பதிவு செய்த நாள்

08 ஆக் 2017
16:38

  தமிழக யுத்தங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது, வெண்ணிப் போர். குறுநில ஆட்சியில் இருந்து, காஞ்சி முதல் காவிரி வரை, சோழ சாம்ராஜ்யம் பரவ வழிவகுத்து, காவிரிபூம்பட்டினம் என்னும் துறைமுகம் அமைத்து, அதைத் தன் தலைநகரமாக உயர்த்தி, காவேரியாற்றின் கரைகளை உயர்த்தி கல்லணையும் கட்டின  சோழ மன்னன் கரிகாலச் சோழ மன்னனின் வீரத்தைப் பறைசாற்றும் போர் தான் வெண்ணிப் போர்.

புலிக்குட்டி, கூண்டுக்குள் வளர்ந்தே பலம் பெறுவது போல, சிறுவயதில் எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போதும், கரிகாலன், வலிமையுடையவனாக வளர்ந்தான். ஒரு குழியில் யானை பிடித்து அடைக்கப்படுகிறது; அதே குழியை முட்டித் தள்ளி, மண் நிரப்பி, அதிலிருந்து தப்பித்து ஓடும் தந்திரம் யானைக்கு உண்டு. அதே போல் சிறையில் இருந்து தப்பித்தான் கரிகாலன்.

கரிகாலன் என்பதற்கு இரு அர்த்தங்கள் உள்ளன. கரி என்றால், யானை; காலன் என்றால் எமன். போர்க்களத்தில், யானை மீது அமர்ந்து, எதிரிகளுக்கு எமன் போல் காட்சியளித்தான். ஒரு தீ விபத்தில், அவன் கால் கருகியதால், கரிகாலன் என அழைக்கப்பட்டான்.

சோழ நாட்டை கைப்பற்றிவிடலாம் என, ஒன்பது வேளிர் தலைவர்கள் (குறுநில மன்னர்கள்), பாண்டிய மன்னனிடம் ஆசை வார்த்தை கூறினர். பாண்டியன் தயக்கத்தில் இருந்தபோதே, சேர மன்னன் பெருஞ்சேரலாதன் துணைக்கு வந்தான். சேரன், பாண்டியன் மற்றும் ஒன்பது வேளிர் தலைவர்களும் சோழ நாட்டைக் கைப்பற்ற தன் படைகளோடு விரைந்தனர்.

தஞ்சைக்கு அருகில் உள்ள வெண்ணிப் பறந்தலை என்னும் இடத்தில் அவர்களைத் தன் வீரமிகு படையுடன் எதிர்கொண்டான் கரிகாலன். கரிகாலனின் பெரும் பலம், அவனுடைய யானைப் படை. யானைகளின் தந்தங்களில் கூரிய ஈட்டி முனைகளைப் பொருத்தி, எதிரிகளின் படைக்குள் ஊடுருவச் செய்து, எதிரி நாட்டு வீரர்கள் உடல் கிழிய, எண்ணற்ற வீரர்களைத் தூக்கி எறிந்தபடியே, யானைகளை முன்னேறச் செய்தான் கரிகாலன்.

இந்தக் காட்சியைத் தூரத்திலிருந்து பார்த்தவ புலவர் மக்கள், ‘நீல வானத்தை, கார் மேகம் சூழந்தது போல் போர்யானைகள்  காட்சியளித்ததாக’ பாடல் புனைந்திருக்கிறார்கள். வெண்ணியில் தன்னை எதிர்த்த 11மன்னர்களின் கூட்டணியை, தனித்து நின்று எதிர்த்து, வெற்றி கொண்டான் கரிகாலன். போரின் இறுதியில், சேர மன்னன் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்த ஈட்டி, அவன் முதுகில் காயத்தை ஏற்படுத்தியது. ‘புறமுதுகில் புண்’ என்பது, தமிழ் வீரர்களுக்கு பெரும் அவமானம்; எனவே, சேர மன்னர் பெருஞ்சேரலாதன், வடக்கிருந்து உயிர் நீத்தான்.

பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை ஆகிய சங்கப்பாடல்கள் கரிகாலனின் வீரத்தைப் போற்றுகின்றன. ‘திருமாவளவன், கரிகால் பெருவளத்தான்’ வெனும் பட்டப்பெயர்களும் கரிகாலனுக்கு உண்டு. வரலாற்றில், கரிகாலன் என்ற பெயரில் நான்கு அரசர்கள் இருந்திருக்கிறார்கள். தமிழ் மண்ணில் நிகழ்ந்த போரில், வெண்ணிப் போர் முக்கிய இடம் பிடிக்கிறது. அதில், முதலாம் கரிகாலனின் கொடி பறக்கிறது!

- சி.கலாதம்பி நன்றி : தினமலர், பட்டம்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)