பதிவு செய்த நாள்

14 செப் 2018
12:04

பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம் பற்றிய குறிப்புகள் -5
ரூபன் பரோ (1783)

ஆசிரியர் : தரம்பால்
தமிழில் : B.R.மகாதேவன்

இதுவரையிலும் நான் பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம் மிகவும் பழமையானது என்று சொல்லியிருந்தேன். ஒருவேளை அக்பர் காலத்தைச் சேர்ந்ததாக இருந்தால்கூட மேலே சொல்லியிருக்கும் சாதக அம்சங்கள் கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு. இதன் மூலம் ஆரம்பகால கணிப்புகளுக்கு இசைவான கணக்கீடுகளை பின்னோக்கிக் கணிக்கும் வழி முறை மூலம் கண்டைந்திருக்கவும் முடியும். பழங்காலக் கணிப்புகளுக்குப் பயன்படுத்திய வழிமுறைகளை மிகுந்த மரியாதையுடன் மதிக்கும் தன்மையும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு.
அந்தப் பழங்கால கணிப்பு முறையை இன்றைய பிராமணர்கள் பின்பற்றவில்லை. பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்வதும் இல்லை. அவை அந்தக் கணிப்புகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதுமில்லை. ஏனெனில் வான் ஆய்வுப் பதிவுகள் என்பவை தனிப்பட்ட எந்த தேசத்தையோ எந்த அறிவியல் நிபுணர்களையோ கோட்பாடுகளையோ சார்ந்தவை அல்ல. அவை வானில் நடக்கும் நிகழ்வுகளின் உண்மையான பதிவுகள். தாலமியுடைய ஆய்வானாலும் கோபர் நிக்கஸின் ஆய்வானாலும் அவை வான் நிகழ்வுகளைச் சார்ந்தவை மட்டுமே. அந்த ஆய்வுகள் பெருமளவில் செய்யப்படவேண்டும்; மிகுந்த துல்லியத்துடன் செய்யப்படவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.

இன்றைய பிராமணர்களுக்கு வானியல் குறித்துப் பெரிதாக எதுவும் தெரிந்திருப்பதாக என்னால் சொல்ல முடியவில்லை. குறிப்பாக கல்கத்தா பகுதியில் இருப்பவர்களுக்கு வானியல் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. எனினும் அவர்கள் வசம் இருக்கும் புத்தகங்களில் நிச்சயம் ஆர்வத்தைத் தூண்டும், பயனுள்ள பல விஷயங்கள் இருக்கும் என்றும் அவர்களில் சிலரிடமிருந்து பல முக்கிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்றும் நம்புகிறேன்.

பழங்கால பிராமணர்கள் எத்தனை தலைமுறைகள் தமது திறமை, நிபுணத்துவம் இவற்றைத் தக்கவைத்துக் கொண்டிருந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், அவர்களுடைய மேதமை குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆதிகால இந்திய பிராமண சமூகம் என்பது பிற்காலத்தைய ஜேஸூயிட் சபை போன்ற ஒன்று என்றே நான் நினைக்கிறேன். சால்திய வானவியலாளர்கள், பாரசீக மாகிகள், பாபிலோனிய குறி சொல்லிகள், கீழைத்தேய ஞானிகள், ஜோதிடர்கள், மந்திர தந்திரங்களில் நிபுணர்கள்,  நட்சத்திரக் கணிப்பாளர்கள் போல் பைபிளிய இறைத்தூதர்கள் அஞ்சிய நபர்கள் எல்லாம் ஒன்று இந்த பிராமணர்களேதான் அல்லது அவர்களுடைய சீடர்களேதான்.

இன்று ஜேசுயிட்கள் உலகில் ஒவ்வொரு நாடுகளுக்கும் பயணம் செய்து ஒவ்வொரு ராஜ சபைகளிலும் ஆட்சி அதிகாரம், ராஜ நிர்வாக ஆலோசனை வழங்கி செயல்படுவதுபோல் பிராமணர்களும் பழங்காலத்தில் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். தமது அறிவியல் துறைகளில் தமக்கு இருக்கும் திறமையைப் பயன்படுத்தி பிற முக்கிய விஷயங்களிலும் வழிகாட்டும் பொறுப்பை எடுத்துக்கொண்டிருப்பார்கள்.

இந்தத் தீர்மானத்தை நான் முன்வைப்பதற்கான காரணங்களைச் சொல்வதென்றால் மிக விரிவாகப் பேசவேண்டியிருக்கும். ஒரு சில அழுத்தமான உதாரணங்கள் மட்டுமே சொல்கிறேன். யூத அரசர் ஆஹாஸ் (Ahas) காலத்து புனித நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சூரியக் கடிகாரம் இந்துஸ்தானத்தின் பிராமணர்களால்தான் உருவாக்கப்பட்டதாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால், ஜெருசல தீர்க்க ரேகையை அடிப்படையாக வைத்து அது உருவாக்கப்பட்டிருந்தால் ஆஹாஸ் கால கடிகாரம் போல் கணிப்புகளை செய்திருக்கமுடியாது. அந்தக் கடிகாரம் ஏதோ நில நடுக்கோட்டுப் பகுதி தீர்க்கரேகையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். அதோடு அது கடிகார முள் ஏற்படுத்தும் நிழலை வைத்து நேரத்தைக் கணிக்கும் அடிப்படையைக் கொண்டதாக இருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட தீர்க்கரேகையை மையமாக வைத்து உருவாக்கப்படும் சூரியக் கடிகாரம் இன்னொரு இடத்துக்கும் பயன்படக்கூடும். ஆனால், அதற்கு அதை உருவாக்கியவர்களுடைய உதவி நிச்சயம் தேவைப்பட்டிருக்கும். யூதர்களுக்கு அந்த கடிகாரத்தை மிகச் சரியான இடத்தில் மிகச் சரியான வகையில் பொருத்த பிராமணர்கள்தான் நிச்சயம் உதவி புரிந்திருக்கவேண்டும். யூத ஆஹாஸ் மன்னர் இந்து வழிபாட்டைப் பின்பற்றியவர் என்பதும் இந்துக்களின் சடங்குகள், கலைகளை ஆதரித்தவர் என்பதும் நமக்குத் தெரியும்.

ஒரு இடத்தின் தீர்க்கரேகையும் சூரியனின் டிக்ளனேஷன் பகுதியும் ஒன்றாக இருக்கும்போதும் டிக்ளனேஷனை விட தீர்க்கரேகையைவிடக் குறைவாக இருக்கும்போது சூரிய கடிகார முள்ளின் அடிப்பாகமானது  அதிபரவளையத்தின் குவி பாகம் இல்லாத நிழலாக விழும். அந்தப் புள்ளியில் இருந்து வளைவுக்கு ஒரு டேன்ஜெண்ட் கோடு வரையமுடியும். நிழல் எப்போது குறுகலாகும் என்பதை இது சுட்டிக்காட்டும். இந்த எல்லா நேரங்களிலும் கடிகார முள்ளின் நிழலானது முழுவதும் இந்த கூம்பு வளையத்துக்குள்ளேதான் விழும். இந்தக் கோட்பாட்டின்படி நிலநடுக்கோட்டுப் பகுதியில் அஸிமத்களைக் கணக்கிட பிற பகுதிகளில் பின்பற்றப்படும் வழிமுறைகளைவிட  மிக எளிதாக இருக்கும் ஒரு வழிமுறையை இந்தியாவில் இருந்தபோது தெரிந்துகொண்டேன். அதோடு மிகத் துல்லியமான விடைகளைத் தருவதாகவும் அந்த வழிமுறை இருக்கிறது.

ஆஹாஸ் உள்ளிட்ட இஸ்ரவேல் அரசர்கள் உருவ வழிபாடுகளில் ஈடுபட்டதாக பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது இந்து மதமானது இந்துஸ்தானில் இருந்து மத்திய தரைக்கடல் நாடுகள் வரை பல நாடுகளில் பரவி இருந்தது தெரியவருகிறது. யூதர்கள் தொடர்ந்து அந்த உருவ வழிபாட்டுச் சடங்குகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். செதுக்கிய, வார்த்த உருவங்களை மரத்தினடியில் அமைந்த பீடங்களில் வைத்து வழிபட்டு வந்திருக்கிறார்கள். இன்று பிராமணர்களும் ஃபகீர்களும் செய்வதுபோல் தமது மகன்கள், மகள்களை தீயின் மீது நடக்கச் செய்திருக்கிறார்கள். யூதர்களின் வழிபாட்டுச் சடங்குகளில் தீக்கு மிக முக்கியமான இடம் இருந்திருக்கிறது. இன்று மலபார் கடலோரங்களில் இருப்பதுபோல் முன்பு இந்தியா முழுவதிலும் தீ வழிபாடு இருந்து வந்திருக்கிறது.

குழந்தைகளை தீயினூடாக நடக்கச் செய்வது உண்மையிலேயே அவர்களைப் பலியிடும் வழக்கத்தில் இருந்து வந்ததா இல்லையா என்று எனக்கு உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், அப்படித்தான் வந்திருக்கும் என்று நம்புகிறேன். மலபார் கடற்கரையோர மக்கள் அந்தச் சடங்கை எந்த அடிப்படையில் மேற்கொள்கிறார்கள் என்பதை ஆராய்ந்தறிய வேண்டும். இந்த சடங்குகள் எவ்வளவு தொலைவுகளுக்கு பரவியிருந்தன; பனாரஸ் பிராமணர்களிடம் இந்தச் சடங்குகளின் எச்சங்கள் ஏதேனும் இன்றும் மிச்சம் இருக்கின்றனவா என்றும்  ஆராய வேண்டும். நிச்சயமாக அந்தச் சடங்குகள் இப்போதும் அவர்கள் மத்தியில் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

பிராமணர்கள் கலை, இலக்கியங்களில் இத்தனை மேதமை பெற்று விளங்குவதற்கு எது காரணம் என்பதை நம்மால் கண்டுபிடிக்க மூடியவில்லை.  .... வருடங்களுக்கு முன்பாக (வருடம் தெரியவில்லை - ஆசிரியர் தரம் பால்)  அவர்களை வென்ற விக்ரமஜீத் என்ற மன்னர் தாலமிய வானவியல் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவருடைய உத்தரவின் பேரில் இந்துஸ்தானின் வானவியல் வழிமுறை முழுவதுமாக மறைந்ததாகச்  சொல்லப்படுகிறது.

இந்தக் கூற்றில் ஓரளவுக்கே உண்மை இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இந்திய வானவியல் வழிமுறைகளில் ஆழமான நிபுணத்துவம் பெற்றவர்கள் மன்னர் ஒருவருடைய முட்டாள்த்தனமான உத்தரவு நீங்கலாக வேறு எந்தக் காரணமும் இல்லாமல் வேறொரு கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு தம்முடையதை அப்படியே கைவிட்டுவிட வாய்ப்பு இல்லை. அந்தப் பழங்கால இந்துஸ்தானிய வானவியல் வழிமுறை நீண்ட காலத்துக்கு தனிப்பட்ட முறையில் பின்பற்றப்பட்டிருக்கும் என்றே நினைக்கிறேன். பிராமணர்கள் அரச அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டதுபோல் வெளியில் காட்டிக் கொண்டு தமது வழிமுறையை நிச்சயம் தொடர்ந்து பின்பற்றியிருப்பார்கள். ஐரோப்பாவில் கத்தோலிக்க பகுதிகளில் அதுதானே நடக்கிறது.

போப்பின் ஆணையின்படிப் பார்த்தால் கோப்பர் நிக்கஸின் கோட்பாட்டை ஏற்பது கிறிஸ்தவ மதத்துக்கு விரோதமானது. அதை வெளிப்படையாக ஆதரித்தாலோ கிறிஸ்தவத்தை தூற்றுவதற்குச் சமம். எனவே கற்றறிந்த ஒவ்வொருவரும் வெளிப்படையாக கோப்பர் நிக்கஸின் கோட்பாட்டை மறுதலித்தும் தனிப்பட்ட உரையாடல்களில் அதை ஆதரித்தும் பேசுவது வழக்கம். பிராமணர்கள் எழுதியிருக்கும் படைப்புகளை நாம் விரிவாக நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால்தான் தாலமியின் கோட்பாடுகள் இந்தியாவில் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன என்பது தெரியவரும். இந்த இரண்டு காலகட்டங்களுக்கு இடையிலான இடைவெளி மிகவும் அதிகம் இல்லை என்பதால், இந்துக்களின் சுயமான வானவியல் கோட்பாடுகள் மிக மெதுவாகவே வழக்கொழிந்துபோயிருக்கும். அது உண்மையென்றால் அவற்றின் மிக முக்கியமான படைப்புகளில் சில, கால வெள்ளத்தில் அழியாமல் நம்மை வந்தடைவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் அதிகம் இருக்கும்.

வரலாறு தொடரும்...வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)