பதிவு செய்த நாள்

14 ஆக் 2018
15:28

 பிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 8
(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)

ஆசிரியர் : தரம்பால்
தமிழில்     : B.R.மகாதேவன்

நிலவின் சுழற்சி வேகத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கணக்கிட எம்.தெ. லா ப்ளேஸ் ஒரு சூத்திரத்தை வடிவமைத்திருக்கிறார். இது கோட்பாட்டுரீதியான கணக்கீடுதான் என்றாலும் மேயர் நேரடியாகப் பார்த்து உருவாக்கிய கணிப்பைவிட மிகவும் துல்லியமாக இருக்கிறது. முந்தைய கணக்கீடுகளுக்குப் பதிலாக இதை நான் பயன்படுத்தினால் நிலவின் இருப்பிடம் தொடர்பான மாறுபட்ட அளவைத் தரும் என்றாலும் அது பொதுவான தீர்மானத்தை பாதிப்பதாக இருக்காது.

கலியுகக் காலகட்டத்தில் இருந்து 4383 ஆண்டுகள் கழித்த பிறகு நிலவின் வேகமானது மேயருடைய கணக்குகளைவிட 17', 39, அதிகமாக இருக்கிறது. எனவே, கிருஷ்ணாபுரத்து வானவியல் அட்டவணைகளில் இருந்து 16', 32, அதிகமாக இருக்கிறது. இவ்வளவு ஒத்திசைவுடனான முடிவுகள் கிடைத்திருப்பது இந்தக் கோட்பாட்டின் துல்லியத்தையும் இந்த அட்டவணைகளின் நம்பகத்தன்மையையும் அழுத்தமாகக் காட்டுகின்றன.

இந்துஸ்தானில் இப்படியான வான் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட காலகட்டத்தில், ஐரோப்பாவின் பெரும்பகுதி மக்கள் வசிக்கத் தொடங்காத வனாந்தரமாக இருந்தது.  அல்லது ஐரோப்பியர்கள் காட்டுமிராண்டிகளாக இருந்தனர். ஐந்தாயிரம் ஆண்டுகள் கழித்து ஐரோப்பியாவில் உருவான வானவியல் ஈர்ப்பு விசை தொடர்பான ஆய்வுகளில் இருந்து கிடைத்த தரவுகள் எல்லாம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய வானவியல் ஆராய்ச்சி முடிவுகளை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. இது, மனித குலத்தின் விஞ்ஞான வளர்ச்சியின் அற்புதமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

29. வானத்து நட்சத்திரம், கிரகங்களின் இருப்பிடங்கள், தோற்ற நகர்வுகள், கற்பித நகர்வுகள் இவற்றில் மட்டுமல்ல, ஆண்டின் கால அளவு, வான் பொருட்களின் நீள் வட்டப் பாதை, சூரிய நகர்வில் இருக்கும் மாறுபாடுகள் ஆகியவற்றை எம். தெ லா கிரான்ஜேயின் கோட்பாடுகளில் இருந்த கிடைத்தவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும் அதே அபாரமான துல்லியமான ஒத்திசைவு இருப்பதைப் பார்க்க முடிகிறது. நமது ஆய்வுகள் இந்திய வானவியல் ஆய்வுகளுக்குப் பெருமளவுக்குக் கடன்பட்டுள்ளன. வானவியல் நிகழ்வுகள் எல்லாமே குறிப்பிட்ட ஒழுங்குக்குள் மீண்டும் அப்படியே நடக்கக்கூடியவை என்ற அவர்களுடைய கண்டுபிடிப்பானது மிகவும் முக்கியமானது. எல்லாமே மாறிக்கொண்டே இருக்கும்; அதே நேரம் இப்போது இருக்கும் அதே நிலைக்குக் குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு திரும்பிவரும்.

எந்தவித மாறுதலும் இல்லாமல் எந்தவித பிழையும் இல்லாமல் அதே பழைய நிலைக்குத் திரும்பும். ஒரு ஆண்டானது அதே கால அளவைக் கொண்டதாக மீண்டும் வருவதற்கு அல்லது சூரியனின் அமைப்பு, நகர்வு அதே போல வருவதற்கு நீண்ட காலகட்டம் (யுகம்) எடுத்துக்கொள்ளும். எனவே, மிகவும் அநாதியானது என்று சொல்லப்படும் இந்திய வானவியல் கணிப்புகள் போன்றவை நம்முடைய நவீன காலக் கணிப்புகளில் இருந்து நிச்சயம் மாறுபட்டே காணப்படும்.

இந்த மாறுபாடுகள் எல்லாம்   ஒரு ஒழுங்குக்கு உட்படாதவையாக இருந்தால் இவற்றைப் பிழையான கணிப்பு என்றே சொல்லவேண்டியிருக்கும். ஆனால், நமது கோட்பாட்டின்படியான முறையான மாறுபாடுகளை அடைந்தால் அவை கணிப்புகளின் துல்லியத்தன்மையை உணர்த்துவதாகவே இருக்கும்.எம். பெய்லி செய்ததுபோலவே நாமும் மேலே சொல்லியிருப்பவற்றில் எது நடக்கிறது என்று பார்ப்போம்.

30. நாம் முன்பே பார்த்தபடி கலியுகத்தைத் தனது மூல ஆதாரக் காலகட்டமாகக் கொண்டிருக்கும் கிருஷ்ணாபுர வானவியல் அட்டவணையில் ஒரு siderial வருடம் என்பது 365d, 6h, 12', 30 அளவைக் கொண்டது. எனவே  அதன் டிராபிகல் வருடம் என்பது 365d, 5h, 50', 35 ஆக இருந்தது. அது தெ லா கைலியின் கணிப்புகளைவிட இது  1', 46 அதிகம். இன்றைவிட டிராபிகல் வருடம் அன்று அதிகம். siderial வருடம் அதாவது பூமி தன் சுழற்சியில் ஒரே இடத்துக்கு மீண்டும் வர எடுத்துக்கொள்ளும் கால அளவு மாறவே செய்யாது. எனினும் டிராபிகல் வருடமானது ஈக்வினாக்ஸ் ப்ரிசிஷனால் சிறிய அளவு பாதிக்கப்படும். அந்த விலகல் 3', 40 ஐ ஒருபோதும் தாண்டாது. மிகவும் மெதுவாகவே அந்த மாற்றம் நிகழும்.

இந்த மாற்றத்தைக் கணக்கிட எம். தெ லா கிரான்ஜே ஓர் அற்புதமான விதிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறார். அதன்படி கிறிஸ்து பிறப்பதற்கு 3102 ஆண்டுகளுக்கு முந்தைய கலியுகமானது இந்த நூற்றாண்டின் தொடக்க வருடத்தைவிட 40½ அதிகம். எனவே திருவள்ளூர் வானவியல் அட்டவணைகளைவிட 1', 5½ அதிகம்.

31. ஆனால், வருடங்களின் கால அளவானது ஒன்றுக்கொன்று நீண்ட இடைவெளி கொண்ட காலகட்டங்களை (யுகங்களை) ஒப்பிட்டுக் கணக்கிடப்பட்டிருக்கிறது. அதில் ஏற்படும் ஒத்திசைவு திருவள்ளூர் வானவியல் அட்டவணைகளில் ஏற்படுவதுபோல் இன்னும் இசைவுடன் இருக்கவேண்டுமென்றால் அந்த ஒப்பீட்டு இடைவெளியானது சில யுகங்களாக இருக்கவேண்டும். எம். பெய்லி என்ன சொல்கிறாரென்றால், கலியுகம் என்று பிராமணர்கள் அடிக்கடிக் குறிப்பிடும் யுகத்துக்கு தொட்டடுத்த 2400 வருடங்களுக்கு முன்பாக இந்த நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், பின்னோக்கி கணக்கிடுகையில் ப்ரிசஷன் ஆஃப் ஈக்வினாக்ஸ் மாறும் என்பதையும் கணக்கில் கொண்டால், அதில் பாதி அளவில் அதாவது கலியுகத்துக்கு முந்தைய 1200 ஆண்டு அளவில் ஒரு ஆண்டின் அளவு 365d, 5h, 50', 41 ஆக இருக்கும். அதாவது திருவள்ளூர் வானவியல் அட்டவணையில் சொல்லப்பட்டிருப்பதுடன் அப்படியே முழுவதுமாக ஒத்துப் போவதாக இருக்கும். இதிலிருந்து சூரிய வருடம் தொடர்பான இந்தக் கணிப்பானது கலியுகத்தில் இருந்து 1200 வருடங்கள் இன்னும் பழமையானது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 4300 வருடங்களுக்கு முந்தையது என்ற முடிவுக்கு இயல்பாக வந்து சேர முடியும் என்று எம். பெய்லி குறிப்பிட்டிருக்கிறார்.

32. எனினும் இந்த முடிவை ஏற்றுக்கொள்வது கடினம். எம்.பெய்லியும் இதை அவ்வளவு உறுதியாக நம்பியிருக்கவும் இல்லை. மேலே குறிப்பிட்டிருக்கும் வேகத்தில்தான் ஈக்வினாக் ப்ரிசிஷன் இருந்திருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

எம். தெ லா கிரான்ஜேயின் சூத்திரத்தின்படிப் பின்னோக்கிக் கணக்கிட்டுப் பார்த்தால், சூரிய வருடத்தின் மாறுபாடானது கலியுகத்தின் தொடக்கத்தில் இந்த மாறுபாடுகளின் உச்சிப்புள்ளியை எட்டியிருப்பதைக் காணமுடியும். பல நூற்றாண்டுகள் கழிந்த பிறகே இந்த நிலையை எட்டியிருக்க முடியும். அந்தப் புள்ளியில் சூரிய வருடமானது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு  அல்லது பல யுகங்களுக்கு முன்பாக இருந்ததுபோல் நீண்ட கால அளவைக் கொண்டதாக இருந்திருக்கும். இன்றைய சூரிய வருடத்தின் கால அளவைவிட 40½  அதிகமாக இருந்திருக்கும்.

ஆனால், கிறிஸ்துவின் பிறப்புக்கு 5500 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த வித்தியாசம் பெய்லியின் கணிப்புப்படியான 2', 50 க்குப் பதிலாக வெறும் 29 மட்டுமே அதிகம். அந்த 2400 ஆண்டு கால இடைவெளியில் ஒரு வருடத்தின் கால அளவில் இருக்கும் வித்தியாசமானது இந்த இரண்டு எல்லைகளுக்கு இடைப்பட்டதாகவே இருக்கும். எனவே பழங்கால அட்டவணைகளில் பிழைகளுக்கான அளவானது 1', 5,க்குக் குறைவாக ஆக வாய்ப்பில்லை. இவ்வளவு சிறிய பிழை என்பது அந்த இந்திய வானவியல் அட்டவணைகள் மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தவையாகவே இருக்கக்கூடும் என்பதோடு அவற்றின் துல்லியத்தன்மையையும் உறுதிப்படுத்துவதாக இருக்கின்றன என்றாலும் இதை வைத்து எந்தத் தீர்மானகரமான முடிவுக்கும் நாம் வந்துவிடமுடியாது.

33. சூரியனின் மையம் தொடர்பான சமன்பாடு இந்திய வானவியல் அட்டவணைகளில் கலியுகக் காலத்துக்கும் முந்தையதாக இருக்கிறது. இந்த அட்டவணைகளில் அந்த சமன்பாட்டின் உச்ச பட்ச புள்ளியாக 2°, 10', 32 இருக்கிறது. எம். தெ லா கைலியைப் பொறுத்தவரை அது 1°, 55½'. அதாவது பிராமணர்களின் கணிப்பைவிட 15' குறைவு. எம். தெ லா கிரான்ஜே குறிப்பிட்டிருப்பதுபோல் பூமியின் நீள்வட்டச் சுற்றுப்பாதையைச் சார்ந்து இருக்கும் சூரியனின் மையச் சமன்பாடு கூடிக் குறைந்து காணப்படும். ஒட்டுமொத்தமாக பல காலமாக அது குறைந்துகொண்டேயும் வந்திருக்கும்.

கிறிஸ்து பிறப்பதற்கு 3102 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த மையச் சமன்பாடானது 2°, 6', 28½ ஆக இருந்திருக்கும். அதாவது பிராமணர்களின் வானவியல் அட்டவணைகளைவிட 4' மட்டுமே குறைவு. கலியுகத்துக்கு முந்தைய காலகட்டத்து நேரடி ஆய்வுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டதாக இருந்தால் இந்த சூரிய மையச் சமன்பாடானது மேலும் ஒத்திசைவுடன் இருக்கும். கலியுகத்துக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்பான ஆய்வு என்றால் அதாவது நமது காலகட்டத்தைவிட 4300 ஆண்டுகளுக்கு முன்பான ஆய்வு என்றால் எம். தெ லா கிரான்ஜேயின் கணிப்பின்படி அந்த சூரிய மையச் சமன்பாடு 2°, 8', 16 ஆக இருக்கும். இந்திய வானவியல் ஆய்வானது அந்த அளவுக்குப் பழமையானது என்றால் இந்த சமன்பாடு சார்ந்து அதன் பிழை என்பது வெறும் 2' மட்டுமே.

வரலாறு தொடரும்...வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)