பதிவு செய்த நாள்

07 செப் 2018
15:55
நம்மை மெய்மறக்கச் செய்யும் இன்கிரெடிபில்ஸ் - 2

 ஹாலிவுட்டில் ‘ஸ்னோ ஒயிட்டும் ஏழு குள்ளர்களும்’ எனும் கதை முதன்முதலில் 1937-ல் அனிமேஷன் வடிவில் வெளியானது. முழுக்க முழுக்க கைகளால் வரையப்பட்ட படங்களைக் கொண்டு அனிமேஷன் செய்ணியப்பட்ட முதல் படம் இதுவே. இதற்குப் பின்னர் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான அனிமேஷன் படங்கள் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கின்றன.

1995-ல் வெளிவந்த ‘டாய் ஸ்டோரி’ படம் அனிமேஷன் உலகில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தியது. ஆங்கிலத்தில் முதன்முதலில் வெளிவந்த முழுநீள கம்பியூட்டர் அனிமேட்டட் திரைப்படம் என்ற சிறப்பை இந்தப் படம் பெற்றது. பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம் டிஸ்னி பிக்சர்ஸுக்காக தயாரித்த இந்தப் படம் உலகம் முழுவதும் மகத்தான வெற்றி கண்டது. அதன்பிறகு, அனிமேஷன் திரைப்படங்களின் நிறமே மாறியது.

‘டாய் ஸ்டோரி’யைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் வெளிவந்தது. இதுவும் மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கிடையில், ‘ஏ பக்ஸ் லைஃப்’ வெளிவந்தது. இதைத் தொடர்ந்து ‘மான்ஸ்டர்ஸ் இன்க்’, ‘ஃபைண்டிங் நிமோ’ ஆகிய அனிமேஷன் படங்கள் வெளியாகின. இவற்றில் ‘ஃபைண்டிங் நிமோ’ அனிமேஷன் படங்களில் ஒரு புதிய மைல்கல்லாக அப்போது புகழப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, பிக்ஸார் நிறுவனம் எடுத்த படமே ‘தி இன்கிரெடிபில்ஸ்’. சூப்பர் ஹீரோ எனப்படும் சிறப்பு சக்தி வாய்ந்த மனிதர்களை அறிவோம். ‘சூப்பர் மேன்’, ‘ஸ்பைடர் மேன்’, ‘பேட் மேன்’, ‘அயர்ன் மேன்’ என அந்தப் பட்டியல் மிகப்பெரியது. அவர்களைப் போலவே சிறப்பு சக்திகள் பெற்ற பாப் பர், அவருடைய மனைவி ஹெலன் பர் மற்றும் அவர்களது குழந்தைகளான வயலட், டாஷ் மற்றும் பேபி ஜாக்-ஜாக் ஆகியோரின் கதையே இந்தப் படத்தில் சொல்லப்பட்டது.

அந்தக் கதைப்படி, சூப்பர் ஹீரோக்களால் பொதுச் சொத்துக்களுக்கு அதிக இழப்பு ஏற்படுவதால், அவர்களை எல்லாம் மறைந்து வாழவும், தங்கள் சக்திகளை மறைத்து வாழவும் அரசாங்கம் உத்தரவிடுகிறது. இதனால் பாப் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தங்கள் சக்திகளை மறைத்துக்கொண்டு மக்களோடு மக்களாக வாழ்கின்றனர். எதிர்பாராவிதமாக பாப் ஒருமுறை தனது சக்தியை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை வந்துவிடுகிறது. பின்னர், அதுவே பிடித்துவிட தன் நண்பரான ஃப்ரோசோன் என்பவருடன் சேர்ந்து பல சாகசங்களில் ஈடுபடுகிறார். முன்னொரு சமயத்தில் பாப்-பிடம் உதவியாளராக சேர ஆசைப்பட்டு, அது முடியாமல் போன கோபத்தில் இருக்கும் சின்ட்ரோம் என்கிற வில்லன் தொடர்ந்து தொல்லைகள் கொடுக்கிறான். அவனை வெற்றி கொல்வதே முதல் பாகத்தின் கதை.

92 மில்லியன் டாலரில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 633 மில்லியன் டாலர்களை வசூல் செளிணிது மிகப் பெரிய வெற்றி கண்டது. நகைச்சுவை காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் ஒன்றிணைந்து மக்களை மகிழ்ச்சிப்படுத்தி பிக்ஸாரின் மகுடத்தில் இன்னொரு வைரக்கல்லாக ஜொலித்தது. ஆனால், வழக்கமாக வெற்றி பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை உடனே தயாரிக்கும் பாணியில் இருந்து விலகி, இந்தப் படத்திற்கு இரண்டாம் பாகம் தயாரிக்காமலேயே இருந்தனர். கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இரண்டாம் பாகம் வெளிவந்திருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளோடு வெளிவந்திருக்கும் ‘இன்கிரெடிபில்ஸ் 2’ எப்படி இருக்கிறது?

ஒரு வருடத்தில் எத்தனையோ அனிமேஷன் திரைப்படங்கள் வெளிவந்தாலும் பிக்ஸார் நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கென ஒரு தனித்தன்மை எப்போதுமே உண்டு. மற்ற தயாரிப்பு நிறுவனங்களின் அனிமேஷன் படங்கள் பெரும்பாலும் நகைச்சுவையை மையப்படுத்தி இருக்கும். ஆனால்,பிக்ஸாரின் படங்களில் நகைச்சுவை இருந்தாலும், அதைவிட முக்கியமாக மனிதநேயமும், சமூகத்துக்குத் தேவையான கருத்துக்கள் எப்போதும் இருக்கும். இதனாலேயே பிக்ஸாரின் அனிமேஷன் படங்கள் மிகப் பெரிய வரவேற்பை எப்போதும் பெறுகின்றன.

‘டாய் ஸ்டோரி’ படத்தை எடுத்துக்கொண்டால் வெறுமனே பொம்மைகளின் கதையாக இல்லாமல், அந்த பொம்மைகளுக்கு இடையிலான உரையாடல்கள் மூலம் அன்பு என்பது எந்தவித எல்லைக்கும் அடங்காதது என்பதை வெளிப்படுத்தி இருப்பார்கள். ‘ஃபைண்டிங் நிமோ’ படத்தில் இதே அன்பும், பெற்றோர்கள் குழந்தைகள் மேல் வைத்திருக்கும் பாசமும் எத்தகையது என்பதை மிகத் தெளிவாக சில மீன்கஷீமீ மூலம் புரியவைத்திருப்பார்கஷீமீ. வெறும் அனிமேஷன் படம் என்று மட்டும் கூறி கடந்து விட முடியாத படங்கஷீமீ இவை.

‘இன்கிரெடிபில்ஸ்’ படமும் கூட அப்படித்தான். முதல் பாகத்தில், தனக்கு ஒரு விஷயம் கிடைக்காமல் போனதால் அந்த விஷயத்தையே அழிக்க நினைக்கும் வில்லன் மூலமாக, அது எவ்வளவு தவறான செயல் என்பதையும், அப்படி எதிர்மறையாக நினைத்தால் அது இறுதியில் அப்படி நினைத்தவருக்கே தீமையாக முடியும் என்பதையும் காட்டியிருப்பார்கள்.

இப்போது ‘இன்கிரெடிபில்ஸ் 2’ படத்தில், பெண்கள் மட்டுமே வீட்டுவேலை செய்யவேண்டும் என்கிற பழைய வாதத்தை உடைத்து, ஆண்களுக்கும் அதில் பங்குண்டு என்பதைச் சொல்கிறார்கள். அத்துடன், பெண்கள் தங்கள் சக்தியை மிகச் சரியாக பயன்படுத்துவதன் மூலம் உலகையே காக்கலாம் என்பதையும் நகைச்சுவை கலந்து பதிவு செய்திருக்கிறார்கள். இதனாலேயே இப்படம் இன்னும் சிறப்பு பெறுகிறது.

இரண்டாம் பாகத்தில் இன்னும் தங்களது சக்தியை மறைத்து வாழும் பாப் குடும்பத்தினர் அரசாங்கத்திற்கு பயந்து வெவ்வேறு இடங்களில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவர்களது இரண்டு குழந்தைகளும் சற்று வளர்ந்து விட்ட நிலையில், மூன்றாவது குழந்தையான ஜாக்-ஜாக் அப்போதுதான் நடக்க ஆரம்பித்திருக்கிறான். அவ்வப்போது வரும் சில பிரச்சனைகளை பாப் குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக முகமூடி அணிந்துகொண்டு போளிணி சண்டை போட்டு மக்களை காப்பாற்றுகின்றனர்.

அந்த நேரத்தில் வின்ஸ்டன் டேவோர் என்பவர் சூப்பர் ஹீரோக்களை மீண்டும் அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இவர்கள் பிரச்சனை வரும் நேரத்தில் செய்யும் சாகசங்களையும், மக்களைக் காப்பதையும் நேரடியாக உலகம் முழுக்க ஒளிபரப்பினால் சூப்பர் ஹீரோக்களின் தேவைகளை அரசாங்கம் புரிந்துகொள்ளும் என்று முடிவு செய்கிறார். அதற்கு உதவ பாப் தம்பதியை அழைக்கிறார். உடன் ஃப்ரோசோனும் வருகிறார்.

இந்த சோதனை முயற்சியை முதலில் ஹெலனை வைத்துச் செளிணிது பார்க்கலாம் என்று வின்ஸ்டன் கூறுகிறார். ஏனெனில், இதற்கு முன்பு வில்லன்களை அழித்தபோது பாப் மற்றும் ஃப்ரோசோனால் ஏற்பட்ட பொதுச் சொத்து சேதம் மிக அதிகம். ஆனால், ‘எலாஸ்டி கேர்ள்’ என்று அழைக்கப்படும் ஹெலன் மிகக் குறைந்த சேதமே விளைவிப்பார் என்று கூறி முதல் வாய்ப்பை அவருக்கு வழங்குகிறார். ஆனால், வீட்டில் வயதுக்கு வந்த ஒரு பெண்ணும், பள்ளிக்கூடம் செல்லும் ஒரு பையனும், யாருக்கும் அடங்காத ஒரு சுட்டி குழந்தையும் இருப்பதால் முதலில் ஹெலன் தயங்கினாலும், பாப் தானே குழந்தைகளை கவனித்து கொள்கிறேன் என வாக்குறுதி தருவதால் தைரியமாக வில்லன்களை அழிக்க ஹெலன் சம்மதிக்கிறார்.

வீட்டுக்கு செல்லும் பாப் முதலில் குழந்தைகளை கவனிக்க முடியாமல் பயங்கரமாக திணறுகிறார். அந்த நேரத்தில் சுட்டிக் குழந்தை ஜாக்-ஜாக்கிற்கும் சிறப்பு சக்திகள் இருப்பதை கண்டுபிடிக்கிறார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் பாப், ஹெலன், வயலட் மற்றும் டாஷ் ஆகிய எல்லாரையும் விட அதிகளவு சக்தியை ஜாக்-ஜாக் கொண்டிருப்பது தெரியவருகிறது. மறையும் சக்தி, உருவம் மாறும் சக்தி, கோபம் வந்தால் மொத்த உடலும் நெருப்பாக மாறும் சக்தி, கண்களின் வழியே லேசரைக் கக்கும் சக்தி என பாப்-புக்கே சற்று பயத்தை வரவழைக்கும் திறன்கொண்ட குழந்தை அது.

அந்தக் குழந்தையையும் சமாளித்துக் கொண்டு பாப் இருக்கையில், அங்கே ஹெலன் ‘எலாஸ்டி கேர்ள்’ ஆக மாறி ஸ்க்ரீன் ஸ்லேவர் என்னும் பெரிய வில்லனை அழிக்க முயற்சி செய்து மிகவும் பிரபலமாகிறார். எல்லா தொலைக்காட்சிகளிலும் அவரைப் பற்றிதான் செய்திகள் ஓடுகின்றன. முதலில் பாப்-புக்கு இது கடினமாக இருந்தாலும் கூட பின்னர் ஒரு நல்ல அப்பாவாக தன் குழந்தைகளை நல்லமுறையில் கவனித்துக் கொள்கிறார். இறுதியில் ஒரு பெரிய திருப்பத்திற்குப் பிறகு பாப் மற்றும் அனைவரும் சேர்ந்து வில்லனை எப்படி அழிக்கிறார்கள் என்பதோடு படம் முடிகிறது.

3-டி தொழில்நுட்பத்தின் எல்லா சாத்தியங்களையும் இந்தப் படத்தில் மிக நல்ல முறையில் பயன்படுத்தி இருக்கின்றனர். குறிப்பாக, படத்தின் எல்லா சண்டைக் காட்சிகளும் மிக அற்புதமான முறையில் அனிமேஷன் செய்யப்பட்டு இருக்கின்றன. மிகவும் சின்னச் சின்ன நுணுக்கமான விஷயங்களையும் கூட விட்டுவைக்காமல் கவனம் எடுத்து செய்திருப்பது நம்மை மெய்மறக்கச் செய்கிறது. பயங்கர வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு புல்லட் ரயிலை நிறுத்தி, அதில் இருக்கும் மக்களை காப்பாற்ற எலாஸ்டி கேர்ள் முயலும்போது பின்னணியில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் படத்தின் சிறப்புக்கு மிகச் சிறிய உதாரணம்.

அதேநேரத்தில், படம் சிறிது கூட அலுப்புத் தட்டாமல் செல்வதற்கு மிக முக்கிய காரணம் ஜாக்-ஜாக்காக வரும் அந்தக் குழந்தையும், அதன் சுட்டித்தனமும்தான். பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்களுக்கு தனது மழலை மொழியில் பதில் கூறுவது, மற்றவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே குறும்புத்தனமான ஏதாவது செய்துகொண்டே இருப்பது என படம் முழுக்க இந்தக் குழந்தையின் ஆதிக்கம்தான்.

பிக்ஸார் நிறுவனத்தின் படங்களுக்கே உரிய எல்லா அம்சங்களும் உள்ள இந்தப் படம் கண்டிப்பாக திரையரங்கில் பார்க்க தகுதியான படம். இந்த இடத்தில் நமது ஊர்களில் தொலைக்காட்சிகளில் போடப்படும் அனிமேஷன் படங்கள் மற்றும் தொடர்களை பற்றி நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முழுக்க முழுக்க வியாபாரத்தை மட்டுமே மையப்படுத்திய தொடர்கள் அவை.

பார்வையாளர்களுக்கு நல்ல விஷயம் சொல்லவேண்டும் என்கிற பொதுநலன் கொஞ்சமும் இல்லாதவை. அவ்வப்போது ஒரு சில தொடர்கள் நல்லவிதமாக இருந்தாலும் கூட அவற்றின் சதவீதம் மிகக் குறைவே. ஹாலிவுட்டை பார்த்து என்னென்னவோ காப்பி அடிக்கும் நம் சினிமா படைப்பாளிகள் இதுபோன்ற நல்ல விஷயங்களையும் காப்பி அடிக்கலாமே!

- பால கணேசன்

நன்றி : றெக்கை சிறார் கலகல மாத இதழ்

மேலும் றெக்கை இதழில் வெளியாகியிருக்கும் சுவாரசியமான கதைகள் மற்றும் கட்டுரைகளைப் படிக்க...

13, இரண்டாவது தளம்,
முதல் குறுக்குத் தெரு, கே.பி.நகர்,
ராமாபுரம், சென்னை - 89
தொடர்புக்கு - 98842 08075, 73586 45516
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)