பதிவு செய்த நாள்

18 செப் 2018
18:38

பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம்பற்றிச் சில குறிப்புகள் - 6
(ரூபன் பரோ - 1783)

ஆசிரியர் : தரம்பால்
தமிழில் : B.R.மகாதேவன்

நாம் பொதுவாக நினைப்பதைவிட வானவியல் கணிப்புகளுக்குக் கூடுதலான கணித நிபுணத்துவம் தேவைப்படும். பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம் நவீன காலத்தில் கட்டப்பட்டதாக வைத்துக்கொண்டால் கணிதம் போன்ற துறைகளில் மிகுந்த மேதமையை அந்தக் கட்டத்தில் எட்டியிருக்கவும் வேண்டும். இந்த கணித நிபுணத்துவமானது ஒன்று பழங்கால பிராமணர்களின் படைப்புகளில் இருந்து பெறப்பட்டிருக்கவேண்டும். அல்லது வேறு நாட்டில் இருந்து இங்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவேண்டும். பழங்கால பிராமணர்களிடமிருந்தே பெறப்பட்டிருந்தால் அந்தப் புத்தகங்கள் தற்போதும் அவர்கள் வசம் இருக்கும். அதை நாம் பார்த்துப் புரிந்துகொள்வதில் பெரிய சிரமம் இருக்காது.

வேறு நாட்டில் இருந்து கணித அறிவு இறக்குமதியாகியிருந்தால், எப்போது, எந்த நாட்டில் இருந்து வந்து சேர்ந்தது என்பதை நாம் முதலில் கண்டுபிடித்தாகவேண்டியிருக்கும். ஏனென்றால், அப்போதுதான் எந்த நாட்டு ஆவணங்களை நாம் ஆராய வேண்டியிருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும். அந்த நாடுதான் அக்கம்பக்கத்து நாடுகளின் அறிவுச் சுரங்கங்களைச் சேகரித்து வைத்திருக்கும். அரபு நாட்டு கணிதத்தின் மூல வடிவங்களைத் தொகுத்து வைத்திருக்கும். ஆனால், நமக்குத் தெரிந்த அரபு நாட்டு கணித மேதைகள் எல்லாரும் கிரேக்க கணித படைப்புகளைக் கைவசம் வைத்திருந்தது தெரியவந்திருக்கிறது (நமக்குத் தெரிய வந்திருக்கும் கிரேக்க கணிதம் என்பதே அரபு நாட்டு படைப்புகளில் இருந்துதான் பெறப்பட்டிருக்கிறது). எனவே, இந்த கணித நூல்களின் மூலப் படைப்பைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நாம் ஆர்கிமிடிஸ், யூக்ளிட், டைஃபன்ந்தஸ், அபோலோனியஸ் ஆகியோரின் அற்புதமான படைப்புகளைக் கண்டடைந்தாகவேண்டும். வெகு காலத்துக்குப் பயன்பாட்டில் இல்லாத அவற்றை ஐரோப்பிய கணிதவியலாளர்கள்தான் கண்டுபிடித்துத் தொகுத்துவருகிறார்கள்.

ஒருவேளை இந்த பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம் வான் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக உருவாக்கப்படாமல் துறவியர் மடமாகவே கட்டப்பட்டிருந்தால் அந்த வான் ஆராய்ச்சிக்கூடம் பற்றி பெரிதாகக் குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமே இருக்காது. எந்தவொரு வான் ஆய்வுத் தகவலும் கிடைக்காது. அதன் வடிவம், நீள அகலம், அங்கு இருக்கும் கருவிகள், பொருட்கள் அது அமைந்திருக்கும் இடம், கோணம் என அதுவுமே நமக்கு எந்தவொரு பயனுள்ள தகவலையும் அளிக்கக்கூடியதாக இருக்காது.

ஒருவேளை இவை உண்மையாகவே இருந்தாலும் பனாரஸ் சார்ந்து ஆய்வு செய்ய நாம் செலவிடும் தொகை எந்த நஷ்டத்தையும் கொண்டுவராது. ஏனெனில் புவியியல், வானிலையியல், வானவியல் தொடர்பாக பல வேறு தகவல்கள் நமக்குக் கிடைக்கும். அது நாம் மேற்கொள்ளும் சிரமங்களுக்குக் கிடைக்கும் சன்மானமாக இருக்கும். இந்தியா தொடர்பாக மிகக் குறைவான ஆய்வுகளே இதுவரை நடந்திருக்கின்றன. பாண்டிச்சேரி நீங்கலாக வேறு இந்தியாவின் எந்தவொரு பகுதியின் அட்சரேகையும் முறையாகக் கணிக்கப்படவில்லை. தீர்க்கரேகைக் கணிப்புகளும் இதுபோலத்தான் இருக்கின்றன.

இந்தியா குறித்த பிரிட்டிஷ் வரைபடங்கள் எல்லாமே சர்வேயர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களால் பொத்தாம் பொதுவான மலைகளின் வரிசை, குத்துமதிப்பிலான காடுகள் பற்றிய விவரங்கள் இவற்றைக் கொண்டதாகவே இருக்கின்றன. துல்லியமான அட்சரேகை, தீர்க்கரேகைக் கணக்குகள் எதுவும் இல்லாமல் வெறுமனே படம் வரையும் திறமையை மட்டுமே கொண்ட நபர்களால் அந்த வரைபடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இப்படியானவர்கள் உருவாக்கும் வரைபடங்கள் அந்த நாட்டின் இடங்கள் பற்றி மிக மோசமாகச் சுட்டிக்காட்டுபவையாகவே இருக்கும். புவியியல்ரீதியாக இந்தப் படங்களால் எந்தவொரு நன்மையும் கிடைக்காது. மாறாக அவை மிகப் பெரிய இடையூறாகவே இருக்கும். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வானவியலைப் பயன்படுத்தி ஒரு நாட்டின் முக்கியமான பகுதிகளின் இருப்பிடத்தைக் கணிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. பல்வேறு பகுதிகளின் வான் ஆய்வுத் தகவல்களைக் கொண்டு பனாரஸ் போன்ற பகுதிகளின் தீர்க்கரேகை முதலானவற்றைக் கண்டுகொள்ள முடியும். இது பெருமளவுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த திசையிலான நகர்வுகள் நமக்கு மேலும் பலவகையில் உதவிகரமாக இருக்கும்.

காந்தச் சரிவு, காந்த விலகல் போன்றவற்றை அளப்பதன் மூலமும் இந்த ஆய்வுகளை மேலும் துல்லியப்படுத்த முடியும். இந்தியா சார்ந்த காந்தவியல் கணிப்புகளை நாம் கண்டடைய போதுமான ஆய்வுகள் இதுவரை செய்யவில்லை. தொபோல்ஸ்கி பகுதியில் தெ லெ சாப்பே மேற்கொண்ட ஒரே ஒரு ஆய்வு நீங்கலாக இந்தியாவில் இருந்து உறை பனிக்கடல் வரையும் பாரசீகத்தில் இருந்து காம்சத்கா வரையிலும் எந்தவொரு காந்தவியல் ஆய்வும் செய்யப்பட்டிருக்கவில்லை. எனவே பனாரஸ் பகுதி சார்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வு நிச்சயம் இந்தவகையில் பயனுள்ளதாக இருக்கும். 

பனாரஸ் பகுதியின் வெப்பம், ஈரப்பதம், காற்றின் அடர்த்தி இவற்றுக்கு ஏற்ப வாயு மண்டலத்தின் ஒளிச்சிதறல், காந்த அலை விலகல் போன்றவை எப்படி இருக்கும் என்பதை ஆராய்வதும் அவசியமாக இருக்கும். காசினி, நியூட்டன், தெ லா கெய்லி ஆகியோர் உருவாக்கிய அட்டவணைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக இருக்கின்றன. பனாரஸ் அட்டவணைகளை ஒப்பிடும்போது அவையெல்லாம் அதீதமான தீர்க்கரேகை சார்ந்ததாக அமைக்கப்பட்டிருந்தன.

பனாரஸ் சார்ந்து கிடைக்கும் தரவுகள் அந்த அட்டவணைகளில் இருந்து நிச்சயம் மாறுபட்டதாக இருக்கும். அதோடு வாயு மண்டலத்தின் ஒளிச் சிதறல் கோட்பாட்டை மேலும் திறம்படப் புரிந்துகொள்ள உதவும். நிலநடுக்கோட்டுப் பகுதிகளிலான கடல் பயணங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். பழங்கால ஒளிச் சிதறல் தரவுகள் ஏதேனும் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இந்திய தட்பவெப்ப நிலையும் இங்கிலாந்தின் தட்ப வெப்ப நிலையும் முற்றிலும் மாறுபட்டது. எனவே பொதுவான சில அம்சங்களைக் கொண்டே சில முடிவுகளை எடுக்க முடியும். ஒளிச்சிதறல், காந்த விலகல் போன்றவற்றுக்குப் பல காரணங்கள் உண்டு. ஒரு சிலதான் இதுவரை தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன.

ஒரு ஆய்வாளரிடம் சரியான ஆய்வுக் கருவி தரப்பட்டால் முதலில் டிக்கிஸ் குறிப்பிட்டிருக்கும்படி சந்திரனின் பரலாக்ஸைக் கண்டுபிடிக்கவேண்டும். அடுத்ததாக செயிண்ட் ஹெலேனாவில் மஸ்கலைன் பின்பற்றிய வழியில் ஆய்வு செய்யவேண்டும். இது ஒருவகையில் மெரிடியனின் கோணத்தைக் கண்டுபிடிக்க உதவும். ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் ஒரு ஆய்வை மேற்கொண்டால் பிழைகள் குறைய வாய்ப்பு உண்டு. டிகிரி கோணத்தை கணக்கிடுவதைவிட இந்த வழிமுறை கூடுதல் சாதக அம்சங்களைக் கொண்டது. ஏனென்றால் இதனால் மலைகளினால் ஏற்படும் சிதறல்கள் இருக்காது.

வானிலையியல், காற்றின் அடர்த்தி பற்றிய ஆய்வு, வானவியல், மின் அலைகள் போன்றவை தொடர்பாக பனாரஸ் பகுதியில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பல முடிவற்ற சாத்தியக்கூறுகளை நமக்குத் தரும். இவை எல்லாமே பல்வேறு அறிவியல் துறை சார்ந்த கோட்பாடுகளுக்கு உதவிகரமாக அமையும். இந்த ஆய்வுப் பணிகளை முன்னெடுக்க அதிக நேரமும் ஆகாது.

வானவியல் கோட்பாடுகள், நடைமுறைகள் தொடர்பான போதிய பரிச்சயம் உள்ள ஒருவரை இந்த ஆய்வுக்கு அனுப்பவேண்டும். கிழக்கிந்திய கம்பெனிக்கு சொந்தமான மற்றும் அதைச் சார்ந்து இருக்கும் நகரங்கள், ஊர்களின் தீர்க்க ரேகை, அட்ச ரேகை இவற்றைத் துல்லியமாக அளக்க முடிந்த கருவிகளையும் கொடுத்து அனுப்பவேண்டும். இந்த பகுதிகள் தொடர்பான முறையான சர்வேக்களுக்குத் தேவையான தரவுகளைச் சேகரித்தல், இந்தப் பகுதிகளின் பழங்கால இன்றைய நிலை இவை தொடர்பான தரவுகளைச் சேகரித்தல் என்பதோடு நின்றுவிடக்கூடாது. இதுவரையில் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளப்படாத வானவியல் மற்றும் நினைவுச்சின்னங்கள் பற்றிய முழு தகவல்களையும் தொகுக்கச் சொல்லவேண்டும். இவற்றுக்கு உள்ளூர் மக்களிடமிருந்து எதிர்ப்போ அதிருப்தியோ வெளிப்பட்டால் மெரிடியன் அல்லது அட்ச தீர்க்க ரேகை மட்டுமே அளக்கப்போவதாகச் சொல்லிச் சமாளித்துவிடவேண்டும்.

வரலாறு தொடரும்...வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)