பதிவு செய்த நாள்

12 ஆக் 2017
12:01

 ருக்குள் வாழ்ந்து வந்த சிங்கம் ஒன்று வழி தவறி காட்டுக்குள் நுழைந்துவிட்டது. அங்கே நிறைய புற்களைப் பார்த்ததும் மேய்ந்துகொண்டே காட்டின் நடுப்பகுதிக்கு வந்துவிட்டது. அப்போது அந்தப் பக்கம் வந்த சிங்கம், ஆன்ந்தமாகப் புற்களை மேய்ந்துகொண்டிருக்கும் மாட்டைப் பார்த்ததும், இது காட்டு மாடு அல்ல என்பதை தெரிந்துகொண்டது. இந்த மாட்டை அடித்துச் சாப்பிட்டால் அடுத்துவரும் சில நாட்கள் பசியின்றி கழிக்க முடியும் என்று யோசித்த சிங்கம், அந்த மாட்டை அருகில் இருக்கும் குகைக்குள் ஓட்டிக்கொண்டு போய்விட்டால், எளிமையாக இரையாக்கிவிடலாம் என்று திட்டம் போட்டது.அதன்படி மெதுவாக நடந்து, மாட்டின் அந்தப்பக்கம் சென்று, சிங்கம் கர்ஜித்தது. சிங்கத்தின் குரலைக்கேட்ட மாடு நடுக்கத்துடன் ஓடத்தொடங்கியது. சிங்கமும் மாட்டைக் குகையை நோக்கியே விரட்டியபடி வந்தது. அதன் சூழ்ச்சி அறியாத மாடும், சிங்கத்திடமிருந்து தப்பிக்க குகைதான் சிறந்த வழி என்று நினைத்து, அதனுள் ஓடி ஒளிந்துகொண்டது.

குகையினுள் மெதுவாகச் சிங்கம் எட்டிப் பார்த்தது. உள்ளே இருட்டாக இருந்தது. மாடு எந்தப்பக்கம் நிற்கிறதென்பதே தெரியவில்லை. ஆனால், உள்ளிருக்கும் மாட்டுக்கோ, சிங்கத்தைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. சிங்கம் அடுத்த அடி எடுத்து உள்ளே வைக்கும்போது, “நண்பா, நீ சொன்னபடியே சிங்கத்தின் பார்வையில் படும்படி உலாத்தினேன். அது என்னைத் துரத்துவதாக நினைத்து பின்னால் வந்துகொண்டிருக்கிறது. உள்ளே வந்ததும், அதைப் போட்டுத் தாக்குவோம். இந்த முறை எப்படியும் சிங்கக்கறி உண்ணாமல் நாம் காட்டை விட்டுப் போகப்போவதில்லை. பாய்வதற்குத் தயாராக இரு” என்று உள்நோக்கி, பெருங்குரலெடுத்துச் சொன்னது.

மாட்டின் குரல் குகையின் சுவர்களில் பட்டு, பயங்கரமாக எதிரொலித்தது. மெல்ல முன்னேறிய சிங்கத்திற்குப் பயம் வந்துவிட்டது. இது நாட்டுமாடு, என்ன தின்னுமோ தெரியாது. நம்மை காலி செய்யத்தான் ஏதோ திட்டம்போட்டிருக்கிறது. இனி இங்கே இருப்பது ஆபத்து என்று நினைத்த சிங்கம் குகைக்குள்ளிருந்து, வெளியேறி ஓடத்தொடங்கியது. சிங்கம் தலை தெறிக்க ஓடிவருவதை வழியில் கண்ட, நரி ஒன்று. சிங்கத்தை மறித்து, விவரத்தைக் கேட்டது. சிங்கம் பயந்துகொண்டே, நடந்த விஷயத்தைக் கூறியது. அதைக் கேட்டதும் நரிக்குச் சிரிப்பு வந்தது.

அந்த மாடு ஏதோ ஏமாற்று வேலை செய்வதாகவும், அதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும் சொன்னது. ஆனால், சிங்கம் மசியவில்லை. “சரி நானும் உடன் வருகிறேன். இதோ நம் வாலைக் கட்டிக்கொள்வோம். ஓர் ஆபத்தும் வராது. எனக்கு அந்தக் குகையைக் காட்டுங்கள்” என்று சிங்கத்தையும் அழைத்துக்கொண்டு, குகையை நோக்கி நடந்தது நரி.

குகையில் இருந்து வெளியே வந்த மாடு, தூரத்தில் சிங்கமும் நரியும் வருவதைப்ப் பார்த்ததும், மீண்டும் குகைக்குள் சென்று மறைந்துகொண்டது. இவை குகை வாசலை அடைந்ததும், மெல்லமாக உள்லே நுழைய ஆரம்பிக்கும்போது, “நரி நண்பா…எங்கள் உணவுக்கு இரண்டு சிங்கத்தைக் கட்டி இழுத்து வருவதாகச் சொன்ன நீ…இப்போது ஒரே ஒரு சிங்கத்தை மட்டும் கட்டி இழுத்து வந்திருக்கிறாயே…எங்களுக்கு எப்படி பசியாறும்?” என்று சத்தகாமக் கேட்டது.

“ஆகா…நரியும் மாட்டின் ஆள்தான் போல, நாம் ஏமாற்றப்பட்டோம்” என்று நினைத்த சிங்கம் வேகமாக ஓட்டம் பிடித்தது. சிங்கத்தின் வாலில் கட்டப்பட்டிருந்த நரி, எதிர்பாராத சிங்கத்தின் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், கல்லிலும் முள்ளிலும் பட்டு உடல் எங்கும் காயம்பட்டது. சிங்கம் நரியின் கதறலை பொருட்படுத்தாமல் ஓடிக்கொண்டே இருந்தது. அவை போய்விட்டதை உறுதி செய்துகொண்ட மாடும், குகையில் இருந்து தப்பி, நாட்டுக்குள் நலமுடன் வந்து சேர்ந்தது.

-  மாயன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)