பதிவு செய்த நாள்

24 செப் 2018
19:14

 சனி கிரகத்தின் ஆறாவது துணைக்கோள் - 2
(கர்னல் ட்டி.டி.பியர்ஸ்,
லண்டன் ராயல் சொசைட்டி செக்ரட்டரிக்கு அனுப்பிய ஆவணம்
மதராஸ், 22, செப்டம்பர் 1783)

பாகம் 4

ஆசிரியர் : தரம்பால்
தமிழில் : B.R.மகாதேவன்

பழங்காலத்தினரிடம் நம்மிடம் தற்போது இருப்பதுபோன்ற வானவியல் ஆராய்ச்சிகளுக்கான தொலை நோக்கிகள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. எனினும் வேறு வகையானவை இருந்திருக்கும் என்பதற்கான ஆதாரங்களை இப்போது குறிப்பிட விரும்புகிறேன். இதுபோன்ற விஷயங்களை நான் அடிக்கடிப் பேசும் ஒரு அறிவார்ந்த முஸல்மானிடம் கேட்டேன். நாம் பயன்படுத்துவதுபோன்ற தொலைநோக்கிகள் பற்றி பழங்கால நூல்களில் ஏதேனும் குறிப்பிட்டிருக்கிறதா என்று கேட்டேன். அராபியர்களில் அல்ஹசன் நீங்கலாக வேறு யாரும் இதுபற்றி எதுவும் குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவில்லை என்று சொன்னார்.  அல்ஹசனும்கூட அந்தக் கருவிகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், தொலைநோக்கிகள் தொடர்பான கோட்பாடுகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் என்று சொன்னார்.

அல்ஹஸன் ஒளி பற்றியும் ஒளிபிரதிபலிப்பு பற்றியும் எழுதியிருக்கிறார். முப்பட்டைகள், ஆடிகள் மூலம் ஒளிச் சிதறல் ஆய்வுகள் பற்றி எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம். அதனால் அவரிடம் தொலைநோக்கிகளும் இருந்திருக்காது என்ற முடிவுக்கு நாம் வரமுடியாது.

ஒளி விலகல், ஒளிச் சிதறல் பற்றி விஞ்ஞானபூர்வமான ஒரு புத்தகம் தொலைநோக்கிகள் பற்றியோ அது தொடர்பான கோட்பாடுகள் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படாமல் எழுதப்படுவதாக வைத்துக்கொள்வோம். ஏதோவொரு விபத்தின் மூலமாக (அல்லது கால ஓட்டத்தில்) அந்தத் துறைபற்றி புத்தகங்கள், அல்லது தொலைநோக்கிகள் பற்றிய புத்தகங்கள், தொலைநோக்கிகள் எல்லாமே அழிந்துபோய்விடுவதாக வைத்துக்கொள்வோம். நீண்ட காலம் கழித்து இது தொடர்பாக ஆராய்பவர்களுக்கு  அந்தக் கோட்பாடுகள் பற்றியோ அதன் அடிப்படையில் அமைந்த கருவிகள் பற்றியோ எதுவுமே கிடைக்க வாய்ப்பில்லை. அதனால் அவை இருந்திருக்கவில்லை என்று சொல்லமுடியுமா என்ன?

அல்ஹசன் தொலைநோக்கிகள் பற்றிய கோட்பாடுகளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். கைவினைஞர்களிடம் அந்தக் கருவிகள் இருந்திருக்கும். அவர்களுக்கு கல்வி அறிவு பெரிதாக இல்லையென்றாலும் இப்போதைய கைவினைக் கலைஞர்களைப் போலவே பயிற்சியின் மூலம் செய்து பார்த்து கற்றுக்கொண்டிருப்பார்கள்.

எனக்குப் பரிச்சயமான பிராமணர் ஒருவரிடம் வானவியல் அட்டவணைகளை அவர்கள் எப்படி உருவாக்குகிறார்கள் என்று கேட்டேன். பழங்காலத்தில் இருந்தவர்கள் மூடுண்ட கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதில் இருந்துகொண்டு நட்சத்திரங்கள், கிரகங்களை ஆராய்ந்து அட்டவணைகளை வடிவமைத்ததாகச் சொன்னார்.  என்னவிதமான வழிமுறைகளைப் பின்பற்றினார்கள் என்பது அவருக்குத் தெரியவில்லை. ”அந்த அட்டவணைகளைப் பயன்படுத்தமட்டுமே தெரியும். புதிதாக எதையும் உருவாக்கத் தெரியாது’ என்றார்கள்.

சூரியக் கடவுளை அறுபது ஆண்டுகள் தொடர்ந்து விடாமல் தவம் செய்த பிராமணர் ஒருவருடைய விடா முயற்சியைப் பாராட்டி சூரிய பகவான் இவற்றை பரிசாகக் கொடுத்ததாகச் சொன்னார். தொடந்து அறுபது வருடங்கள் தவம் செய்தார் என்பது இடைவிடாமல் செய்த கடினமான வான் ஆராய்ச்சியின் குறியீட்டுக் கதைதான் என்று நான் சொன்னதை அந்த பிராமணர் ஒப்புக்கொண்டார்.

என்னைப் போலவே அந்த முஸல்மானும் அல்ஹசனைப் பற்றி நினைத்தார். எனினும் தொலைநோக்கிகளைப் பற்றிய விவரங்கள் இல்லையென்பதால் அனைத்தையுமே சந்தேகத்துக்கு இடமானதாகவே ஆக்குகிறது (வெள்ளி கிரகத்தின் சூரிய நகர்வுபற்றி நமது வானாராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து சொல்லியிருந்ததை அவரிடம் சொன்னேன். அதுதான் அப்படியான முதல் சம்பவம் என்று நினைத்தேன். ஆனால், அதற்கு முன்பே அரபு மொழியில் அது பற்றிக் குறிப்பிட்டிருப்பதாக அவர் சொன்னார். அந்தப் புத்தகத்தின் பெயரைக்கூடக் குறிப்பிட்டார். அதை நான் மறந்துவிட்டேன். ஆனால், அதைப் பற்றிக் குறிப்பு என் வங்கக் குடியிருப்பில் உள்ள கட்டுரையில் இடம்பெற்றிருக்கிறது).

எனினும் ஒருநாள் ஆயிரத்தோரு அராபிய இரவுகள் கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் தொலைநோக்கிகள் பற்றி ஆப்பிள், பாய்களுடன் வெகு சர்வ சாதாரணமான பொருளைப் போல் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்தேன்.

மூன்று இளவரசர்கள் அதிசயப் பொருட்களைத் தேடிச் சென்றார்கள். தேவதை பரிபனோ மூவருக்கும் வெவ்வேறு வடிவிலான பொருட்களைத் தந்தது. முதலாவது இளவரசருக்கு மிக அதிக விலையில் ஒரு பாயைக் கொடுத்தது. அந்தப் பாயின் வேலைப்பாடுக்காக அல்ல; அதன் பறக்கும் சக்திக்காகவே அவ்வளவு தொகையை வசூலித்தது. அந்தப் பாயில் ஏறி உட்கார்ந்தால் நினைத்த இடத்துக்குப் பறந்து சென்றுவிட முடியும்.

இரண்டாவது இளவரசருக்கு ஒரு ஆப்பிளைக் கொடுத்தது. அதை வைத்துத் தொட்டால் எந்தத் தீராத வியாதியும் தீர்ந்துவிடும். மூன்றாவது இளவரசருக்கு ஒரு தொலைநோக்கி தந்தது. ஒரு பக்கமாக வைத்துப் பார்த்தால் இருந்த இடத்திலிருந்தே உலகில் நாம் விரும்பும் எந்தவொரு இடத்தையும் அதன் மூலம் பார்க்க முடியும். மறு பக்கத்தை வைத்துப் பார்த்தால் பொருட்கள் சாதாரணமாகத் தெரியும். இரு பக்கங்களிலும் கண்ணாடி வில்லை பதிக்கப்பட்ட தந்தத்தாலான ஒரு குழாய் என்று அது சொல்லப்பட்டிருக்கிறது.

ஐரோப்பாவில் தொலைநோக்கிகள் பயன்படுத்தப்படுவதற்கு முன்பே எழுதப்பட்ட புத்தகம் அது. அந்தக் காலகட்டத்தில் அரபு நாடுகளில் அது சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருந்திருக்கிறது. அப்போது நாம் அவற்றைப்பற்றி எதுவுமே கேள்விப்பட்டிருக்கவில்லை. ஜான் டோலண்ட் விளக்கமாகக் கூறி வடிவமைத்ததுபோல் அராபிய இரவுகள் கதைகளில் சொல்லப்பட்டிருக்கவில்லை. என்றாலும் அவையும் தொலைநோக்கிகளே. இப்போதும் தொலைநோக்கிகள் பற்றிப் பேசுபவர்களில் எத்தனை பேருக்கு வான் ஆராய்ச்சிகளில் பயன்படும் தொலைநோக்கிகள் பற்றி விளக்கிச் சொல்லமுடியும்.

அரிய கண்டுபிடிப்புகள் அழிவது இயல்பே. இதற்கு நம்மிடையே உதாரணங்களுக்கா பஞ்சம். எகிப்திய மம்மிகள் ஒன்றே போதுமே, அந்த உண்மையைப் புரியவைக்க. நமது காலகட்டத்திலுமேகூட ஜான் டொனால்ட் உருவாக்கிய தொலைநோக்கிகள் மூன்று கண்ணாடி வில்லை வடிவமைப்பு வந்ததும் போதிய கண்ணாடி வில்லைகள் கிடைக்காமல் போனதால் வழக்கொழியத் தொடங்கிவிடவில்லையா? வெடி மருந்து என்பது நவீன கால கண்டுபிடிப்பாகவே நம்பப்படுகிறது. ஆனால், ஒரு கிரேக்க எழுத்தாளரின் படைப்பை வைத்துப் பார்க்கும்போது அலெக்ஸாண்டரின் காலகட்டத்திலேயே வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டது தெரியவரும்.

வங்காளத்தில் இருக்கும்போது இந்தக் கடிதத்தை எழுதியிருந்தால் இது தொடர்பாக நிறைய உதாரணங்களை என்னால் எடுத்துக்காட்டியிருக்கமுடியும். இப்போது சுருக்கமாக நான் சொல்லவிரும்புவது ஒன்றே : ஒரு அறிவியல் அறிவோ, கண்டுபிடிப்போ வழக்கொழிந்துபோய்விட்டதால் அது முன்பு ஒருபோதும் பயன்பாட்டில் இருந்திருக்காது என்று நிச்சயமாக நாம் சொல்ல முடியாது. இதை எதற்குச் சொல்கிறேனென்றால் சனி கிரகம் பற்றி நான் பார்த்த ஓவியத்தை உங்களிடம் விளக்கிச் சொல்லவே. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆறாவது துணைக்கோளை (நிலவை) இனி வரும் காலத்திய வான் ஆராய்ச்சிகளே உறுதிப்படுத்தமுடியும் என்பது உண்மைதான். எனினும் அந்தக் கூற்று வெறும் கற்பனைக் கட்டுக்கதை அல்ல. 

எனக்குத் தெரியவந்த சில அதிசய நிகழ்வுகள் பற்றி உங்களிடம் சொல்லவிரும்புகிறேன். மூன்று வால் வெள்ளிகளின் வருகை, நிலநடுக்கம் பற்றிய தகவல் இவையெல்லாம் அவை நடப்பதற்கு வெகு காலத்துக்கு முன்பே  எனக்குக் கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தப்பட்டிருந்தன. அந்தக் கடிதங்களில் சொல்லியிருந்தது போலவே லாகூரைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. துரதிஷ்டவசமாக அந்தக் கடிதம் வங்காளத்தில் இருக்கிறது. திரு.ஹேஸ்டிங்க்ஸிடம் அந்தக் கடிதத்தின் ஒரு பிரதி இருக்கிறது. என் கையொப்பத்துடன் இருக்கும் அதில் அந்தக் கடிதம் என் கைக்குக் கிடைத்த தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். ஜூன் மாதத்தில் எனக்கு அது கிடைத்தது. செப்டம்பரில் அல்லது ஆகஸ்ட் இறுதிவாக்கில் நிலநடுக்கம் நடந்தது. வரும் 1779 அல்லது 1780 என்று நினைக்கிறேன்.

ஆனால், வால் வெள்ளியின் வருகை தொடர்பாக நான் இதுபோன்ற வேறு இரண்டு கணிப்புகள் பற்றிய நகல்களை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.  அவற்றில் ஒன்று சாமர்ஸெட், பாத்தில் நடந்து உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. நான் படையெடுப்பில் இருந்ததால் என்னால் அதைப் பார்க்க முடிந்திருக்கவில்லை. நான் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்திருந்தால் நிச்சயமாக அதைப் பார்க்க வந்திருப்பேன்.

வரலாறு தொடரும்...வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)