பதிவு செய்த நாள்

12 செப் 2018
11:33

 பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம் பற்றிய குறிப்புகள் -4
ரூபன் பரோ (1783)

ஆசிரியர் : தரம்பால்
தமிழில் : B.R.மகாதேவன்

சர் ஐசக் நியூட்டன் எழுதிய ‘பண்டையகால சாம்ராஜ்ஜியங்களின் திருத்தப்பட்ட கால வரிசை (The Chronology of Ancient Kingdoms Amended) என்ற புத்தகத்தில்  கிரேக்க தொன்மவியல் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். சிரோன் (Chiron) ஆர்கனாட்டிக் கடல் பயணங்களுக்கு (argonautic expedition) உதவும் வகையில் ஒரு கோளத்தை உருவாக்கினார் என்றும் பல்வேறு நட்சத்திரத் தொகுப்பு வடிவங்களை  உருவாக்கினார் என்றும் கிரேக்க தொன்மவியலில் சொல்லியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இப்போது நாம் பயன்படுத்துவதுபோல் வானத்து நட்சத்திர நிலைகளைப் பயன்படுத்தி வழிகாட்டும் முறையை சிரோன் உருவாக்கினார் என்று கிரேக்கர்கள் நம்பியிருக்கிறார்கள்.

ஏரிஸ் (தங்க ஆடு - மேஷம்), தாரஸ் (காளை - ரிஷபம்), ஜெமினி (காஸ்டர் போலக்ஸ் இரட்டையர் - மிதுனம்) போன்றவற்றை சிரான் உருவாக்கியதாக கிரேக்க தொன்மவியலில் நம்பப்படுவதை நியூட்டன் குறிப்பிட்டிருக்கிறார். சிரோன் இந்த வான நட்சத்திர வடிவங்களை கடல் பயணிகளுக்கு உதவ உருவாக்கியதாக நம்பப்படுகிறது. equinoctian coloure* என்பது அப்போது ஏரிஸ் நட்சத்திரத் தொகுப்பின் நடுவில் இருந்திருக்கிறது.

இந்தக் கற்பிதமானது  சில முரண்பாடான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இந்துக்களும் இதுபோன்ற நட்சத்திரத் தொகுப்புகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். சிரோன் உருவாக்கியதாகச் சொன்ன அதே வடிவிலேயே இந்துக்கள் குறிப்பிட்டிருக்கும் நட்சத்திரத் தொகுப்புகளும் இருக்கின்றன. இதில் இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளன. ஒன்று, சிரோன் இந்த ராசி மண்டல நட்சத்திரத் தொகுப்பு வடிவங்களை இந்தியர்களிடமிருந்து  கற்றுக்கொண்டிருக்கவேண்டும். அது உண்மையென்றால், அவர் அந்தத் தகவல்களைப் பெற்றுக்கொண்ட காலகட்டத்தில் equinoctian coloure இருப்பு சந்தேகத்துக்கிடமானதாகவும் அதனால் ஆர்கானாட்டிக் பயணங்கள் நடந்தாகச் சொல்லப்படும் காலகட்டம் தவறாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் ஆகும்.

பழங்கால கிரேக்க தொழில்நுட்பங்கள்
பழங்கால கிரேக்க தொழில்நுட்பங்கள்

அல்லது இந்தியர்கள் கிரேக்கர்களிடமிருந்து வானவியல் பற்றித் தெரிந்துகொண்டு பிற விஷயங்களை முன்னெடுத்திருக்கக்கூடும்.  எதுவானாலும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் அறிவுப் பரிமாற்றம் இருந்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது. வானவியல் சார்ந்த விஷயங்களில் மட்டுமல்ல கிரேக்க இலக்கியங்கள் பலவற்றையும்கூட  பிராமணர்களிடமிருந்தே கிரேக்கர்கள் பெற்றிருக்கக்கூடும்.

வானவியல் சார்ந்த இந்த ஆதிக் கோட்பாடுகள் கிரேக்கத்தை அடைவதற்கு முன்பாக பல நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறது என்று நம்ப இடமிருக்கிறது. ஏனென்றால், இப்படியான கற்பிதக் கோட்பாடுகளை வைத்துக் கொண்டு பாபிலோனியர்கள் வானவியலில் பல விஷயங்களைச் செய்திருக்க முடியாது. அலெக்ஸாண்டர் காலகடத்துக்கு 2000 ஆண்டுகள் முன்பாகவே பாபிலோனியாவில் வானவியல் ஆய்வுகள் நடந்திருப்பது நமக்குத் தெரியும்.  பழங்கால பிதாகரஸ் அமைப்பை ஒப்பிட்டுப் பார்த்தால் தாலமியின் ஓர்ப்களும் எபி சைக்கிள்களும் (சூரிய சந்திர, கிரகங்களின் சுழற்சி வேகத்தில் தென்படும் மாற்றங்கள், சுழற்சி திசையில் ஏற்படும் விலகல்கள் பற்றிய கணிப்பு) வெகு பிந்தைய காலத்தவையே. 

பிற்காலத்தைய கிரேக்கர்கள், ரோமானியர்கள் ஆகியோருக்கு வானவியல் சார்ந்து பெரிதாக எதுவும் தெரிந்திருக்கவில்லை.

சமீபத்தில் நான் பாரசீக பழங்கால நினைவுச் சின்னம் ஒன்றைப் பார்த்தேன். அதில் அப்போலோ ஒரு காளையை அதன் கொம்பைப் பிடித்து இழுத்துச் செல்வதுபோல் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. பரஸ்பர ஈர்ப்பு விசை பற்றிய குறியீட்டு வடிவம் என்று நினைக்கிறேன். அந்தச் சித்திரத்தில் சூரியனானது வட்டப்பாதையில் ஒரு கூம்பை வெட்டிச் செல்கிறது. மைய விசைப்புள்ளியையும் பூமியின் சுழல் அச்சையும் அது குறிப்பிடுகிறது. வானவியலாளர் இஸ்மயேல் புலியல்தஸ் (Ismaël Bullialdus) தனது நூலில் குறிப்பிட்டிருப்பதுபோலவே இது இருக்கிறது.

பாரசீகர்கள் நிலவைக் குறிப்பிட காளை வடிவத்தைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவிலும் கூட அப்படித்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள் போலிருக்கிறது. ஏனென்றால் இந்தியாவில் பசு, காளை ஆகியவையும் சந்திரனும் புனிதமாக மதிக்கப்படக்கூடியவை என்பது நமக்குத் தெரியும்.

கீழைத்தேய இந்தியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலும் ஒத்திசைவு காணப்படுகிறது. ஏனென்றால் யூதர்களும் கன்றுக்குட்டியை வணங்கியிருக்கிறார்கள். பெளர்ணமி நாட்களில் ட்ரம்பெட்கள் முழங்கி சொர்க்கத்தின் தேவதைக்கு இனிப்புகள் சமர்ப்பித்துக் கொண்டாடுவதுண்டு. யூதர்களின் புனித நூலான அமோஸின் ஐந்தாவது அத்தியாயத்திலும் ஆக்ட்ஸ் ஆஃப் அபோஸ்தலரின் ஏழாம் அத்தியாயத்திலும் இந்து உருவ வழிபாடு போன்ற ஒன்று விவரிக்கப்பட்டுள்ளது.

இந்துக்கள் தமது தெய்வத்தின் திரு உருவத்தை சப்பரத்தில் வைத்து எடுத்துச் செல்வது போல ஒரு வழிபாடு யூதர்கள் மத்தியில் இருந்ததை அவை காட்டுகின்றன. யூதர்கள் அப்படியான உருவ வழிபாட்டை இனியும் தொடர்ந்தால் பாபிலோனைத் தாண்டி நாடு கடத்தப்படுவார்கள் என்று அதில் எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது. அதாவது பாபிலோனைத் தாண்டியிருக்கும் அந்தப் பகுதியில் இருந்துதான் (அதாவது கீழைத்தேய இந்தியாவில் இருந்துதான்) அவர்களுக்கு அந்த உருவ வழிபாட்டுப் பழக்கம் வந்திருக்கும் என்பதால் அப்படி அதில் சொல்லப்பட்டிருக்கிறது. 

இந்து நினைவுச் சின்னங்கள், நூல்கள் விஷயத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால் இப்போது புரியாமல் இருக்கும் பல விஷயங்கள் பின்னர் புரியவரக்கூடும். அது எவ்வளவு சிரமமானதாக இருந்ததாலும் அந்தக் கடினமான பணியை நாம் செய்து பார்க்கவேண்டும். பழங்கால நூல்களில் கூடுதல் ஆய்வுகள் மேற்கொண்டு பார்த்தால் அதில் இடம்பெற்றிருக்கும் இந்து அம்சங்கள் பற்றிக் கூடுதல் தகவல் தெரியவரும். சில வரலாற்று உண்மைகளைத் தெரிந்துகொள்ள அது நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.

கிரகணங்களைக் கணிப்பது நீங்கலாக இந்திய வானவியலாளர்களுடைய ஆய்வுகள் வேறு எதைப் பேசுகின்றன என்று பொதுவாக அவர்களை மட்டம் தட்டிப் பேசப்படுகிறது. ஆனால், கிரகண காலத்தைத் துல்லியமாகக் கணிப்பது நம் வானவியலிலும் சாதாரண விஷயம் ஒன்றுமல்ல. அதிலும் பிராமணர்களுக்கு துல்லியமாக கிரகணத்தை மிக எளிய வழியில் கணித்துச் சொல்லும் திறமை இருக்கிறதென்றால் அந்த வழிமுறைகளைப் பற்றி நாம் நிச்சயம் தெரிந்துகொண்டாகவேண்டும். ஏனென்றால் இது தொடர்பான நம்முடைய வழிமுறைகள் மிகவும் சிரமமானவையாக இருக்கின்றன.

அதோடு பிராமணர்கள் வால் வெள்ளிகள் (Comets) வருவதையும் கணித்துச் சொல்லும் திறமை பெற்றிருப்பதாகத் தெரிகிறது. இன்று நம்மிடம் இருக்கும் அனைத்து அறிவுத்துறை அம்சங்களை பயன்படுத்திப் பார்த்தாலும் இது மிக மிக ஆச்சரியகரமான சிக்கலான அபாரமான சாதனையே. பிராமணர்களால் அதைச் செய்ய முடிந்திருக்கிறதென்றால் (என்னைப் பொறுத்தவரையில்) பிராமணர்கள் தமது வானவியல் அறிவில் அதி உன்னத நிலையில் இருந்தார்கள் என்பதை நிரூபிக்க இதைவிட வேறு எந்தவொரு ஆதாரமும் தேவையில்லை என்றே சொல்வேன். பிராமணர்கள் கிரகணங்களை நம்மைப் போல் அட்டவணைகளைப் பயன்படுத்திக் கணக்கிடுவதில்லை. அதற்கென சில சூத்திரங்கள் வைத்திருக்கிறார்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. இந்த சூத்திரங்கள் நம்முடைய வழிமுறையைப் போலவே இருக்கக்கூடும். அல்லது இல்லாமலும் இருக்கக்கூடும்.

அதாவது, ஒருவேளை சால்தியர்கள் சரோஸ் என 223 சந்திரோதயங்கள் அல்லது 600 ஆண்டுகள் கொண்ட நேரோஸ்*  என்பதுபோல் ஏதோவொரு கணக்கை அடிப்படையாக வைத்து கிரகணம் மீண்டும் மீண்டும் வரும் சரியான நாளைக் கணித்ததுபோல் இந்தியர்களும் கணித்திருக்கலாம். அல்லது நம்முடைய கணக்கீடுகளைப் போன்ற ஒன்றையே பயன்படுத்தியிருந்தார்கள் என்றால், அவர்கள் மிகப் பழங்காலத்திலேயே அல்ஜீப்ராவில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும். பீரியாடிக்கல் அப்ராக்ஸிமேஷன் செய்வதற்கு தொடர் பின்னக் கணிப்பீடு தெரிந்திருக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் இரண்டாவதுதான் உண்மையாக இருக்கும் என்று திடமாக நம்புகிறேன். ஏனென்றால், எனக்குத் தெரியவந்ததுவரை பிராமணர்கள் கிரகணத்தைத் துல்லியமாகக் கணிக்க பல வழிமுறைகள் வைத்திருக்கிறார்கள் என்றும் எவ்வளவு துல்லியமாகக் கணிக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப அந்த வழிமுறை கூடுதல் சிக்கலாக இருக்கும்   என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அல்ஜீப்ரா வழிமுறையிலும் இப்படித்தான் இருக்கும். நியூட்டனின் சீரிஸ் கோட்பாடுக்கும் இதற்கும் தொடர்பு உண்டு.

மேலோட்டமாகப் பார்க்கும்போது பழங்கால இந்திய வானவியலாளர்களுக்கு இவை எப்படித் தெரிந்திருக்க முடியும் என்று பலமான சந்தேகம் வரக்கூடும். ஆனால், பிராமணர்களிடம் அரபு நாட்டு அல்ஜிப்ரா தொடர்பான நூல்கள் இருந்ததைப் பார்த்திருக்கிறோம். அரபு நாட்டவர் அல்ஜீப்ராவில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது நமக்குத் தெரியும். க்யூபிக் சமன்பாடுகளைத் தீர்க்கும் வழிமுறைகள் கூட அவர்களுக்குத் தெரிந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. அலெக்ஸாண்ட்ரியாவைச் சேர்ந்த டைபாஃந்தஸின் 13 புத்தகங்கள் அவர்களிடம் இருந்ததாகவும் கடைசி ஏழு அழிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. எஞ்சியிருக்கும் ஆறில் நாம் இப்போது எந்த அளவுக்கு கணக்கீடுகள் செய்கிறோமோ அதே அளவுக்கு எழுதப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், அதையெல்லாம் படித்திருக்கும் பிராமணர்களுக்கு நம்மைவிட அல்ஜீப்ரா மிக நன்றாகத் தெரிந்திருக்கக் கூடுதல் வாய்ப்பு இருக்கிறது.

வரலாறு தொடரும்...வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)