பதிவு செய்த நாள்

03 அக் 2018
11:58

சித்ராக்கா கோவாவில் இருந்து வந்து இறங்கினாள். அம்மாவும் நானும் தான் அழைத்துவரப் போனோம். உள்நாட்டு விமான முனையம் போய் காத்திருந்தோம். அப்படி ஒரு சோர்வோடு வெளிவே வந்தார் அக்கா. அம்மாவுக்குத்தான் மனசே ஆறவில்லை. 'என்னாச்சு, என்னாச்சு?' என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.

ஆனால், அக்கா மிகுந்த தைரியத்துடன் தன் நண்பர்களுக்கு விடைகொடுத்துவிட்டு வந்தார். நாங்கள் ஒரு கால் டாக்ஸி அமர்த்திக்கொண்டு ஏறினோம். டாக்ஸி விமான நிலையத்தைவிட்டு வெளியே வருவதற்குள் பேச ஆரம்பித்தார் அக்கா.

மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்தே, அக்கா இந்தப் பயணத்தை மேற்கொள்வது பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார். அக்கா கல்லூரியில் கடைசி ஆண்டு படிக்கிறார். இயர் டிரிப் என்று இதற்கு தனி அந்தஸ்து உண்டு. ஆரம்பிக்கும்போது 80 பேர் வரை கலந்துகொள்கிறேன் என்று தொடங்கியது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கை குறைந்து 40ஐ தொட்டது.

நாற்பதில் அக்காவும் ஒருவர். மைசூர், தந்தேலி, கோகர்ணா, சிக்மகளூர், கோவா என்று பத்து நாட்கள் டூர். அதில் முதல் ஐந்து நாட்கள் மட்டும் கலந்துகொள்வதாகத்தான் அக்காவின் திட்டம். ஆனால், நண்பர்களின் வற்புறுத்தலில் மொத்த பத்து நாட்களையும் கழித்துவிட்டு வந்திருக்கிறார்.

“காடு, மலை, கடல், டெண்டுன்னு எல்லா இடத்துலேயும் தங்கினோம்மா. ஒருநாளும் நேரத்துக்குச் சாப்பாடு இல்லை. நாலஞ்சு நாள் குளிக்கவே இல்ல. பல நாள் தூக்கமே இல்ல. ராத்திரியெல்லாம் பேசிக்கிட்டே இருந்தோம்.

இதெல்லாம் நடக்கும்னு நம்பவே முடியலை. ஒரு நாள் ஓர் அருவிக்குப் போகலாம்னு திட்டம். ஆனால், அது எத்தனை மணிக்கு திறக்கும்னு தெரியாம, ராத்திரி சீக்கிரமே கிளம்பிட்டோம். போய் சேரும்போது, விடிகாலை மூணு மணி. அருவிக்குப் போற கேட், 6 மணிக்குத்தான் திறப்பாங்கன்னு சொல்லிட்டாங்க.

வேற வழியே இல்ல. அங்கே ஒரு பஸ் டெப்போ இருந்துது. கொண்டுபோன பெட்ஷீட், பேப்பரை எல்லாம் விரிச்சுப் போட்டு அப்படியே படுத்துட்டோம். சொன்னா நம்பமாட்டே, அங்கே பக்கத்துல நிறைய பிச்சை எடுக்கறவங்க. என் ஃப்ரெண்டு ஒருத்தன் போய், அவங்களை கொஞ்சம் தள்ளிக்கச் சொல்லிட்டு, பெட்ஷீட் போட்டு இடம் செஞ்சு கொடுத்தான். அடிச்சுப் போட்ட மாதிரி தூக்கம். காலையில் வழிச்சுப் பார்த்தா, ரோடுல போறவங்க எல்லாம் எங்களை அதிசயமா பாக்கறாங்க.

இன்னொரு இடத்துல கடற்கரை. அதுக்கு ஒரே ஓர் ஒத்தையடிப் பாதை. மணல்ல கால் வெச்சா, அப்படிக் கொதிக்குது. அகதிகள் தலைமேல் சுமையைத் தூக்கிக்கிட்டுப் போறாமாதிரி, தலையில எங்க பெட்டியெல்லாம் தூக்கிக்கிட்டு, அந்த பயங்கரமான சுடுமணல்ல ஓடினோம். ஒரு கிலோமீட்டர் இருக்கும். அந்த ரெசாட்டுக்குள்ள போனா, குளுமையா இருந்துச்சு. அதுக்குப் போறதுக்குள்ள, அப்படி உடம்பு எரிஞ்சு போச்சு.

இன்னொரு நாள், ஒரு மலைமேல இருக்கிற அருவிக்குப் போனோம். பசியான பசி. அங்கே எல்லாம் ரோட்டுக்கடைங்க தான். அதுல பெஸ்டா தெரிஞ்ச ஒரு கடைக்குப் போனோம். பரோட்டா சால்னா, மட்டன் பிரியாணி தான் வெச்சிருந்தாங்க. எல்லோருக்கும் பாக்கறதுக்கே குமட்டிக்கிட்டு வந்துடுச்சு. அவ்வளவு அழுக்கு. வேற வழியில்லாம, அங்கே இருந்த பன்னையெல்லாம் மொத்தமா வாங்கி, ஆளுக்குக் கொஞ்சமா பிச்சுப் பிச்சுத் தின்னோம். நீங்க எவ்வளவு பிரமாதமா சமைச்சுப் போடறீங்கன்னு அப்போதாம்மா புரிஞ்சுது…”

என்று கொஞ்சம் இடைவெளி கொடுத்து, அம்மாவின் கையைப் பற்றிக்கொண்டார் அக்கா. அம்மாவுக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி.

“எல்லாத்தையும்விட சூப்பர் அனுபவம், ஒரு காட்டுக்குள்ள போனதுதான். அங்கே மொபைல் சிக்னலே எடுக்காது. டெண்டுலதான் தங்கினோம். எங்க டூர் ஆர்கனைசர் சொல்றார்… அப்பப்போ சிறுத்தை உறுமுற சத்தம் கேக்கும், பாம்பு ஏதாவது அங்க இங்கே மேயும்…அதெல்லாம் பார்த்து பயந்துடாதீங்க. ஜாலியா இந்த கிளைமேட்டை எஞ்ஜாய் பண்ணுங்க… எங்களுக்குத் தூக்கமே வரல. என்னென்னவோ பூச்சிங்க பறக்குது. சின்னச் சின்ன சத்தங்க. கேம்ப்ஃபைர் தான் வெளிச்சத்துக்கு. லைட்டே கிடையாது. ஆனால், முழு ராத்திரியும் உட்கார்ந்து ஊர்கதையெல்லாம் பேசிக்கிட்டு இருந்தோம். காலையில வெளிச்சம் வந்தபோது, அந்த மலையே அவ்வளவு அழகா இருந்துது.

முதல் நாள் ராத்திரின்னு நினைக்கறேன். எல்லோரும் சாப்பிட்ட பிறகு, ஒரு வாக் போகலாம்னு முடிவு பண்ணோம். டூர் ஆர்கனைசரும் போயிட்டுவாங்க. இது ஒரே ரோடுதான்னு சொன்னார். ஜாலியா நடந்து போய்க்கிட்டே இருந்துட்டோம். ரொம்ப நேரம் ஆகிப் போச்சு. சரி, திரும்பிடலாம்னு நடக்க ஆரம்பிச்சா, நாங்க தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸே கண்ணுல தெரியல. நடக்கறோம், நடக்கறோம்…. நடந்துக்கிட்டே இருக்கோம். பேச்சு சுவாரசியத்துல ரொம்ப தூரம் நடந்துட்டோம். வழியில ஓர் ஆட்டோ இல்ல, கார் இல்ல. விடிகாலை ரெண்டு மணிக்கு வந்து சேர்ந்தோம்.

டைமுக்குத் தூங்க முடியலை. எப்போ டைம் கிடைச்சாலும் தூங்கினோம். என்ன கிடைக்குதோ அதைச் சாப்பிட்டோம். இதையெல்லாம் சாதாரணமா செஞ்சிருக்க முடியாது. நீங்களெல்லாம் கூட வந்திருந்தா, நிச்சயம் பெரிய ரகளையே செஞ்சுருப்போம். நாங்களே எல்லாத்தையும் பார்த்துக்கணுன்னவுடனே, ரொம்ப பொறுப்பு வந்துடுச்சு. எல்லா சிரமங்களையும் சகிச்சுக்கிட்டோம். 

ஆனா, ரெண்டு மூணு மறக்கமுடியாத விஷயங்கள் நடந்துச்சும்மா….”

அம்மாவும் நானும் ஆர்வத்தோடு சித்ரா முகத்தையே பார்த்தோம்.

“நான் நினைச்ச மாதிரி எல்லோரும் இல்லம்மா. கூட வந்த பசங்கள்ல பலபேரோட நான் பேசினதுகூட இல்ல. அஞ்சு ஆண்டுகளா படிச்சிருக்கேன். இந்த டிரிப்லதான் அவங்களோட பேச ஆரம்பிச்சேன். அவ்வளவு நல்லவங்களா இருக்காங்க. என்னை ரொம்ப மதிக்கிறாங்க. என்னைப் பத்தி அவங்களுக்கு எல்லாம் அவ்வளவு மதிப்பு இருக்கு. பல இடங்கள்ல என்னோட பெட்டியை பல பாய்ஸ்தான் தூக்கிக்கிட்டு வந்தாங்க. ஒவ்வொரு இடத்துலேயும், நம்ம காலேஜ் கேர்ள்ஸோட வந்திருக்கோம். கவனமா பார்த்துக்கணும்னு அவ்வளவு அக்கறையா பார்த்துக்கிட்டாங்க. திடீர்னு இத்தனை ஆண்டா இவங்களோட எல்லாம் பேசாம போயிட்டோமேன்னு ரொம்ப வருத்தமா இருந்ததும்மா… ஸோ ஸ்வீட்!”

அக்கா மெய்மறந்து தன்னுடைய உலகத்துக்குள் நகர்ந்து கொண்டிருந்தார். பயணம் சொல்லித்தரும் பாடங்கள் எண்ணற்றவை என்று படித்திருக்கிறேன். அடுத்த இரண்டு மூன்று நாட்களேனும் அக்கா அந்தப் பாடங்களை நிச்சயம் என்னோடு பகிர்ந்துகொள்வார் என்று தோன்றியது. நானே அந்த இடங்களுக்குப் போய்வந்த அனுபவத்தைப் பெறப் போவது நிச்சயம்!

நன்றி : பட்டம் மாணவர் இதழ்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)