பதிவு செய்த நாள்

10 செப் 2018
12:47

பனாரஸ் வான் ஆராய்ச்சிக் கூடம் பற்றிய சில குறிப்புகள்

ஆசிரியர் : தரம்பால்
தமிழில் : B.R.மகாதேவன்

பனாரஸ் வான் ஆராய்ச்சிக் கூடத்துக் கருவிகளின் அளவுகளை மிகத் துல்லியமாகக் குறித்துக்கொள்ளவேண்டும். அந்தக் கருவிகள் கொண்டு என்னவெல்லாம் ஆராய முடியுமோ அவற்றையெல்லாம் ஆராயவேண்டும். வடிவ இயல் கணக்கீடுகளில் பல்வேறு புள்ளிகளைக் கொண்டு பல்வேறு அளவீடுகளைச் செய்தால்தான் துல்லியமான முடிவுகளுக்கு வந்து சேர முடியும். ஆதாரபூர்வமான தரவுகள், புள்ளிவிவரங்கள் கிடைத்தால்தான் தெளிவான தீர்மானங்களைக் கண்டடையமுடியும். எனவே அதற்கான எந்தவொரு வாய்ப்பையும் கை நழுவ விடக்கூடாது. வேறு எதற்காக இல்லையென்றாலும் எதிர்காலத்தில் செய்யப்போகும் ஆய்வுகளுக்கு அவை நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.

எவ்வளவு பரிசோதனைகள் செய்கிறோமோ அவ்வளவுதான் அறிவு பெருகும் என்று சொல்ல முடியாது. அதைவிடக் கூடுதலாகவே அதிகரிக்கும். அதுபோல் தனியாக ஓர் ஆய்வு எந்தப் பெரிய கண்டுபிடிப்பையும் தராமல் போகலாம். ஆனால் அதையே வேறு பல ஆய்வுகளுடன் இணைத்துப் பார்க்கும்போது மிகப் பெரிய திறப்பாக அமைய வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக வடிவ இயலில் ஒரு தனி புள்ளி என்பது எதையும் குறிக்காது. இரண்டு புள்ளிகள் சேர்ந்தால் ஒரு கோடு கிடைக்கும். வேறு இரண்டு புள்ளிகள் சேர்க்கப்பட்டால் ஆறு நேர்கோடுகள் கிடைப்பதோடு நான்கு வட்டங்களின் பொசிஷனும் மேக்னிட்யூடும் ஒரு பரவளையமும் கிடைக்கும். மேலும் இரண்டு புள்ளிகளைச் சேர்த்தால் (அது தனியாக இருந்தால் ஒரு கோட்டை மட்டுமே உருவாக்கும்) 15 நேர் கோடுகள், 20 வட்டங்கள். 15 பர வளையங்கள் ஆறு நீள்வட்டங்கள் அல்லது ஆறு அதி பரவளைவுகள் என எத்தனையோ உருவாக்க முடியும். இவற்றில் இருந்து முடிவற்ற பல்வேறு முடிவுகளைக் கண்டடைய முடியும்.

இது போன்ற ஆராய்ச்சிகளில் முதலில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயம் மட்டுமே கிடைக்கும் (இந்த உதாரணத்தில் கோடு என்ற ஒன்று கிடைத்தது போல்) ஆனால் அதே தரவுகளை ஒன்று சேர்த்துப் பார்த்தால் பிற பல விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும். இதே போலவேதான் பனாரஸில் மேற்கொள்ளப்பட்டுள்ள வானவியல் ஆய்வுகளை  வணிகம், வியாபாரம், வரலாறு, கால வரிசை என பல விஷயங்களை ஆராயப் பயன்படுத்த முடியும்.

இந்தியாவில்  பல்வேறு அறிவியல் துறைகள்  பழங்காலத்திலேயே உருவாகியிருகின்றன. பிற நாடுகளுக்கு அந்த விஷயங்கள் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பாக இந்தியாவிலேயே அந்த அறிவியல் துறைகள் அதி உன்னத நிலையை எட்டியும்விட்டிருக்கின்றன என்று நாம் நம்ப ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த அறிவு ஏற்றுமதியானது இந்தியாவுக்கு வந்தவர்கள் எந்த அளவுக்கு திறமையும் ஆர்வமும் கொண்டிருந்தார்கள் என்பதைப் பொறுத்து அதிகமாகவும் குறைவாகவும் இருந்திருக்கிறது. இந்தியர்களின் அறிவார்ந்த அம்சங்களும் பிற நாட்டினரின் அறிவுத்துறைகளும் கூடிக் கலந்து ஒருவித புதிரான மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வால் வெள்ளிகள்  பற்றிய கோட்பாடுகளை  தமது ஆய்வுகள், கணக்கீடுகள் மூலம் கண்டுபிடித்திருந்தாலே போதும்; சால்தியர்கள், ‘வால் வெள்ளிகள் எல்லாம் நீள் வட்டப்பாதையில் சுழலும்  கிரகஹங்களே’ என்ற உண்மையை கோள்களின் இடங்களைக் கணக்கிடவோ அவற்றின் தொலைவை மதிப்பிடவோ தெரிந்திராமலேயே தெரிந்துகொண்டிருப்பார்கள். பிதாகரஸுக்கு இது தெரிந்திருந்தது என்பது நம் இந்தக் கூற்றை நிரூபிக்கும் ஒன்றாகவே இருகிறது. அவர் இந்தியாவுக்குக் கல்விபெற வந்திருக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.

கற்றுக்கொள்பவரின் திறமைக்கு ஏற்பவே அவருடைய நிபுணத்துவம் இருக்கும். யூக்ளிடின் 47 வது முன்வைப்பை மிகப் பெரிய கண்டுபிடிப்பாக பிதாகரஸ் கருதியிருக்கிறார் என்றால் இந்திய கணக்கியலின் அதி நுட்பமான விஷயங்கள் எதையுமேஅவரால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். எனவே, பிரபஞ்ச இயக்க விதிகள், கிரகங்களின் இயங்கு விதிகள், பல உலகங்கள் பற்றிய கருத்தாக்கம், மறு பிறவிக் கோட்பாடு போன்றவை பற்றியெல்லாம் மேலோட்டமாகவே புரிந்துகொண்டிருப்பார். சால்தியர்கள் வால் வெள்ளிகள் பற்றித்தெரிந்துவைத்திருந்தனரா, கிரகணங்களைக்கணிக்கத் தெரிந்து வைத்திருந்தனரா, என்பது குறித்து பல வரலாற்று ஆய்வாளர்களும் மாறுபட்ட கருத்துகளைச் சொல்வதற்கு இதுவே காரணம். ஏனென்றால் ஒவ்வொரு தத்துவ மேதையும் அறிவியல் மேதையும், இந்தியாவில் இருந்துதான் கற்றுக் கொண்டோம் என்பதை மறைத்து வைத்தே தனது சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள்தான் ஒன்றை முதலில்கண்டுபிடித்தார்கள் என்று மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்திருக்கிறார்கள்.

ஒரு கலையானது அல்லது அறிவுத்துறை சாதனையானது அதைக்கற்றுக் கொடுப்பவர் அல்லது கற்றுக் கொள்பவர் ஆகியவர்களுக்கு ஏற்பவே முக்கியத்துவம் பெறும். மதிக்கப்படும். இதனால்தான் சால்திய போரோசுஸ் தான் குவி ஆடி சூரிய கடிகாரத்தை உருவாக்கினார் என்று விட்ருவியஸ் சொல்ல அதுவே காரணம். உண்மையில் அந்த சூரிய கடிகாரம் ஓர் இந்திய உருவாக்கம். ஏனென்றால் பனாரஸில் அதுபோன்ற ஒன்று கண் முன்னே இருக்கிறது.

இந்த அறிவியல் துறைகள் இந்தியாவில் தன் உச்சத்தை எட்டிவிட்டிருந்தன என்று நம்ப இன்னொரு முக்கியமான காரணம் என்னவென்றால் உலகின் பிற நாடுகளைவிட வெகு முன்னதாகவே இந்தியர்கள் நாகரிகமடைந்துவிட்டிருந்தார்கள். மனிதர்கள் நாகரிகமடையத் தொடங்கிய பிறகே கலை, அறிவுத் துறைகளில் சாதனை படைக்கத் தொடங்குவார்கள் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான். இந்தியர்கள் வெகு காலத்துக்கு முன்பே நாகரிகமடைந்துவிட்டிருந்தனர் என்பது அவர்களுடைய இன்றைய நிலையைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளமுடியும். அரசியல்ரீதியான பெரும் தாக்குதலை அவர்கள் சந்தித்திருக்கும் நிலையிலும் இந்த உண்மையை ஒருவர் புரிந்துகொள்ளமுடியும். முந்தைய அமைப்புக்கும் பிந்தைய அமைப்புக்கும் இடையிலான மோதலில் இரண்டின் தீமைகள் மட்டுமே இருப்பதாகவும்முந்தைய அமைப்பின் நன்மைகள் எதுவுமே இல்லாததாகவும் ஆகிவிட்டிருக்கிறது.

 இந்திய வானவியலாளர்கள் பல்வேறு அளவுகள், கணிப்புகள் ஆகியவற்றைச் சுவடிகளில் குறித்துவைத்திருக்கிறார்கள். இந்தியர்களுடன் நன்கு பழகும் ஒருவர் இவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். அதே நேரம் பனாரஸில் இருக்கும் வான் ஆராய்ச்சிக் கருவிகளைத் தனியாக ஆராய்ந்து பார்க்கவும்வேண்டும். நாம் செய்யும் நேரடி ஆய்வுகள் நமக்குப் பல வகையில் உதவக்கூடும். நமது அலகுகள் 24 என்று இருப்பதை சீனர்கள் 23, 39’, 18” என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

ஃபாதர் குப்பில் சீன கருவிகளுக்கும் நம் கருவிகளுக்கும் இடையிலான ஒப்பீட்டைச் சொல்லியிருக்கவிட்டால் இந்த வான் ஆய்வுத் தரவுகளை நம்மால் புரிந்துகொண்டிருக்க முடியாமல் போயிருக்கும்.  இந்தியாவில் பனாரஸில் மட்டுமே வான் ஆராய்ச்சிக்கூடம் இருக்கிறதுஎன்பதால் அதை விரிவாக ஆராயும் எந்தவொரு வாய்ப்பையும் நாம் தவறவிட்டுவிடக்கூடாது. இந்தக் கருவிகள் விபத்தினாலோ  காட்டுமிராண்டித்தனத்தினாலோ அழிக்கப்பட்டுவிடுவதற்கு முன் நாம் இவற்றை ஆராய்ந்து முடிக்க வேண்டும். இல்லையெனில் இந்தியர்கள் பல நூறு ஆண்டுகளாகச் சேகரித்த வானவியல் தரவுகள் எல்லாம் பயனற்றுப் போய்விடும். என்னவிதமான கோண அளவுகள், துணை அலகுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியிருக்கிறர்கள் என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். அதிலிருந்து இந்திய வானவியலாளர்களுக்கு அரேபியா அல்லது சீனா போன்ற நாட்டு ஆராய்ச்சியாளர்களுடன் ஏதாவது தொடர்பு இருந்திருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள அது உதவும்.

வரலாறு தொடரும்... வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)