பதிவு செய்த நாள்

04 செப் 2018
14:57

 சங்கரதாஸ் சுவாமிகள்
7.9.1867 - 13.11.1922
காட்டுநாயக்கன்பட்டி, தூத்துக்குடி.

‘நாவில் வந்ததைப் பாடுவோம்
நாடகம் தினம் ஆடுவோம்
நாங்கள் சிறுவர் எங்கள் பிழையை
நீங்கள் பொறுப்பீர் நாளுமே’

எனப் பாடிக்கொண்டே சிறுவர்களை அவர் மேடையேற்றியபோது, தமிழ் நாடக உலகம் புதிய பரிணாம வளர்ச்சிக்குத் தயாராக இருந்தது. தமிழ் நாடகக் கலையை இவருக்கு முன், இவருக்குப் பின் என்று பிரிக்கலாம்.

அந்த அளவுக்குத் தமிழ் நாடகங்களில் இவரது பங்கு அளவிட முடியாதது. வள்ளி திருமணம், பவளக் கொடி, வீரபாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன், அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி, கோவலன் சரித்திரம், நள தமயந்தி, ராம - ராவண யுத்தம், சித்திராங்கி விலாசம் என அவர் தந்த நாடகங்கள் பல இன்னும் மேடையேறிக் கொண்டிருக்கின்றன. அவர்தான், தமிழ் நாடக முதன்மை ஆசிரியர், தமிழ் நாடக விடிவெள்ளி என்றெல்லாம் கொண்டாடப்படும், சங்கரதாஸ் சுவாமிகள்.

தொடக்கக் கல்வியைத் தந்தையிடம் பெற்று, தமிழறிவைத் தண்டபாணி என்பவரிடம் கற்றுக் கொண்டார். தமிழறிவின் காரணமாக, சிறுவயதிலேயே இசைப் பாடல் இயற்றுவதில் சிறந்து விளங்கினார். இசை ஆர்வம், அவரை நாடகங்கள் பக்கம் ஈர்த்தது. இசைப் பயிற்சி பெற்றபின், நாடக நடிகராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இரணியன், இராவணன், எமதருமன், சனீஸ்வரன் போன்ற வேடங்களில் மேடையில் தோன்றினார்.

நாடகப் பயிற்றுவிப்பாளராக மாறி, நடிப்பில் ஒழுக்கம், வசன உச்சரிப்பு, நாடகத்தில் நற்செய்தி என்ற அடிப்படைக் குறிக்கோளுடன் நாடகங்களை இயற்றினார். கருத்துகளை மக்களிடம் எளிதில் எடுத்துச் செல்ல, நாட்டுப்புறக் கதைப்பாடல்களையும் நாடகங்களில் பயன்படுத்தினார்.

தன் வாழ்க்கையை நாடகக் கலைக்காக அர்ப்பணித்து வாழ்ந்தார். தன் உழைப்பின் மூலம், தமிழுக்குப் பெரும் மரியாதையை ஏற்படுத்திய அவர் புகழ், தமிழ் நாடக உலகம் இருக்கும்வரை நிலைத்திருக்கும்.

1910: சமரச சன்மார்க்க சபை என்னும் நாடகக் குழுவைத் தோற்றுவித்தார்.
1918: சிறுவர்களைக் கொண்டு மதுரை தத்துவ மீனலோசனி வித்வ பால சபை என்னும் குழுவைத் தொடங்கினார்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)