பதிவு செய்த நாள்

10 செப் 2018
16:23

ண்டைய தமிழ்நாட்டுக்குக் கிழக்கேயும் மேற்கேயும் தெற்கேயும் என முப்புறமும் கடல்கள் சூழ்ந்திருந்தன. இன்றுள்ள கேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. எனவே, தமிழகத்தின் மூன்று எல்லைகளாகவும் கடல்களே இருந்தன.

இன்றைக்கு அக்கடல்களை நாம் எவ்வாறு அழைக்கிறோம்? கிழக்கே இருக்கும் கடலை 'வங்காள விரிகுடா' என்றும் மேற்கே இருக்கும் கடலை 'அரபிக்கடல்' என்றும் தெற்குக் கடலை 'இந்தியப் பெருங்கடல்' என்றும் அழைக்கிறோம்.

கடல்களுக்கு அப்பெயர்கள் எப்படித் தோன்றின?

கரையை நெருங்கும்போது குறுகியும், கடலுக்குள் செல்கையில் விரிந்தும் காணப்படும் கடற்பரப்பு விரிகுடா (Bay) எனப்படும். அதன்படியே, வங்காளத்தை அடையும் அக்கடற்பகுதி, ஓரத்தில் குறுகியும், உட்செல்கையில் அகன்றும் இருப்பதால் 'வங்காள விரிகுடா' என்று அழைக்கிறோம். சுருக்கமாக 'வங்கக் கடல்' என்றும் வழங்குவதுண்டு.

அவ்வாறே, அரபு தேசத்தை அடையும் கடற்பரப்பை அரபிக் கடல் என்கிறோம். தெற்கிலுள்ள கடற்பரப்பானது இந்திய நாட்டை அடையும் கடற்பரப்பு என்பதால், இந்தியப் பெருங்கடல் என்று ஐரோப்பியர்கள் பெயரிட்டனர். வங்கக்கடல், அரபிக்கடல் என்று பிறநாடுகளோடு இணைத்து, கடலுக்குப் பெயரிடும் வழக்கம் பழந்தமிழகத்தில் இல்லை. தமிழர் தம் கடற்பரப்புக்குத் தமிழ்ப்பொருளிலேயே பெயரிட்டு அழைத்தனர். ஆங்கிலேயர் பெயர் முறைகளால் நம் தமிழ்ப்பெயர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன.

தமிழில் வங்கக்கடலுக்குக் குணகடல் என்றும், அரபிக் கடலுக்குக் குடகடல் என்றும் பெயர்கள் இருந்தன. அப்பெயர்ப் பொருளும் இயற்கை சார்ந்தது. குணக்கு என்றால் கிழக்கு. குடக்கு என்றால் மேற்கு. அதனால்தான் மேற்கிலுள்ள நாட்டைக் குடநாடு என்றனர்.

கிழக்கே இருக்கும் கடலைக் குணகடல் என்றும் மேற்கே இருக்கும் கடலைக் குடகடல் என்று நாம் அழைத்தோம். குணக்கு, குடக்கு என்னுமிரண்டு திசைப்பெயர்களும் புணர்ச்சியின்போது குண, குட என்று நிற்கும். வடக்கு என்பது வட என்று நிற்பதைப் போன்றது இது. (வடமொழி, வடவேங்கடம், வடதிசை). தெற்கிலுள்ள கடலையும் குமரிக்கடல் என்றே அழைத்தோம். குமரியிலிருந்து தெற்கே பரவியிருக்கும் கடல் என்பதால் அப்பெயர்.

- தமிழ்மலைவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)