தலைப்பு : கிரேஸியைக் கேளுங்கள் : பாகம் - 1
ஆசிரியர் : கிரேஸி மோகன்
பதிப்பகம் : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
விலை : 140/-

பதிவு செய்த நாள்

11 ஆக் 2018
17:29

விஞர் கண்ணதாசன் வாழ்வியல் உண்மைகளை அற்புதமாகத் திரைப்பாடல்களில் பொதிந்து வைத்துப் பாடினார். அவருடைய புகழ்பெற்ற இரு வரிகள் இல்லறத்தின் இலக்கணத்தையே எடுத்துச் சொல்லக் கூடியவை.

‘கேள்வி வரும்போது பதில் ஒன்று வேண்டும்,
கேட்க நினைக்காத மனம் ஒன்று வேண்டும்.’

இதுதானே இல்லறத் தத்துவம்? கணவனோ மனைவியோ யார் இன்னொருவரை என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு நேரடியான ஒரு பதில் வேண்டும். மழுப்பக் கூடாது. அதே நேரம் ஒருவர் மற்றவரைச் சந்தேகப்பட்டுக் கேள்வி கேட்கும் அளவில் இல்லறம் இருக்கக் கூடாது. மற்றவர் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்று, கேள்வி கேட்காமலேயே உணர்கிற நம்பிக்கை பரஸ்பரம் இருக்க வேண்டும்.

இல்லறத்தில் வரும் கேள்விகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று எழுதிய கண்ணதாசன் சில திரைப்பாடல்களையே கேள்வி பதில் பாணியில் எழுதியுள்ளார். ‘ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்குப் பெயர் என்ன?’ என்ற பாடல் கேள்வியும் பதிலுமாக அமைந்த பாடல்.

கேள்வி கேளுங்கள் என்கிறது அறிவியல். கேள்வி கேட்டால்தான் அறிவு வளரும் என்கிறது உளவியல். குழந்தைகள் கேள்வி கேட்கும்போது தடுக்காதீர்கள், அவர்களின் கேள்விகளுக்கு அவர்களுக்குப் புரிகிற மாதிரிப் பொறுமையாக பதில் சொல்லுங்கள் என்கிறார்கள் குழந்தை உளவியல் நிபுணர்கள்.

இல்லறம், வகுப்பறை, நீதிமன்றம் இதெல்லாம் அதிகம் கேள்விகள் கேட்கப்படும் இடங்கள். இவையல்லாமல் அதிகம் கேள்விகளை எதிர்கொள்ளும் ஒரு துறை பத்திரிகைத் துறை!

இன்று கேள்வி பதில் இல்லாத பத்திரிகைகளே இல்லை என்னுமளவு கேள்வி பதில் பத்திரிகைகளை பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. ஏறக்குறைய எல்லாப் பத்திரிகைகளும் இரண்டு பக்கங்களையாவது கேள்வி பதில் பகுதிக்கு ஒதுக்குகின்றன.

இந்தக் கேள்வி பதில் இலக்கிய மரபு தமிழில், சங்க காலத்திலேயே தொடங்கிவிட்டது என்று தோன்றுகிறது. புறநானூற்றில் பிசிராந்தையார், ‘எனக்கு இத்தனை வயதாகியும் ஏன் தலை நரைக்கவில்லை எனக் கேட்பீர்களானால், அந்தக் கேள்விக்கு என் பதில் இதுதான்...’ என்று தொடங்கி ஒரு பாடலை எழுதிச் செல்கிறார். (யாண்டு பலவாக நரையில ஆகுதல் யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்...’ என்ற கேள்வியோடு தொடங்குகிறது அந்தப் பாட்டு.)

இடைக்காலத்தில் இரட்டைப் புலவர்கள் இந்தக் கேள்வி பதில் மரபை வளர்த்தெடுத்தார்கள். இளஞ்சூரியர், முது சூரியர் என்ற அவர்கள் இருவருமே மாற்றுத் திறனாளிகள். ஒருவர் பார்வையற்றவர். இன்னொருவர் கால் முடமானவர். பார்வையற்றவர் கால் முடமானவரைத் தோளில் சுமந்து செல்வார். கால் முடமானவர் வழிகாட்ட, பார்வையற்றவர் சிக்கலில்லாமல் நடந்து செல்வர். இவ்விதம் ஊர் ஊராகப் பயணம் செய்து தமிழி வளர்த்தார்கள் இவர்கள்.

இவர்கள் வெண்பா பாடும் புலவர்கள். நான்கடி வெண்பாவில், ஒருவர் முதல் இரண்டு அடிகளைப் பாட, மற்றவர் அடுத்த இரண்டு அடிகளைப் பாடி வெண்பாவைப் பூர்த்தி செய்வார். இரட்டைப் புலவர்கள் பாடிய வெண்பாக்களின் அழகு என்னவென்றால், பாடப்படும் முதல் இரண்டு அடிகள் கேள்வியாக இருக்கும். இறுதி இரண்டு அடிகள் கேள்விக்கான விடையாக இருக்கும். இப்படி கேள்வி பதில் பாணியில் அந்த வெண்பாக்கள் அமைந்து படிப்பவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.

இலக்கியத்தில் வளர்ச்சி பெற்ற ‘கேள்வி பதில்’ மரபு, இன்றைய பத்திரிகைகளில் இடம் பிடித்துக்கொண்டது. முன்னோடி எழுத்தாளர்களான கண்ணதாசன், கி.வா.ஜகந்நாதன், தீபம் நா.பார்த்தசாரதி, தமிழ்வாணன், சாவி போன்ற பலர் வாசகர்களின் கேள்விகளுக்குத் தங்கள் பத்திரிகைகளில் பதில் சொல்வதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார்கள்.

தமிழ்வாணன் பதில்கள் புள்ளிவிவரத் தகவல்களைக் கூடக் கொடுத்து, அறிவியல் நோக்கில் அமைந்திருக்கும். கண்ணதாசன் தமிழ்நயம் சொட்டச் சொட்டப் பல இலக்கிய ரீதியான கேள்விகளுக்கு பதில் தந்தார். தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்பது போன்ற கேள்விகளுக்குக்கெல்லாம் அவர் நீண்ட பதில்களை அளித்தார்.

கி.வா.ஜ. ‘விடையவன் விடைகள்’ என்ற தலைப்பில் பதிலளித்தார். வெண்பாவில் கேள்வி கேட்டால் வெண்பாவிலேயே பதில் தருவார் அவர். கேள்வி நேரிசை வெண்பாவானால் பதிலுக்கு நேரிசை வெண்பா. கேள்வி இன்னிசை வெண்பாவானால் பதிலுக்கு இன்னிசை வெண்பா.!

தீபம் நா.பார்த்தசாரதி ‘இலக்கிய மேடை’ என்ற தலைப்பில் தீபத்திலும் ‘மணிவண்ணன் பதில்கள்’ என்ற தலைப்பில் தினமணி கதிரிலும் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவரிடம் ஒரு பாராட்டத்தக்க பழக்கமும் இருந்தது. அவர் பேசும் கூட்டங்களில் கேள்விகளுக்கான நேரம் ஒதுக்கப்படுவதுண்டு. வாசகர்கள் நேரடியாகவே அவரிடம் கேள்வி கேட்பதுண்டு. அந்தக் கேள்விகளை கேட்பவரின் முகவரியோடு எழுதி வாங்கிக் கொள்வார் அவர். அந்தக் கேள்விகளுக்கு நேரில் மட்டுமல்லாமல், பத்திரிகையிலும் பதில் தந்துவிடுவார்.

நா.பா.வின் கேள்வி பதில்கள் கமலம் சங்கர் என்ற நா.பா. இலக்கிய ஆய்வாளரால் தொகுக்கப்பட்டு இரண்டு நூல்களாகவும் வந்துள்ளன. தமிழ்நயம் செறிந்த அவரது பதில்கள், பழைய இலக்கியம், நவீன இலக்கியம், அரசியல், சுயமுன்னேற்றம் எனப் பல துறைகளைச் சார்ந்து அமைந்திருந்தன.

சிரிக்கச் சிரிக்க பதில் தந்தவர்களில் பிரபல பத்திரிகையாளரான அமரர் சாவிக்கு முதலிடம் உண்டு. இதுவரை பதில் தெரியாதிருக்கும் வகையில் அவர் எழுப்பிய சில கேள்விகளும் உண்டு!

குதிரை, சிங்கம், புலி போன்றவற்றை அப்படியே தானே சொல்கிறோம்? குதிரை மிருகம், புலி மிருகம் என்று சொல்வதிலையே? அதேபோல காண்டா மிருகத்தையும் காண்டா என்று மட்டும் தானே சொல்ல வேண்டும்? அதை மட்டும் ஏன் காண்டாமிருகம் என அழைக்கிறோம் என்றொரு கேள்வி கேட்டார் சாவி, இன்றுவரை அந்தக் கேள்விக்குப் பதிலைக் காணோம்!

பெண்களின் தலையில் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு சாவி தந்த பதில் : ‘பூ! இது கூடத் தெரியாதா?’ சுருக்கமாக உங்களால் பதில் சொல்ல முடியுமா என்ற கேள்விக்கு மிகச் சுருக்கமாக சாவி தந்த பதில்: ‘ம்!’

சில ஆண்டுகள் முன் காலமான தென்கச்சி கோ.சுவாமிநாதனும் கேள்விகளுக்கு பத்திரிகைகளில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். நகைச்சுவையோடு குட்டிக் கதைகளையும் பல தகவல்களையும் இணைத்துச் சொல்வது அவர் பாணி. மஞ்சரி மாத இதழ் அவரது கேள்வி பதில் பகுதியைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தது.

இன்றும் பற்பல பத்திரிகைகளில் பத்திரிகை ஆசிரியர்களும் பிரமுகர்களும் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்கள். கேள்வி பதில் துறை, இப்போது ஒரு தனி இலக்கிய வகையாகவே வளர்ந்துள்ளது.

இதோ கேள்வி பதில் துறையை மேலும் வளப்படுத்தும் வகையில் இப்போது கல்கியில் கிரேசி மோகன் எழுதிய கேள்வி பதில் பகுதி தொகுக்கப்பட்டு நூலாக வெளிவருகிறது. அவருக்கே உரிய குறும்ப நகைச்சுவையும் இந்நூலில் தொட்ட இடமெல்லாம் மின்னுகின்றன. மிக நீண்ட பதில்களும் சுருக்கமான பதில்களும் கலந்தே காணப்படுகின்றன. (நீண்ட பதில்களை விடச் சுருக்கமான பதில்களே அதிக சுவாரஸ்யமாக இருக்கின்றன.)

அவரது சில எழுத்து வெளிப்பாடுகள் புதிய பாணியில் அமைந்தவை. படிக்க ரசமானவை. கவிஞர் வாலியை, ‘கதர் ஜிப்பா அணிந்த கலைவாணி’ என்பதும் (பக்.12) பூதக்கண்ணாடியை வைத்துத் துருவிப் பார்த்தாலும் சே என்று சொல்ல முடியாத ஒரே எழுத்தாளர் சோ என்பது (பக்.20) உதாரணங்கள்.

பல பதில்களில் கிரேசியின் சொல்லாட்சியில் ரசிக்கத்தக்க சமத்காரத்தை அனுபவிக்க முடிகிறது. எ.கா.:

சமீபத்தில் படித்த புத்தகம்?

“நான் படித்த புத்தகங்களை சமீபத்தில் படித்ததுதான். எதுக்கு வேலைமெனக்கெட்டு தள்ளிவைத்துப் படித்து கண்ணைக் கெடுத்துக்கணும்?”

உங்கள் வெற்றிக்குப் பின்னால் உள்ள பெண்மணி யார்?

“இன்னொருவரின் மனைவி... திருமதி பிரும்மா.”(பக்.23)

சொல் சமத்காரத்தில் ஆங்கிலமும் அவருக்குக் கைகொடுக்கிறது.

தலையெழுத்து, கையெழுத்து என்ன சம்பந்தம்?

“தலையெழுத்து - Nature. மாற்ற முடியாதது. கையெழுத்து - Signature. மாற்றக் கூடாதது.” (பக்.66)

Fast Food சாப்பிட்டுவிட்டு வவுத்துப் போக்கா ஆயிடிச்சு, ஏன்?

“தம்பி நீ சாப்பிட்டது Past Foodனு நினைக்கிறேன். பழையன கழிதல் கேள்விப்பட்டதில்லையா நீ? (பக்.8)”

கோஸ்ட் ரைட்டிங் எழுதியதுண்டா?

“செத்தாலும் மாட்டேன்!” (பக்.8)

வார்த்தை விளையாட்டின் உச்சம் என்று பின்வரும் பதிலைச் சொல்ல வேண்டும்.

டி.வியில் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி?

“காலையில் எழுந்தவுடன் பொதிகையில் வேளுக்குடி. அப்பாலதான் காப்பிக்குடி.”

சில பதில்கள் மெல்லிய முறுவலை வரவழைக்கும் தன்மையையும் தாண்டி, ஆழ்ந்த சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

விவாகரத்துகளைப் பற்றி பேசும்போது விவகாரங்கள் ரத்தானால் விவாகம் ரத்தாகாது என்று எழுதுவதும் இடம். (பக்.7), ஜால்ரா போடுவது, காக்கா பிடிப்பது, பாலிஷ் பண்ணுவது, முகஸ்துதி இவற்றில் எளிதானது எது? என்ற கேள்விக்கு, “இவையெல்லாவற்றையும் விட கவுரமானது ‘அம்மா தாயே’ என்று பிச்சை எடுப்பதுதான்” என்று எழுதும் இடம் ஆகியவை உதாரணங்கள்.

இப்படி இன்னும் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக்கொண்டே போனால், அணிந்துரை இன்னொரு நூலாகிவிடும் அபாயம் இருக்கிறது.

பல பதில்கள் முறுவல் பூக்க வைக்கின்றன. சில பதில்கள் சிந்திக்க வைக்கின்றன. சில பதில்கள் அரிய தகவல்களைத் தருகின்றன.

‘கிரேசியைக் கேளுங்கள்’ என்ற இந்நூல் தமிழில் அதிகம் வளராத கேள்வி பதில் இலக்கியத் துறைக்கு வளம் சேர்க்கும் ஒரு புதிய படைப்பு. இளமையின் துள்ளலும் அறிவு முதிர்ச்சியின் பக்குவமும் ஒருசேரப் பொலியும் ஒரு வித்யாசமான நூல் அது. தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வரவு.

- திருப்பூர் கிருஷ்ணன்.
புத்தகத்தைப் வாங்க
தொடர்புக்கு : சென்னை - 9597800485, புதுச்சேரி - 9597800487, கோவை - 9597800415, மதுரை - 9597800452, சேலம் - 9600969301.

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)