பதிவு செய்த நாள்

21 செப் 2018
16:20

ன்று எழுதுகின்ற பலரும் செய்கின்ற முதல் தவறு ஒற்றெழுத்துப் பிழைதான். நினைப்பதை அப்படியே எழுதுவதுதான் எழுத்து என்றாலும் எழுத்துக்கென்று சில வரையறைகள் இருக்கின்றன. அவற்றை அறியாமல் எழுதினால், பொருளே மாறிவிடும்.

எடுத்துக்காட்டாக, மருந்து கடை என்பதும், மருந்துக் கடை என்பதும் ஒரே பொருளையா தருகின்றன? இரண்டும் ஒன்றுதான் என்று சொல்ல முடியுமா? மருந்து கடை என்பது 'மருந்தினைக் கடைவாயாக' என்னும் பொருளைத் தருகிறது. சித்த வைத்தியத்தில் பல்வேறு இடுபொருட்களை இட்டு மருந்தைக் கடையும் முறை உண்டு.

'மருந்துக் கடை' என்பது 'மருந்தை விற்கும் கடை' என்னும் பொருளைத் தருகிறது. ஆக, மருந்து கடை, மருந்துக் கடை ஆகிய இரண்டும் வெவ்வேறு பொருளைத் தருகின்றன. மருந்து கடை என்று கட்டளை இடும்போது 'க்' வரவில்லை. மருந்துக் கடை என்று கடையைக் குறிக்கும்போது 'க்' வந்தது. மாற்றி எழுதினால் பொருளே மாறிவிடுகிறது.

இரண்டு சொற்களுக்கு இடையே ஒற்று மிகுவது என்னும் பண்பு 'வலிமிகுதல்' எனப்படும். இங்கே 'வலி' என்பது வல்லின மெய்யெழுத்துகளைக் (க்,ச்,ட்,த்,ப்,ற்) குறிக்கும். இருசொற்கள் இணையும்போது ஒற்றெழுத்து வந்தால், அதனை 'வலி மிகுதல்' என்போம்; வராது எனில் 'வலி மிகாது' என்போம்.

ஒற்றெழுத்துப் பிழை, ஒற்றுப் பிழை, வல்லெழுத்துப் பிழை, சந்திப் பிழை என்று பலவகைகளில் கூறப்பட்டாலும், அவை வலிமிகுதல், மிகாதல் ஆகியவற்றைத்தான் குறிக்கின்றன.

வலி மிகல், வலி மிகாமை இரண்டுக்குமே, நம் இலக்கணத்தில் தெளிவான வழிகாட்டல்கள் இருக்கின்றன.

தோப்புகள், தோப்புக்கள், படிகல், படிக்கல் என ஒரே சொல்லுக்குள்ளும் வலிமிகுதல், மிகாமை உண்டு. தோப்புகள் என்பது தோப்பின் பன்மையைக் குறிப்பது. தோப்புக்கள் என்பது தோப்பிலிருந்து இறக்கப்பட்ட கள்ளைக் குறிப்பது.

படிகல் என்றால் 'படிப்பாயாக கற்பாயாக' என்று கட்டளை பிறப்பிக்கும். செய்யுளில் அவ்வாறு சொல் இடைவெளி இல்லாமல் சேர்த்து எழுதிச் செல்வார்கள். படிக்கல் என்றால் படியாக இடப்பட்ட கல்லைக் குறிக்கும்.

வலிமிகுதல் என்னும் இந்த மொழிப்பண்பு உலகின் வேறெந்த மொழிகளிலும் இல்லையாம். தமிழிலும் மலையாளத்திலும் மட்டுமே காணப்படுவதாக மொழியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

- மகுடேசுவரன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)