பதிவு செய்த நாள்

04 செப் 2018
15:05

யிரெழுத்துகளில், அ, ஆ, இ, உ ஆகிய எழுத்துகளில் தொடங்கும் வடசொற்கள்தாம் மிகுதி. ஒ, ஓ ஆகிய உயிரெழுத்துகளில் தொடங்கும் வடசொற்களைக் காணமுடியவில்லை. ஆசீர்வாதம் என்பது வடசொல். வாழ்த்து என்பதே தமிழ். ஆசீர்வதித்தான் என்று வினைச்சொல்லாக்கி எழுதுதல் தவறு. ஆகாயம், ஆகாசம் என்பனவும் வடசொற்களே. அப்பொருளில் விண், வான், விசும்பு என நமக்குப் பல தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன.

ஆசை என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வடசொற்களில் ஒன்று. அவா, விருப்பம், பற்று ஆகியன அதற்கு நேரான தமிழ்ச்சொற்கள். ஆகாரத்தை உணவு என்றும், ஆசாரத்தை ஒழுக்கம் என்றும் கூற வேண்டும். ஆச்சரியம் என்பது வடசொல். வியப்பு என்பதே அதற்கான தமிழ்ச்சொல். ஆச்சரியப்பட்டான் என்று எழுதக்கூடாது, வியந்தான் என்று நற்றமிழில் எழுத வேண்டும்.

ஆஜர், ஆசாமி ஆகியவை உருதுச் சொற்கள். ஆஜரை 'நேர்வரல்' என்றும் ஆசாமியை 'ஆள்' என்றும் கூறலாம். மறுப்பு என்னும் பொருளில் பயிலும் 'ஆட்சேபனை'யும் வடசொல்லே. ஆடம்பரம் என்பது பகட்டு. ஆதரவு என்பது துணைநிற்றல். தொடக்கம் என்னும் பொருள்படும் 'ஆதி' தமிழ்ச்சொல்லே என்பார்கள் தமிழறிஞர்கள். அச்சொல் வடமொழியிலும் உள்ளது. ஆதி என்றால் தொடக்கம், அந்தம் என்பது முடிவு. அதனால்தான் ஒரு நாளின் முடிவுப் பகுதியை 'அந்தி' என்கிறோம். ஒன்றின் முடிவை இன்னொன்றின் தொடக்கமாக வைத்துப் பாடுவதை 'அந்தாதி' (அந்தம் + ஆதி) என்கிறோம்.

இன்பத்தைக் குறிக்கும் 'ஆனந்தம்' வடசொல்லே. 'ஆபாசம்' என்பது அருவருப்பினைக் குறிக்கும். ஆயத்தம் என்பதும் வடசொல்தான். எத்தனம், முன்னேற்பாடு என்பது அதற்கிணையான தமிழ்ச்சொற்கள். 'ரெடிமேடு உடைகளை' ஆயத்த ஆடைகள் என்று தமிழ்ப்படுத்துவது முழுமையாகாது. 'தைப்பு ஆடைகள்' என்பதுதான் தமிழ்.

ஆயாசம் என்பதற்கு அயர்வு என்ற தமிழ்ச்சொல் இருக்கிறது. ஆபத்து என்பது ஊறு. ஆயுள் என்பது வாழ்நாள். ஆயுதம் என்பது படைக்கலன். ஆரண்யம் என்பது காடு. ஆரம்பம் என்பது தொடக்கம். ஆராதனை என்பது வழிபாடு. ஆலயம் என்பதும் வடசொல்லே. கோவில் என்பது தமிழ்.

- மகுடேசுவரன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)