பதிவு செய்த நாள்

28 ஆக் 2018
17:22
அவசியம்தானா ஆறாம் விரல்?

‘புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்’ , ‘புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்’ போன்ற போதனைகளையும் பயமுறுத்தல்களையும் அன்றாடம் கேட்டிருப்போம். அது போன்ற மேலோட்டமான அறிவுரைகள் இல்லாமல் புகைப்பழக்கம், அதன் வரலாறு, அதைச் சுற்றி நடக்கும் வியாபாரம், புகைப்பழக்கத்தை நிறுத்துவது குறித்த உளவியல் ரீதியான சிக்கல்கள் என பல அடுக்குகளாகப் பேசுகிறது இந்தப் புத்தகம்.

கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புகையை உருவாக்கும் பழக்கம்  உலகம் முழுக்க வந்தது என்று வரலாறு ஆரம்பமாகிறது. 16ம் நூன்றாண்டில் பிரான்ஸ் நாட்டு இளவரசிக்கு வந்த தலைவலியைப் போக்க பயன்படுத்தப்பட்ட புகையிலை எவ்வாறு உலகம் முழுவதும் பரவியது, எந்தெந்த காலங்களில் என்னமாதிரியான மாற்றங்களை அடைந்தது என்கிற வரலாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இயந்திரமயமாக்களுக்கு பிறகான புகையிலை உற்பத்தி அதிகமாயிருப்பதும் அது தொடர்பான புதிய நோய்கள் வந்த தகவல்களும் காணக்கிடக்கின்றன.

வளரும் நாடுகளில்தான் புகையிலை பழக்கம் அதிகமாக இருக்கிறது என்றும், அதில் இந்தியா புகையிலை ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்கிறன புள்ளி விபரங்கள். அரசு புகையிலைப் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த முடியாது. அதற்கான காரணங்கள் கார்பரேட் வியாபாரம் மற்றும் புகையிலை ஏற்றுமதியில் இருந்து வரும் அந்நியச்செலாவணி என புகையிலை அரசியலையும் தொட்டுப் பேசியிருக்கிறார் நூலாசிரியர் ஷாஜஹான். அரசு புகையிலை பொருட்களின் மீது விதிக்கும் வரிகள் பற்றியும் அதனால் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்ந்தன என்றும் பல தரவுகளுடன் விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசு சிகெரெட்டின் பயன்பாட்டை குறைப்பதற்கு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. ஆனால் அவை எல்லாம் புகையை பொதுவெளியில் பயன்படுத்துவதை நிறுத்துவதாக மட்டுமே இருக்கிறது என்கிறார் ஆசிரியர். வளர்ந்த நாடுகளில் இருப்பது போல இந்தியாவில் புகைப்பழக்கத்தில் இருந்து வெளிவர நினைக்கும் மக்களுக்கு மருத்துவ உதவிகள், தெரப்பி மையங்கள் போன்று அரசு தரப்பில் இருந்து எந்த வித வசதிகளும் இல்லை என்கிற குற்றச்சாட்டையும் வைக்கிறார்.

நூலாசிரியர், தனக்கு 40 வருடமாக இருந்த புகைப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்த அனுபவங்களே இந்தப்புத்தகம். தனக்கு முதலில் சிகெரெட் புகைக்கக் கொடுத்த மாமா, சிகெரெட் பற்றிய கற்பனையான பிம்பத்தை  எழுப்பிய சினிமா நட்சத்திரங்கள், அந்த நாட்களில் சிகரெட் என்பது ஆண்மையோடு தொடர்புடையது என்று நம்பியது என சுவாரசியமான அனுபவக் குறிப்புகளையும் இதில் பேசியிருக்கிறார்.

தான் புகைபிடிப்பதை நிறுத்தப் போவதாக பொதுவெளியில் அறிவித்துவிட்டு, ஒவ்வொரு நாளும் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்கின்றன என்று ஒரு நாட்குறிப்பு போல பதிவு செய்திருக்கிறார். ‘இரண்டாம் நாள் சிகரெட் பெட்டி இருக்கும் திசை நோக்கி கை அனிச்சையாக நகர்ந்தது.’, ‘மூன்றாவது நாள் காலையில் லேசான தலைவலி, தொண்டை கரகரப்பு’, ‘நான்காவது நாள் தொண்டை கரகரப்பு லேசாக இருக்கிறது, கமறல் குறைந்திருக்கிறது’ - இப்படியாக தன்னுடைய உடலுக்குள் நிகழ்ந்த மாற்றத்தையும் அதற்காக தான்  ஆற்றிய எதிர்வினை என மிக ஆழமான அவதானிப்புகளை இந்தப் புத்தகம் முழுக்க நிரப்பியிருக்கிறார் நூலாசிரியர். புகைப்பழக்கத்தை  நிறுத்துவது குறித்த உரையாடலை முன்வைக்கும் மிக முக்கியமான தொகுப்பு.

- ச.ப.முத்துகுமார்

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)