார். படிப்பது எனில், எனக்கு அவ்வளவு ஆர்வம்.கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் தாயுமானவருடன், 19 வயதில் திருமணமானது. எங்களுக்கு மூன்று பெண்கள். மூவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டோம். இந்த தள்ளுவண்டி கடையை, கணவரும், நானும் மாறி மாறிபார்த்துக் கொள்வோம். வெண்டை, கொத்த வரங்காய், கத்தரிக்காய், பாகற்காய், புடலங்காய், அவரை, கீரை வகைகள், புளிச்சக்கீரை, வெள்ளரி போன்ற பல வகையான நாட்டுக் காய்கறிகளின் விதைகள் விற்று வருகிறோம்.கடையில் சும்மா உட்கார்ந்திருக்கும் போது, எனக்கு தோன்றும் கவிதையை நோட்டில் எழுதி, பின், அதைத் தொகுத்து வைத்து கொள்வேன்.'செம்மலர்' உட்பட சில இதழ்களில், என் கவிதைகள் வெளிவந்துள்ளன. தற்போதும் நான், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில், மன்னார்குடி நகர தலைவராக உள்ளேன். எங்கள் சங்கத்தின் கலை நிகழ்ச்சிகள், தமிழகத்தில் எங்கு நடந்தாலும், போய் வருவேன். மன்னார்குடி, மேலராஜ வீதியில், என் அம்மா, அப்பா கடையை நடத்தி வந்த இடத்தில், வியாபாரம் செய்து வருகிறோம். அதனால் எங்களுக்கு மன்னார்குடியை சுற்றியும் நிறைய வாடிக்கையாளர்கள் நிரந்தரமாக உள்ளனர்.'நெல் மணிகள்' என்ற தலைப்பில், 2012லும், 'உயிர்த்துளி' என்ற தலைப்பில், 2015லும் கவிதை தொகுப்பை, என் சொந்த செலவில் அச்சடித்து வெளியிட்டேன். அதில் ரொம்பவே பணத்தை இழந்துவிட்டேன். என் போன்ற எளிய வாழ்க்கை வாழும் குடும்பப் பெண்களின் துயரங்களை இதில் பதிவு செய்துள்ளேன். அதுவே எனக்கு ரொம்பவும் மனநிறைவாக இருக்கிறது.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)