பதிவு செய்த நாள்

31 ஆக் 2018
15:45

ஆத்திசூடி தெரியுமா?
ஓ, தெரியுமே! அறம் செய விரும்பு, ஆறுவது சினம்... அதுதானே?
ஔவையார் எழுதிய ஆத்திசூடி அனைவருக்கும் தெரிந்தது. அந்நூல் எழுதப்பட்டுப் பல்லாண்டுகளுக்குப்பிறகு பாரதியாரும் ஓர் ஆத்திசூடி எழுதியிருக்கிறார்.
பாரதிதாசன் இரண்டு ஆத்திசூடி நூல்கள் எழுதியிருக்கிறார்: பெரியவர்களுக்கு ஒன்று, இளைஞர்களுக்கு ஒன்று!

எடுத்துக்காட்டாக, பாரதிதாசனின் ஆத்திசூடி இப்படித் தொடங்குகிறது:
அனைவரும் உறவினர்
ஆட்சியைப் பொதுமை செய்
இசை மொழி மேலதே
ஈதல் இன்பம்

இந்நூலை எழுதி, சுமார் இருபதாண்டுகளுக்குப்பிறகு, பாரதிதாசன் 'இளையோர் ஆத்திசூடி' எழுதினார்.
இதில் மாணவர்களுக்கேற்ற அறிவுரைகளை அகர வரிசையில் எழுதினார்
அழுபவன் கோழை
ஆவின் பால் இனிது
இரவினில் தூங்கு
ஈவது மகிழ்ச்சி
உள்ளதைப் பேசு
ஊமைபோல் இராதே
எதையும் ஊன்றிப்பார்
ஏசேல் எவரையும்

இப்படி 88 அடிகளில் இளையோர்களுக்கு அவசியமான பல கருத்துகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. நல்வழியைச் சொல்லும் அறிவுரைகளுடன், 'பல்லினைத் தூய்மை செய்', 'வண்டி பார்த்து நட' என்பது போன்ற வாழ்க்கைக்குறிப்புகளும், 'துவைத்ததை உடுத்து', 'சோம்பல் ஒரு நோய்', 'வேர்க்க விளையாடு' போன்ற நலக்குறிப்புகளும் உள்ளன.
சிறுவருக்கான தேசியகீதமொன்றும் எழுதியிருக்கிறார் பாரதிதாசன். இளையோர் மனத்தில் நாட்டுப்பற்றை வளர்க்கும் அழகிய பாடல் அது:
'பாரத நன்னாடு
பழமை பெற்ற நாடு, தினம்
சாரத் தமிழில் அதைப் பாடு!'

விடுகதை விளையாட்டு சிறுவர்களுக்குப் பிடிக்கும் என்பதால், பாடல் வடிவில் விடுகதைகளை 'தேசிய விடுகவிகள்' என்ற தலைப்பில் எழுதியுள்ளார், பாரதிதாசன். அவற்றில்கூட தேசிய உணர்வை அவர் ஊட்டியுள்ளார்.

- என். சொக்கன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)