தலைப்பு | : | மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் |
ஆசிரியர் | : | தமிழ்மகன் |
பதிப்பகம் | : | உயிர்மை பதிப்பகம் |
விலை | : | 85/- |
முன்பெல்லாம், வெளியூரில் இருந்து சென்னை கிளம்புபவர்களுக்கு எந்த இடத்தில் இறங்க வேணும் என சொல்லி அனுப்புவார்கள். இப்போது ‘கூகுளைப் பார்த்து போ’ என்றாகிவிட்டது. இந்த ‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’ என்ற நூலும் செல்போன் வருகைக்கு முந்தைய காலத்தில் இருந்த சென்னையை விளக்குகிறது.
கூவத்தின் ஓட்டத்தையும், தற்போதைய அதன் தேக்கத்தையும் கூறிக்கொண்டே அன்றைய அரசியலை பேசுகிறது. “டிராம் வண்டி பத்தடி தூரத்தில் வரும்போதும் மக்கள் அதை அலட்சியமாக கடந்து செல்வார்கள்” என்ற வரியை படிக்கும்போது சமீபத்திய சென்னைபீச்-திருமால்பூர் மின்சார ரயிலில் ஏற்பட்ட மரணங்கள் பரபரப்பான சென்னையின் பரபரப்பை பதட்டத்துடன் கண்முன் காட்டுகிறது.
சென்னையிலுள்ள பல சிவப்பு நிற கட்டடங்களை உருவாக்கிய’தாட்டிகொண்ட நம்பெருமாள் செட்டியார்’ சென்னையின் வளர்ச்சியிலும், ராமனுஜரின் இறுதி காலத்திலும் செய்த உதவிகளை குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்தே செட்டியார்பேட்டை செட்பேட் ஆனதற்கான மாற்றத்தை புரிந்துகொள்ள முடிகிறது. சென்னையைத் தாண்டி பிற மாவட்டங்களில் உள்ள ஸ்டூடியோக்களும் விவரிக்கப்பட்டுள்ளன. மழையால் வெள்ளம் புகுந்து வீழ்ச்சி பாதைக்குச் சென்ற ‘பின்னி மில்’ பற்றிய செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊர்களும் அதன் பெயர்காரணங்களும் இதுதெரியாமல் தான் இத்தனை நாள் பயணம் செய்தோமா? என எண்ணத் தோன்றுகிறது. உதாரணத்திற்கு, தென்னை மரங்கள் அதிகமிருந்த இடம் தென்னெம் பேட்டை- தேனாம்பேட்டை, பிரம்புக்காடுகள்- பெரம்பூர், மயில்கள்ஆடும் ஊர்- மயிலாப்பூர்.
இன்றைய திருமண மண்டபங்களும், திரையரங்குகளும் எத்தனை ஏரி,குளங்களின் மேல் அமர்ந்துள்ளன என்பதை அந்தந்த பேருந்து நிறுத்தத்தின் பெயரைக் கொண்டே அறியலாம்.
பல்லவன் பேருந்து, எம்டன் கப்பல், உப்பு சத்தியாகிரகம் என சென்னையில் நிகழ்ந்த இந்திய அரசியலையும், தற்போதைய நகர்மயமாதலுக்கு முந்தைய சென்னையும் இந்நூலில் நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார் தமிழ்மகன்.
- விமல் குமார்