பதிவு செய்த நாள்

31 ஆக் 2018
16:03

மிழில் உயிரெழுத்தில் தொடங்கும் சொற்கள் எவ்வாறு மிகுதியாக இருக்கின்றனவோ அவ்வாறே வடசொற்களும் மிகுதியாக இருக்கின்றன.

'அகம்பாவம்', 'அகந்தை', 'ஆங்காரம்', 'கர்வம்' ஆகியவை வடசொற்கள். 'செருக்கு', 'இறுமாப்பு' என்னும் பொருளில் அமைந்த சொற்கள் அவை. கால் என்பதிலிருந்து தோன்றியமையால் காலம் என்பதைத் தமிழ்ச்சொல் என்கிறோம். கால் என்பது காற்றைக் குறிக்கும். அதனால்தான் காற்று வரும் வழியான சன்னலைக் 'காலதர்' என்று வழங்குகிறோம். கால் = காற்று. அதர் = வழி. காற்று வரும் வழி என்பது பொருள். காற்றினைப்போல் நில்லாத் தன்மையுடையது என்பதுதான் காலம் என்ற சொல்லின் பொருள். காலமும் காற்றும் ஓரிடத்தில் நிற்பதில்லை. காலம் என்னும் சொல் வடமொழியிலும் பயில்வதால், 'தகாத காலத்தை' அகாலம் என்ற வடசொல்லால் வழங்குகின்றனர். 'இம்சை' என்பது இன்னா செய்தல். துன்புறுத்தல். 'அகிம்சை' என்பது துன்புறுத்தாமை. இன்னா செய்யாமை.

'அக்கினி' என்பது நெருப்பு. 'அங்கம்' என்பது உறுப்பு. 'அங்குலம்' என்பதும் வடசொல்லே. அதனை 'விரற்கடையளவு' என்று தமிழில் கூறுகிறோம். 'அட்டகாசம்' என்பதன் உண்மையான தமிழ்ப்பொருள் 'பெருநகை.' ஆனால், ஆரவாரமான வியப்பினை அடைந்தபோது அதனை 'அட்டகாசம்' என்று கூறுகிறோம். 'அஞ்சனம்' என்பதற்கு 'மை, கறுப்பு' ஆகியன தமிழ்ச்சொற்கள். 'அட்சரம்' என்பது எழுத்தைக் குறிக்கும். 'அதிகம்' என்ற வடசொல் தமிழில் 'அதிகமாகப்' பயில்கிறது. மிகுதியை கூடுதல் என்றே தமிழில் சொல்ல வேண்டும். 'அதிகரித்தது' என்று வினைச்சொல்லாக்கிப் பயன்படுத்துவதும் பிழையே. மிகுந்தது, கூடிப் போயிற்று என்று சொல்ல வேண்டும்.

'அதிசயம்' என்பதும் வடசொல்லே. 'வியக்கத்தக்க புதுமை' எதுவானாலும் அது நமக்கு 'அதிசயம்' தமிழில் அதனை 'வியன்புதுமை' எனலாம். 'அனுகூலம்' என்பது உதவி. 'அனுசரித்தான்' என்று சொல்லாமல் பின்பற்றினான் எனல் வேண்டும். 'அனுபவம்' என்பது பட்டறிவு. 'அனுபவித்தான்' என்று எழுதாமல் 'பட்டறிந்தான், துய்த்தான்' என்பது சிறப்பு. பெரும்பான்மையைக் குறிக்கும் வடசொல் 'அநேகம்', 'அந்நியம்' என்பது அயல். 'அந்தஸ்து' என்பது தகுநிலை. 'அனுமதி' என்பது உடன்படல் அல்லது இசைவு. 'அனுமதித்தான்' என்று எழுதாமல், இசைந்தான், இசைவு தெரிவித்தான் என்று எழுத வேண்டும்.

'அபகரித்தல்' என்று எழுதாமல் கவர்ந்தான், பறித்தான் என்று எழுதலாம். அதற்கு 'வவ்வல்' என்ற பழந்தமிழ்ச் சொல்லும் இருக்கிறது. திருடாதே என்பதற்கு 'வவ்வன்மின்' என்பார்கள். 'அப்பிராணி' என்பதற்குப் 'பேதை' என்ற தமிழ்ச்சொல் இருக்கிறது. 'அபூர்வத்தை' அரிது எனலாம். 'அற்பம்' என்பது புன்மை. 'அவஸ்தை', 'அவதி' ஆகிய இரண்டும் துன்பத்தைக் குறிக்கும் வடசொற்கள். 'அவமானம்' என்பதை மானக்கேடு எனலாம். 'அவதூறு' என்பது 'பழிச்சொல்' 'அபாண்டம்' என்பது பெரும்பழி. 'அவசியம்' என்ற வடசொல்லுக்குக் கட்டாயம் என்று தமிழில் பயன்படுத்தலாம். 'அவசரம்' என்பது விரைவுப் பரபரப்பு. 'அபாயம்' என்ற வடசொல்லுக்கு மாற்றாகத் துன்பம், இடுக்கண், பேரிடர் என்று இடத்திற்கேற்பப் பயன்படுத்த வேண்டும். 'அமாவாசையைத்' தமிழார்வலர்கள் 'மறைமதி' என்கிறார்கள்.

- மகுடேசுவரன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)