பா.சரவணகுமரன் எழுதிய ‘கள்ளிவட்டம்’ சிறுகதை தொகுப்பு நேற்று போதிவனம் அரங்கு எண் 64ல் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் தமிழ்மகன் வெளியிட பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் பெற்றுக்கொண்டார்.
சுந்தரபுத்தன் பேசியபோது “சரவணகுமரன் எங்க ஊர்க்காரர். மாட்டுப்பொங்கலின் போது, கள்ளிச்செடி, பால், பொங்கல், நெல்லிச்செடியெல்லாம் வைத்து பாத்தி கட்டி மாட்டுக்கு மாலை போட்டு சாமி கும்பிடுவாங்க. இதைதான் கள்ளிவட்டம்னு எங்க ஊர்ப்பக்கம் சொல்லுவாங்க. இந்தத் தலைப்பே எங்க மண்ணின் பெருமையைப் பத்தி பேசுறதா இருக்கிறது.” என கூறினார்.
அடுத்ததாகப் பேசிய தமிழ்மகன், “இந்தப் புத்தகத்தை நான் இன்னும் படிக்கலை. இப்போ புத்தகத்தைப் புரட்டும்போது இதில் ஒரு கதையின் தலைப்பு கண்ணில் பட்டது. ‘அப்பாவின் நண்பர் உயரமானவர்’ என்பது தான் அந்த கதையின் தலைப்பு. பார்த்ததுமே கதையைப் படிக்கத் தூண்டியது. அதேபோல எல்லோரும் இந்தப் புத்தகத்தை வாங்கி படிக்கவேண்டும். இந்நூலினை வெளியிட்ட போதிவனம் பதிப்பகத்துக்கு நன்றி” எனப் பேசி முடித்தார்.
மேலும், பத்திரிகையாளர்கள் செந்தில், சேதுராமன், நட்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக ஏற்புரையாற்றிய நூலாசிரியர் பா.சரவணகுமரன், “நூலினை பதிப்பித்த போதிவனம் பதிப்பகம் மற்றும் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கிய அனைவருக்கும் நன்றி. இந்தத் தொகுப்பில் இருக்கிற நிறைய கதைகள் 4 வருடத்திற்கு முன்பு எழுதியது. ஒரே கதையை மட்டும்தான் இப்போது எழுதி சேர்த்திருக்கிறேன். இதைத் தொடர்ந்து அடுத்ததாக என்னுடைய சென்னை அனுபவங்களை கதைகளாக எழுத வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறேன்.” என கூறினார்.
இந்த நூல் சென்னையில் நடைபெற்று வரும் ‘நான்காவது சென்னை புத்தகத் திருவிழா’வில் போதிவனம் அரங்கு எண் 64ல் கிடைக்கும்.
- கவிமணி