பதிவு செய்த நாள்

07 செப் 2018
12:19

பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம் பற்றிய குறிப்புகள்
ரூபன் பரோ (1783)

ஆசிரியர் : தரம்பால்|
தமிழில் : B.R.மகாதேவன்

பழங்காலப் பொருட்களைத் தேடி அலைந்தவர்களால், கிரேக்க ரோமானியக் கலைப் பொருட்கள் நினைவுச் சின்னங்கள் எல்லாம் தரைமட்டமாக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுவிட்டன. முந்தைய முன் அனுமானங்கள் இப்போதும் மறையவில்லை. கீழைத்தேயப் பகுதிகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. எனினும் இந்துக்களின் சட்டம் பற்றிய மொழிபெயர்ப்பு நீங்கலாக இந்திய மண்ணின் மனிதர்களிடமிருந்து மிகக் குறைவான விஷயங்களையே ஐரோப்பியர்கள் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். அதுபோல் இந்த கீழைத்தேய இந்தியாவுக்கு ஹன்ஸ்கள் (Huns) மற்றும் காட்டுமிராண்டிகளை அனுப்பியது நீங்கலாக வேறு எதையும் அவர்களுக்குத் தந்திருக்கவும் இல்லை. இருந்தும் இந்தியாவே அறிவுத்துறைகளின் தாய் (பொதுவாக, எகிப்தியர்களுக்குத்தான் இது சொல்லப்படுவதுண்டு) என்று கருத இடம் உண்டு. ஒரு பக்கம் சீனா மற்றொரு பக்கத்தில் பாபிலோனியா என இவற்றில் வானவியல் ஆய்வுக்கான ஆதாரங்கள் உள்ளன. இருந்தும் என்னதான் பழம்பெருமை கொண்டதாகச் சொல்லப்பட்டாலும் எகிப்தில் வானவியல் சார்ந்த சாதனைகள் எதுவுமே இல்லை.

ரோமானிய, கிரேக்க, எகிப்திய நினைவுச் சின்னங்களின் பெரும் அணிவகுப்பில் ஏதேனும் ஒரே ஒரு வான் ஆராய்ச்சிக்கூடம் இருந்ததற்கான தடயம் கூடக் கிடைத்திருக்கவில்லை. பிரமிடுகள் வடக்கு தெற்காக அமைந்திருப்பதற்கு வானவியல் காரணங்களைச் சொல்கிறார்கள். டெல்லாஜெலஸ்கள் * (Delhazelles) அவற்றை ஆராய்ந்து பார்த்ததாகவும் அவை வானவியல் காரணங்களுக்காகவே அப்படி அமைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இதில் எனக்கு மிகப் பெரிய சந்தேகம் இருக்கிறது. ஒன்றை ஆராய்ச்சி செய்து பார்த்திருந்தால் அதுபோன்ற பிற அம்சங்களையும் ஆராயாமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஒருவேளை அவர் அப்படி ஆராய்ச்சி செய்யப் போதிய திறமை கொண்டவராக இருந்திருந்தால் (இது சந்தேகத்துக்கு உரிய விஷயமே) ஃப்ரான்ஸோ இங்கிலாந்தோ அது சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தேவையான உபகரணங்களைத் தந்திருக்க முடியாது.

மேலும் இறந்தவருடைய நினைவாக பிரமிடுகளைக் கட்டியவர்கள் மிகுந்த சிரமமெடுத்து அதை தீர்க்க ரேகைப் பகுதியில் கட்டியிருப்பார்கள் என்று நம்ப எந்த ஆதாரமும் காரணமும் கூட இல்லை. எனினும் சந்தேகத்துக்குரிய இந்த மிகச் சிறிய ஆதாரத்தை வைத்து அப்படியான முடிவுக்கு வந்திருப்பது ஆச்சரியத்தையே தருகிறது. மிகச் சமீப காலம் வரையிலும்கூட இந்தத் தீர்மானத்தை நடைமுறையில் சோதித்துப் பார்க்கும் வழி ஏதும் புலப்பட்டிருகவில்லை. ஆனால், அதிர்ஷ்டவசமாக, வானவியல் துறையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் பனாரஸ் பகுதியில் மிக பிரமண்டமான வான் ஆராய்ச்சிக் கருவி நிறுவப்பட்டிருக்கிறது.

வான் ஆராய்ச்சிக்காகவே அந்த மையம் அமைக்கப்பட்டிருப்பது உண்மை என்பதால் அந்தக் கருவி மிகத் துல்லியமாக இந்திய மெரிடியனில் நிறுவப்பட்டுள்ளது. இந்த வான் ஆராய்ச்சிக் கருவி அசைக்கவே முடியாத அளவுக்கு கல்லால் பிரமாண்டமானதாகக் கட்டப்பட்டிருப்பதால் ஐரோப்பிய வான் ஆராய்ச்சிக் கருவிகளைப் போல் தனது திசைவில் ஆய்வு எல்லையை (azimuth) மாற்ற முடியாது.  அது அமைக்கப்பட்டிருக்கும் இடமானது இந்திய தீர்க்கரேகை, நில நடுக்கோடு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து பல உண்மைகளை நாம் தெரிந்துகொள்ளமுடியும். வான் ஆராய்ச்சித்துறையில் மிகுந்த மேதமை இருந்ததால்தான் இதைச் செய்ய முடிந்திருக்கிறது என்ற திடமான முடிவுக்கு நாம் வரமுடியும்.

ஈக்வினாக்ஸ் விலகலைக் கண்டுபிடிப்பது, பூமியின் சுழல் அச்சின் மாறுபாடு ஆகியவை தொடர்பான சிக்கலான அம்சங்களை சில கணித நிபுணர்கள் கணக்கில் கொண்டிருக்கிறார்கள். எனினும் இது தொடர்பாகப் பொதுவான தீர்மானத்தை அவர்களால் அடைய முடிந்திருக்கவில்லை. நியூட்டன், சிம்சன், வாம்ஸ்லே, சில்வியன் பெய்லி போன்ற மேதைகள் சூரிய, சந்திர நகர்வுகளினால் நில நடுக்கோடு இடம் மாறுவதாகவும் பழைய அச்சைச் சுற்றி வேறு கோணத்தில் சுழலவைப்பதாகவும் கருதினார்கள். அதேநேரம் தெ அலெம்பர்ட், யுலர், லா கிரான் ஜே, டைடஸ் போன்றோர் புதிய நில நடுக்கோடு, புதிய அச்சு இருப்பதாகச் சொன்னார்கள்.

இரண்டாவதாகச் சொன்னதுதான் ஓரளவுக்குச் சரி என்று தோன்றுகிறது. இல்லையென்றால் ரஷ்யாவிலும் சைபீரியாவிலும் நிலநடுக்கோடு சார்ந்த  அம்சங்கள் இருப்பதை எப்படிப் புரிந்துகொள்ளமுடியும்? அல்லது பனி படர்ந்த பகுதிகள் நிலநடுக்கோட்டுப் பகுதியில் வருவதை எப்படிப் புரிந்துகொள்ளமுடியும்? இது மிகவும் குழப்பமான விஷயம்தான். விரிவான வான் ஆராய்ச்சிகள் தேவை. இந்தத் துறை சார்ந்து மிகப் பெரிய சாதனைகள் செய்திருப்பவர்கள்கூட மிக முக்கியமான சில விஷயங்களைக் கோட்டைவிட்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.

ஏனென்றால் சிலர் சூரிய இழுவிசையின் அளவைக் குறைத்து மதிப்பிட்டிருக்கின்றனர். மேலும் அனைவருமே தமது கணக்கீடுகளில் பூமியின் நிலநடுக்கோட்டுக்கு அப்பாலான பகுதிகளை மாறுதல்களுக்கு அப்பாற்பட்டதாகக் கருதியிருக்கிறார்கள். அது உண்மையல்ல. ஏனெனில் நிலநடுக்கோட்டின் ஆறில் ஐந்து பகுதி நீரால் நிறைந்தது. மடகாஸ்கர், சுமந்த்ரா பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மட்டுமே நீர் குறைவாகக் காணப்படுகிறது. இது கோட்பாட்டுரீதியாக விளக்கமுடியாத விஷயம். மிகச் சிறந்த கணிதவியல் மேதைகள் கூட தமது தீர்மானங்களில் வெகுவாக வேறுபடுகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், பூமிக்கு புதிதாக வேறொரு  அச்சு இருந்தால் அதன் தீர்க்கரேகைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும். பனாரஸில் அந்த வான் ஆராய்ச்சிக் கருவியை நிறுவியபோது இந்திய தீர்க்கரேகை அந்தப் புள்ளிவழியே போயிருந்தால் இன்று அது மாறியிருக்கும். எவ்வளவு தூரம் விலகியிருக்கிறதோ அதை இன்று துல்லியமாகக் கவனமாகக் கணக்கிட்டுப் பார்த்தால் அது வானவியல் சார்ந்த பல கேள்விகளுக்கு விடைதரும். அந்த வான் ஆராய்ச்சிக்கூடம் எப்போது நிறுவப்பட்டது என்ற கேள்விக்கான விடையும் அதில் இருந்து கிடைக்கும்.

obliquity of the ecliptic பற்றியும் சில பயனுள்ள தகவல்களை பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடத்தில் இருந்து நாம் பெற முடியும். பழங்கால ஆய்வுகளில் இருந்து கிடைத்த சில தகவல்கள் இன்றைய கணிப்புகளுடன் ஒத்திசைவுடன் இல்லை. இந்த வித்தியாசங்களைச் சரி செய்ய இந்த கருவிகளைக் கொண்டு சில குறிப்பிட்ட நட்சத்திரங்கள் அல்லது வானத்தில் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளை ஆராய்ந்து சில முடிவுகளை அதில் இருந்து பெற முடியும்.

பனாரஸில் இருக்கும் வான் ஆராய்ச்சிக் கருவிகளில் அளவுகள் அலகிடப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், அது பற்றி விரிவான தகவல்கள் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. அந்த அலகுகள் மேலும் சிறு உள் அலகுகளாக, எண்களாகப் பிரிக்கப்பட்டிருந்தால் பழங்கால கணக்கீட்டு முறைகள் பற்றிச் சில விஷயங்களை அவை நமக்குப் புரியவைக்கக்கூடும். அந்த கருவிகளின் நீள,அகல, உயர விவரங்கள் கிடைத்தால் இந்துக்கள் பழங்காலத்தில் என்னவிதமான அளவுகளைப் பயன்படுத்தினார்கள் என்பது தெரியவரக்கூடும்.

வரலாறு தொடரும்... வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)