பதிவு செய்த நாள்

03 செப் 2018
14:30
அசோகமித்திரனின் ‘இந்தியா 1944 - 48’

ழுத்தாளர் அசோகமித்திரனின் இந்தியா 1944 – 48  நூல் கலந்துரையாடல் கடந்த ஞாயிறன்று (செப்.2) கோவை வாசகசாலையின் ஆறாவது நிகழ்வாக நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக பி.எஸ்.ஜி. கல்லூரிப் பேராசிரியர் ஆறுமுகநாதன் கலந்துகொண்டார். யாழ்மொழி மற்றும் மருத்துவர் பிரபாகரன் ஆகியோர் வாசகப்பார்வையைப் பகிர்ந்துகொண்டனர்.

முதலாவதாகப் பேசிய யாழ்மொழி, நாவலின் இரண்டு பாகங்களின் தன்மையை பற்றியும் கதையின் சுருக்கத்தையும் சொல்லிவிட்டு அசோகமித்திரன் அவர்கள் நாவலில் கையாண்டுள்ள வேகமான மொழி நடை பற்றியும் அது எந்தெந்த இடங்களில் வெளிப்பட்டது என்பதையும் கூறினார். சுதந்தரத்திற்கு முன்னும் பின்னுமான கால கட்டத்தை பின்புலமாகக் கொண்ட கதையை இப்போது எப்படி பார்க்க வேண்டும் என்பதையும் அதன் சில அப்போதைய பழக்க வழக்கங்கள் இப்போது எவ்வாறு அபத்தங்களாக கொள்ளப்படுகின்றன என்பதையும் எழுத்தாளர் அந்த பழைய பம்பாய்க்குள் வாசகரை அழைத்து செல்வதை பற்றியும் பேசினார்.

இரண்டாவதாக பேசிய மருத்துவர் பிரபாகரனின் உரை விமர்சன கோணத்தில் இருந்தது. “சுதந்திர போராட்டக் காலத்தில் நடக்கும் கதையில், அது பற்றிய சிறு குறிப்பு கூட இல்லை. கதை பம்பாயில் நடந்தாலும் கதை மாந்தர்களுக்கு அந்த சிந்தனை இல்லாமல் இருப்பது, நாவல் சில பிற்போக்குத்தனங்களை கொண்டிருக்கிறது” என நாவல் குறித்து விரிவாகப் பேசினார்.

பேராசிரியர் ஆறுமுகநாதன் கடைசியாகப் பேசும் பொழுது, “கதையின் களம் விடுதலை போராட்ட காலத்தை கொண்டிருந்தாலும் இது ஒரு உளவியல் சார்ந்த கதை.” என்று தொடங்கிய அவர், கதையின் போக்கில் அசோகமித்திரன் என்கிற ஆளுமை வெளிப்படும் இடங்கள் என அவர் கண்ட இடங்களை விவரித்துக் கூறினார். நாவலில் இருக்கும் ஒவ்வொரு பெண் பாத்திரப் படைப்பின் குணாதிசயங்களையும் அவை கதையின் போக்கில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எவ்வாறு மாறுகிறது அல்லது வெளிப்படுகிறது என்பதை விளக்கிக் கூறினார்.

“ஒரு சமுதாயத்தின் மக்கள் எப்படி பொது சமூகத்தோடு அந்நியப்பட்டு இருந்தார்கள என்பதை ஒரு வாக்கியத்தில் எழுத்தாளர் சொல்லிச் செல்கிறார். இரண்டாவது பாகத்தில் ஒரு விறுவிறுப்பு பற்றிக் கொள்கிறது. அதில் முதன்மையாக வரும் கைம்பெண் கதாபாத்திரமான லட்சுமியின் சிறு வயது நிகழ்வொன்று காந்தியை தொட்டுச் செல்கிறது. இந்த பாகத்தில் சுந்தரம் கதாபாத்திரத்தின் மனத் தடுமாற்றத்தை அழகாகப் பதிவு செய்திருக்கிறார் அசோகமித்ரன். நாவல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தே சுழல்வதால் நாம் ஏற்றுக்கொள்ள முடியாத சொல்லாடல்கள், வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதாகவும் அதை அப்போது ஏற்றுக் கொண்டார்களோ இல்லையோ இப்போது ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்று கூறி அமர்ந்தார்.

நன்றியுரைக்கு முன்னதாக பார்வையாளர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற சிலர் நாவிலின் மீதான தங்கள் பார்வை, அதனுள் தங்களுக்கு எழும்பிய கேள்விகள் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

அடுத்த நிகழ்வு

கவிஞர் இசையின் 'பழைய யானைக் கடை' மற்றும் ஜான் சுந்தரின் 'நகலிசைக் கலைஞன்' இரு கட்டுரைத் தொகுப்புகள் குறித்த கலந்துரையாடல்
நாள் : செப்டம்பர் 23
இடம் : PSG மேலாண்மை கல்லூரி.

- முத்துவேல்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)