பாகம் 4
சனி கிரகத்தின் ஆறாவது துணைக்கோள் - 1
(கர்னல் ட்டி.டி.பியர்ஸ், லண்டன் ராலச் சொசைட்டி செக்ரட்டரிக்கு அனுப்பிய ஆவணம்
மதராஸ், 22, செப்டம்பர் 1783)
ஆசிரியர் : தரம்பால்
தமிழில் : B.R.மகாதேவன்
தி வொண்டர்ஸ் ஆஃப் தி க்ரியேஷன் என்ற தலைப்பில் பாரசீக மொழியில் எழுதப்பட்ட மிகப் பெரிய புத்தகமொன்றின் சிறிய பகுதியை இந்தக் கடிதத்துடன் இணைத்து அனுப்பியிருக்கிறேன். அந்தப் புத்தகம் ஒருவகையான பொதுவான வரலாறு பற்றியது. அராபியர்கள் மேற்கொண்ட நில வழிப் பயணங்கள், கடல் பயணங்கள் ஆகியவற்றிலிருந்தும் அறிவுத்துறை சார்ந்த நூல்களில் இருந்தும் தொகுத்து உருவாக்கப்பட்ட புத்தகம். அராபியர்கள் அயல் நாடுகளுடன் மிகப் பெரிய அளவில் வாணிபம் செய்ததும் கீழைத்தேய இந்தியப் பகுதிகளில் பல குடியேற்றங்களை அமைத்ததும் நன்கு தெரிந்த விஷயமே. அந்தப் பகுதிகளில் இன்றும் அவர்களுடைய மதமும் பழக்க வழக்கங்களும் பின்பற்றப்பட்டுவருகின்றன. அந்தப் புத்தகம் தொடர்பான விவரங்களை ராயல் சொசைட்டிக்கு பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.
வான்வெளியின் அதிசயங்கள், கிரகங்கள் பற்றிய வருணனைகளில் இருந்து இந்தப் புத்தகம் ஆரம்பிக்கிறது. தாலமிய சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டது. செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்கள் நீங்கலாக பிறவற்றுக்கு உருவங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. நான் படித்த புத்தகத்தில் அந்த கிரகங்களின் வடிவங்களுக்கு காலி இடங்கள் விடப்பட்டுள்ளன. சூரியனும் சந்திரனும் நாம் வரைவதைப் போலவேதான் குறிப்பிடப்பட்டுள்ளன. புதன் கிரகத்துக்கான நபர் கையில் காகிதம், எழுதுகோலுடன் எழுதிக் கொண்டிருப்பதுபோல் சித்திரிக்கப்பட்டுள்ளது. அவர் முன்னால் ஒரு மைக்கூடும் காணப்படுகிறது. அயர்லாந்து ஹார்ப் போன்ற தந்தி இசைக்கருவியை அமர்ந்தபடி இசைக்கும் ஒரு பெண் வடிவில் வெள்ளி கிரகத்து நபர் சித்திரிக்கப்பட்டிருக்கிறார். இந்தக் கடிதத்தை நான் எழுதுவதற்கு முக்கிய காரணம் சனி கிரகம் பற்றிய சித்திரம் தான்.
இந்தப் பகுதியைச் சேர்ந்த கற்றறிந்தவர்களிடம் பேசியபோது செவ்வாய் கிரகத்துக்கு போர் வீரன் சித்திரமும் வியாழன் கிரகத்துக்கு முதியவர் ஒருவரும் அவரைச் சுற்றி நான்கு பெண்கள் ஆடிக் கொண்டிருப்பதுபோலவும் வரைந்திருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், இந்தப் புத்தகத்தில் இதற்கு சற்று மாறான விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. நான் அந்த சித்திரத்தைப் பார்க்கவில்லை. எனவே அவர்கள் சொன்னதை இங்கு அப்படியே குறிப்பிட்டிருக்கிறேன்.
ஹிஜிரா வருடக் கணிப்பின்படியான ஐந்து அல்லது ஆறாவது நூற்றாண்டில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கலாம். திரு பாக் (Mr.Palk) என்பவரிடம் இருந்த பிரதியை வாங்கி நான் ஒரு நகல் எடுத்துக்கொண்டேன். அந்தப் புத்தகத்தில் இருந்த உருவங்கள் எல்லாமே ஓவியங்களாக வரையப்பட்டிருந்தன. அந்தப் புத்தகம் எத்தனை வருடம் பழமையானது என்பதை என்னால் சொல்ல முடியவில்லை.
நான் இந்தப் புத்தகத்தைப் பற்றி ஏன் சொல்கிறேன் என்பதை இப்போது விளக்கமாகச் சொல்கிறேன். சனி கிரகத்தின் சித்திரங்களை உங்களுக்குச் சொல்வதற்காகவே நான் இந்தப் புத்தகத்தைப் பிரதியெடுத்தியிருக்கிறேன். அந்தப் புத்தகத்தின் ஒரு நகல் பிரதியுடன் அந்த கிரகம் தொடர்பான பகுதிகளை லண்டனுக்கு அனுப்புவதற்காக நான்கு ஆண்டுகளுக்கு முன்பே மொழிபெயர்க்கவும் தொடங்கியிருந்தேன். ஆனால், அந்தப் பெரிய புத்தகத்தில் இருந்த ஓவியங்களை வரைந்து எடுக்க வேண்டியிருந்ததால் என்னால் உடனடியாக அதைச் செய்து முடிக்க முடியாமல் போய்விட்டது. எனினும் 1780-ல் அந்த ஓவியங்கள் வரைந்து கிடைத்தன. என் பங்குப் பணியான மொழிபெயர்ப்பைச் செய்யத் தொடங்கினேன்.
ஆனால், ஹைதர் அலியுடனான போர் என்னை கர்நாடக பகுதிக்குச் செல்ல வைத்துவிட்டது. அந்தப் பெரிய புத்தகத்தில் இருந்து சொசைட்டிக்கு அனுப்ப விரும்பிய பகுதி என்னிடம் தான் இருந்தது. எனினும் அவற்றை மொழிபெயர்க்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அந்தப் புத்தகத்தின் பழமை பற்றியும் சனி கிரகம் பற்றியும் மட்டுமே கொஞ்சம் போல் மொழிபெயர்க்க முடிந்தது. அதில் சனி கிரகத்தின் துணைக்கோள்கள் பற்றியோ அதைச் சுற்றி இருக்கும் வளையம் பற்றியோ எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அந்தப் புத்தகத்தில் சனி கிரகத்தின் சுழற்சி காலம் பற்றிய குறிப்பு தவறானதாகவே இருந்தது. 70 ஆண்டு சுழற்சி காலம் கொண்ட ஏழாவது கிரகத்துடன் அதை இணைத்துச் சொல்கிறது. சனி கிரகத்தைப் பார்க்கவே முடிவதில்லை. பார்க்க முடிந்தால் உலகுக்கே பெரும் கேடு என்றே நான் சந்தித்த பிராமணர் சொன்னார்.
அந்த ஓவியத்தை நான் பார்த்ததும் அது எனக்கு சனி கிரகத்தையே நினைவுபடுத்தியது. நமக்கு இதுவரை தெரிந்திராத ஒரு விஷயத்தையும் அது குறிப்பால் உணர்த்தியது. அதாவது சனி கிரகத்தின் துணைக்கோள்கள் மற்றும் வளையம் பற்றிச் சொல்கிறேன். ஐரோப்பியர்கள் இதுவரை சனி கிரகத்துக்கு ஐந்து துணைக்கோள்கள் இருப்பதையே கண்டுபிடித்திருக்கிறோம். இந்தப் ஓவியத்தில் ஆறு துணைக்கோள்கள் (ஆறு கரங்கள் கொண்ட சனி உருவம்) இருப்பதாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கரங்களில் வைத்திருக்கும் பொருட்கள் அவற்றின் பெயர்களைக் குறிப்பதாகக் கருதுகிறேன். அந்த துணைக்கோள்கள் குறிப்பிட்ட எல்லைக்குள் நகரக்கூடியவை; ஒருபோதும் சனி கிரகத்தைவிட்டு விலகிச் செல்லாது என்பதை இந்தக் கரங்களின் அமைப்பு குறிப்பால் உணர்த்துகிறது. ஏழாவது கரம் ஒரு கிரீடத்தைக் கொண்டிருக்கிறது. அது நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
வளையத்தின் நான்கு கான்செண்ட்ரிக் பகுதிகளை (ஒரே மையத்தைக் கொண்ட வட்டங்கள்) அது குறிப்பதாகக் கருதுகிறேன். வளையத்தைப் பற்றியிருக்கும் கரத்தின் கீழே தென்படும் இருளானது அந்த வளையம் உடம்பை எந்த இடத்திலும் தொடவில்லை. உடம்புக்கும் (கிரகத்துக்கும்) வளையத்துக்கும் இடையே இடைவெளி இருக்கிறது என்பதைச் சுட்டுகிறது. கால்கள் மடங்கியநிலையில் சித்திரிக்கப்பட்டுள்ளன. இந்த வளையம் கிரகங்களைத் தாங்கிப் பிடிப்பதன் குறியீடு அது என்று நினைக்கிறேன். அல்லது அந்த உடல் (கிரகம்) அந்த வளையத்தின் மீது அமரும்படியாக இருக்கிறது அல்லது அந்த வளையத்துக்குள் உடல் இருக்கிறது என்பதைச் சுட்டுகிறது என்று நினைக்கிறேன். அந்த சனி உருவத்துக்கு நீண்ட தாடி இருக்கிறது. மெலிந்த உடலாக இருக்கிறது. இவையெல்லாம் மிக மிகப் பழங்காலத்தியது என்பதையும் லகுவாக நகரக்கூடியது என்பதையும் சுட்டுவதாகக் கருதுகிறேன்.
பழங்காலத்தில் இப்படித் துல்லியமாகச் சித்திரிக்க உதவும் வகையில் எந்தவொரு தொலைநோக்குக் கருவியும் இருந்திருக்காது. எனவே இந்த ஓவியத்தை இப்படிப் புரிந்துகொள்வது தவறு என்று ஒருவர் சொல்லக்கூடும். ஆனால், என்றாவது சனி கிரகத்துக்கு ஆறாவது துணைக்கோள் இருக்கும் விஷயம் கண்டுபிடிக்கப்பட்டால் இந்தப் பழங்கால ஓவியம் சுட்டிக்காட்டுவது அதைத்தான் என்பது அழுத்தமாக உறுதிப்படும் என்றே நான் கருதுகிறேன். நம்மிடம் தற்போது இருப்பவற்றைவிட மிகவும் சக்தி வாய்ந்த வானியல் உபகரணங்கள் பழங்காலத்தில் அவர்களிடம் இருந்திருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தக் கடிதத்தை நான் மிகவும் சுருக்கமாக எழுதவே விரும்பியிருக்கிறேன். எனவே நான் இந்த ஒரு விஷயத்தை மட்டுமே சொல்கிறேன்.
அல்ஹசன் (இராக்கில் பிறந்த எகிப்திய வடிவ இயல் - ஒளிபெருக்கியியல் மேதை) நிறங்கள், ஒளிபெருக்கிகள், தொலைநோக்கிகள் பற்றி ஆராய்ந்து சொன்னவர். நான் அவரைப் பார்த்ததில்லை. ஆனால், அவருடைய புத்தகங்கள், ஆவணப் பொருட்கள் எனக்குக் கிடைத்தால் அவற்றில் இருந்து தொலைநோக்கிகள் பற்றி என்னல் தெரிந்துகொள்ள முடியும். அப்படி எதுவும் கிடைக்கவில்லையென்றால் அதற்காக அப்படி ஒரு கருவி அன்று இருந்திருக்கவில்லை என்று அர்த்தமாகாது. பழங்கால நூல்கள், ஆவணங்கள், பொருட்கள் எல்லாம் எவ்வளவு அழிந்துவிட்டன என்பது நமக்குத் தெரியும். வானவியல் போன்ற அறிவியல் துறைகளில் எல்லாம் கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள் மட்டுமே ஈடுபட்டிருப்பார்கள். அவர்கள் வசம் இருந்த ஓலைச்சுவடிகள் எல்லாம் மிக மிகக் குறைவாகவே இருந்திருக்கும். இன்றும்கூட அப்படியான புத்தகங்களின் பிரதிகள் மிகக் குறைவாகவே அச்சிடப்படுகிறன. அவற்றில் கூட ஏராளமானவை வழக்கொழிந்துவிட்டன. ஒரு சில மிகப் பெரிய நூலகங்களில் மட்டுமே ஓரிரு பிரதிகள் இருக்கின்றன. வெறும் ஓலைச்சுவடிகளில் கையால் எழுதி வந்த காலகட்டத்தில் உருவான படைப்புகள் இதைவிடக் குறைவாகவே இருந்திருக்கும். இதைவிட பெருமளவில் அழிந்தும் போயிருக்கும்.
உலகில் எந்த நாட்டிலும் தொலைநோக்கி, வானவியல் கருவிகள் போன்றவற்றைப் பயன்படுத்தியவர்கள் வெகு சொற்பமே என்ற நிலையில் அது தொடர்பான சுவடிகளும் வெகு குறைவாகவே இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜோதிடப் பயன்பாடுகளுக்கு உதவக்கூடிய வானியல் கணக்குகள், அட்டவணைகள் அளவுக்குக்கூட பிற வானியல் புத்தகங்கள் இருந்திருக்காது. அப்படி மிக அரிதாக இருக்கும் சுவடிகள் ஐரோப்பியர்களுக்குக் கிடைப்பது மிகவும் அரிது.
வரலாறு தொடரும்...